Published : 19 Jun 2017 05:25 PM
Last Updated : 19 Jun 2017 05:25 PM

திமுகவின் எதிர்ப்பை மீறி தமிழக சட்டப்பேரவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டது

தமிழக சட்டப்பேரவையில் ஜிஎஸ்டி மசோதா நேற்று நிறை வேறியது. மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை அரசு ஏற்காததால் திமுக எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரியை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்துகிறது. இந்நிலையில், தமிழக சட்டப் பேரவை கூட்டம் தொடங்கிய ஜூன் 14-ம் தேதியன்று, மாநில சரக்கு மற்றும் சேவை வரிக்கான மசோதாவை சட்டப்பேரவையில் அமைச்சர் கே.சி.வீரமணி அறிமுகம் செய்தார்.

இந்த சட்ட மசோதா நேற்று சட்டப்பேரவையில், எரிசக்தி மற்றும் மதுவிலக்குத் துறை மானிய கோரிக்கை விவாத +முடிவில், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, குரல் வாக் கெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டது.

முன்னதாக, இது தொடர்பாக பேசிய திமுக உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், ‘‘ஜிஎஸ்டி மசோதா தொடர்பாக பொது மக்கள், வணிகர்கள் கருத்து களை பெற்று அமல்படுத்த வேண்டும். கடந்த 2006-11-ல் மதிப்புக்கூட்டு வரி அமல்படுத்தப் பட்ட போது, அனைத்து தரப்பின ரின் கருத்துகளை அறிய குழு அமைக்கப்பட்டது. அதன்பின்னரே அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி மூலம், மாணவர்கள் பயன்படுத்தும் பேனா, பென்சில், ரப்பர் ஆகிய வற்றுக்கும் 12 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. செங்கலில் ஒருவகைக்கு 5-ம், மற்றொரு வகைக்கு 12 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது. முதலில் ஜிஎஸ்டி வரியைப் பற்றி புரிந்து, தெரிந்து கொண்ட பின் அமல்படுத்த வேண்டும்’’ என்றார்.

தொடர்ந்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி, ‘‘18 சதவீத வரிக்குள் இருந்த பொருட் களுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப் படுகிறது. இது மக்களுக்கு ஆபத்தானதாகும். வரி விதிப் பிலும், வணிகர்கள் கணக்கு சமர்ப் பிப்பதும் குழப்பமாக உள்ளது. எனவே, 2 ஆண்டுகளுக்கு பரீட்சார்த்த அடிப்படையில் அமல் படுத்தி, வணிகர்களுக்கு பயிற்சி அளித்து பின்னர் அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் வணிகர்கள் தண்டிக்கப்படுவது தடுக்கப்படும்’’ என்றார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ முகமது அபுபக் கரும், ‘‘வணிகர்களை அழைத்து கருத்துகளை கேட்டு அமல்படுத்த வேண்டும்’’ என்றார்.

இறுதியாக பேசிய எதிர்க் கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், ‘‘ஜிஎஸ்டி வரி தொடர்பான மசோ தாவை பேரவை தேர்வுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பி அதன் பின் நிறைவேற்ற வேண்டும். தற்போது ஒத்திவைக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதிலளித்த நிதி யமைச்சர் டி.ஜெயக்குமார், ‘‘ஜிஎஸ்டி வரி அமல் படுத்தப்படுவதால், ஒரு பொருளின் மீது தற்போதுள்ள 5 வகையான வரிகள் இனி இருக்காது. அதேபோல், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரைகள் தான் தற்போது நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. இந்த வரி அமல்படுத்தப்படுவதால் வணிகர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை’’ என்றார்.

வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, மசோதாவை நிறைவேற்றித்தரும்படி கோரி னார். அப்போது மீண்டும் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் மு.க. ஸ்டாலின், ‘‘மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை அரசு நிராகரித்ததால், இதை எதிர்த்து வெளிநடப்பு செய்கிறோம்’’ என அறிவித்தார். தொடர்ந்து, திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். உடனடியாக, குரல் வாக்கெடுப்பு மூலம் ஜிஎஸ்டி மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x