Published : 21 Dec 2016 02:54 PM
Last Updated : 21 Dec 2016 02:54 PM

தலைமைச் செயலர் வீட்டில் வருமான வரி சோதனை: தலைவர்கள் கருத்து

வருமான வரித்துறை சோதனை யைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் பி. ராமமோகன ராவை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

மு.க.ஸ்டாலின் (திமுக பொரு ளாளர்):

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளரின் அலுவல கத்திலும், வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். மணல் வியாபாரி சேகர் ரெட்டியின் வீட்டில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் உட்பட கோடிக்கணக்கில் பணமும், கிலோ கணக்கில் தங்கமும் கைப்பற் றப்பட்டன. சேகர் ரெட்டிக்கு தமிழக அமைச்சர்கள் பலருடன் தொடர்பு இருப்பதாக செய்திகள் வருகின்றன.

ஏற்கெனவே கரூர் அன்புநாதன் வீட்டில் கோடிக்கணக்கான பணம் சிக்கியதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீட்டிலும், சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமிக்கு சொந்தமான இடங்களிலும் வரு மான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில் தலைமைச் செயலாளரின் அலுவல கத்திலும், வீட்டிலும் வருமான வரித் துறையினர் நேற்று சோதனை நடத் தினர். இது தமிழகத்துக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி யுள்ளது.

எனவே, இதுகுறித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளிக்க வேண்டும். தலைமைச் செய லாளர் தானாக முன்வந்து பதவி விலக வேண்டும். இல்லையெனில் முதல்வர் தலையிட்டு புதிய தலை மைச் செயலாளரை நியமிக்க வேண் டும். தமிழக நலன்களைப் புறக் கணித்து தங்கள் சொந்த லாபங் களுக்காக செயல்படும் அதிமுக அரசின் அமைச்சர்கள், அதிகாரிகள், ஆளுங்கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது கடுமையாகவும், வெளிப்படையாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்):

தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளரின் அலுவல கம், சென்னை, ஆந்திரம், கர்நாடகத் தில் உள்ள தலைமைச் செய லாளர் ராமமோகன ராவுக்கு சொந்த மான இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியுள்ள னர். இதில் கோடிக்கணக்கில் பண மும், கிலோ கணக்கில் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சோதனைகளால் தமிழகத்துக் கும், தமிழக மக்களுக்கும் பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.

தலைமைச் செயலாளராக ராம மோகன ராவ் நியமிக்கப்பட்டபோது அதனைக் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அவரை ஒரு மாநிலத்தின் தலைமைச் செய லாளராகவோ, தனி மனித ராகவோ பார்க்க முடியாது. தமிழகத்தில் கடந்த ஐந்தரை ஆண்டுகளில் நடந்த ஊழலுக்கு மையப்புள்ளியாக இருந்தவர் இவர்தான் எனக் கூறப்படு கிறது. எனவே, ஊழல் செய்த அனைவர் மீதும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் புகாருக்கு உள்ளான ராம மோகன ராவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

விஜயகாந்த் (தேமுதிக தலைவர்):

தலைமை செயலகத்திலும், தலை மைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டிலும் வருமான வரித்துறை யினர் சோதனை நடத்தியிருப்பது ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் ஆட்சியாளர் களுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி வீட்டில் சோதனை நடந்தது. அதன் தொடர்ச்சியாக தலைமைச் செயலகத்தில் சோதனை நடந் துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தமிழகம் தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்தச் செயலை குறைகூற விரும்பவில்லை. ஒருகாலத்தில் இந்தியாவிலேயே சிறப்புமிக்க மாநிலமாக இருந்த தமிழகம் இப்போது மற்றவர்கள் எள்ளிநகையாடும் நிலைக்கு சென்றுள்ளது. தமிழகத்தை நிர்வகிக்க நீதி, நேர்மை, நியாயம், துணிவு கொண்ட ஆட்சியாளர்கள் தேவை என்பதையே இந்தச் சம்பவம் கட்டுகிறது.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்):

பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் தலை மைச் செயலாளரின் அறை, வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது. இது தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள தலைகுனிவாகும். அதன் மூலம் பதவியில் நீடிக்கும் தகுதியை ராமமோகன ராவ் இழந்து விடுகிறார். எனவே, உடனடியாக அவரை தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்க வேண் டும். ராமமோகன ராவ் மட்டு மின்றி அவரோடு தொடர்புடைய வர்கள் மீதும் விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.

எம்.எச்.ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி தலைவர்):

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் வீடுகளில் சோதனை நடத்துவதில் மாற்றுக் கருத்து இல்லை. அந்த அடிப்படையில் ராமமோகன ராவ் வீட்டில் சோதனை நடத்தியதை குறை காண முடியாது. ஆனால், மாநிலத்தின் முதல்வர், உள்துறை செயலாளருக்கு தகவல் தெரி விக்காமல் தலைமைச் செயலகத் தில் ராமமோகன ராவ் அறையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது கூட் டாட்சி தத்துவத்தை சிதைக்கும் செய லாகும். ஊழலை ஒழிக்கவே இந்த நடவடிக்கை என்றால் மாநில அர சுக்கு தகவல் தெரிவித்து, ராம மோகன ராவை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து விட்டு இது போன்ற நடவடிக்கையை எடுத்தி ருக்க வேண்டும். சோதனை நடைபெற்ற இடங்களில் துணை ராணுவப் படை குவிக்கப்பட்டதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

தமிழக வாழ்வுரிமை கட்சி யின் தலைவர் தி.வேல் முருகன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலை வர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட் டோர் தலைமைச் செய லாளர் ராமமோகன ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

அதிமுக செய்தி தொடர்பாளர் தீரன்

"திடீரென நடத்தப்பட்ட இந்த வருமான வரி சோதனைக்கு அரசியல் சூழ்ச்சியே காரணம். தமிழக அரசு மத்திய அரசுக்கு சாதகமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது"

அதிமுக செய்தி தொடர்பாளர் ஆவடி குமார்

"கறுப்புப் பணத்தை அழிக்கிறோம் என்று மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த மத்திய அரசு, தற்போது மாநிலத்தை அச்சுறுத்த ஆரம்பித்திருக்கிறது. தமிழக அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தவே இந்த வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளது"

மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

"தமிழக தலைமைச் செயலர் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் அரசியல் சூழ்ச்சி ஏதும் இல்லை"

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x