Published : 08 Sep 2015 03:04 PM
Last Updated : 08 Sep 2015 03:04 PM

தலைநகராக இருந்த கீழடி அழிந்தது எப்படி? - புத்தக காட்சியில் தொல்லியல் ஆய்வாளர் தெரிவித்த புதிய தகவல்

பாண்டிய நாட்டின் முந்தைய தலைநகராக திகழ்ந்த கீழடி அழிந்தது எப்படி? என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.

மதுரை புத்தக காட்சியின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பபாசி தலைவர் மீனாட்சி சோமசுந்தரம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் செ.அமர்ஜோதி முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் தொல்லியல் ஆய்வாளர் சொ.சாந்தலிங்கம் பேசியது: மதுரை அருகே கீழடியில் நடைபெற்றுவரும் அகழ்வாய்வு பணி பற்றி அறிந்திருப்பீர்கள். பாண்டிய நாட்டின் தலைநகராக திகழ்ந்த ஒரு நகரமே மண்ணுக்கடியில் புதையுண்டு கிடக்கிறது. அந்த அகழ்வாய்வில் பெயர் பொறிக்கப்பட்ட 13 பானையோடுகள், யானை தந்தத்தால் ஆன தாயக்கட்டைகள், குஜராத் பகுதியை சேர்ந்த சூதுபவள மணிகள், இரும்பு வேல், தாமிரத்தால் ஆன கண்மை தீட்டும் கம்பி, உறை கிணறு உள்பட 600 பொருட்கள் கிடைத்துள்ளன. இவை எல்லாம் அக்கால நாகரீகத்தை பறைசாற்றுகின்றன.

இவ்வளவு நாகரிகம் மிக்க நகரம் அழிந்தது எப்படி? என்று கேள்வி எழுகிறது. தொல்லியல் ஆய்வாளர் என்ற முறையில் என்னால் ஒன்றை யூகிக்க முடிகிறது. 1300 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, கிபி 1650 முதல் 1700 வரையிலான காலகட்டத்தில் மதுரையை ஆண்ட அரிகேசரி என்ற மன்னன், இன்றைய குருவிக்காரன் சாலை அருகே வைகை ஆற்றில் அணை கட்டி, தண்ணீரை கால்வாய் வெட்டி பாசனத்திற்குக் கொண்டு சென்றுள்ளான். அந்த கால்வாய் கொந்தகை, கீழடி, திருச்சுழி வழியாக வீரசோழன் வரையில் இருந்திருக்கிறது. வைகையில் ஏற்பட்ட பெருவெள்ளம் இந்த கால்வாய் வழியாகப் பாய்ந்து கீழடியை மூழ்கடித்திருக்கும் என்று கருதுகிறோம். ஆய்வு தொடர்ந்தால் தான் உண்மையை கண்டுபிடிக்க முடியும்.

இந்த அகழ்வாய்வுப்பணியை தொடர மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கவும் சம்மதித்துள்ளது. இன்னும் 10 நாட்களில் அகழ்வாய்வுப் பணிகள் முடிவடைந்தாலும்கூட, அடுத்த ஆண்டு ஜனவரியில் மீண்டும் பணிகள் தொடங்கும்” என்றார்.

நிகழ்ச்சியில் பட்டிமன்ற பேச்சாளர் இளசைசுந்தரம் பேசுகையில், “இது நிறைவு விழா அல்ல. நிறைவான விழா. பூக்களைத் தேடித் தேனெடுப்பதில், தேனீக்களுக்கு அயற்சி ஏற்படுவதில்லை. காரணம், அவை அதை வேலையாகச் செய்வதில்லை. விரும்பிச்செய்கின்றன. அதைப்போல புத்தக வாசிப்பை விரும்பிச் செய்தால் உயரலாம். எனவே, தான் பாரதிதாசன் படி படி என்று சொன்னார்” என்றார். அதைத் தொடர்ந்து பேச்சு, ஓவியம், கட்டுரை எழுதுதல் மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகளில் வென்றவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

வாங்கியவர்களை விட பார்த்தவர்களே அதிகம்

புத்தக காட்சி குறித்து பபாசி செயலாளர் கே.எஸ்.புகழேந்தி கூறுகையில், “கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு புத்தக விற்பனையும் அதிகம், பார்வையாளர்களும் அதிகம். வழக்கமான வாசகர்களை தவிர்த்து சுமார் ஒன்றரை லட்சம் பேர் புதிதாக புத்தக காட்சிக்கு வந்துள்ளனர். ஆனால், அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் மட்டுமே புத்தகம் வாங்கியிருக்கிறார்கள். அவர்களையும் புத்தகம் வாங்க வைத்துவிட்டால், மதுரை புத்தக காட்சி வரலாற்றுச் சாதனையைப் படைத்துவிடும்” என்றார்.

“முதின்ஸ் என்ற சிறுமி புத்தக காட்சிக்குத் தினமும் வந்து, ஆர்வமுடன் புத்தகங்களை தேர்வு செய்தாள். இத்தனைக்கும் அவள் படிப்பது ஒரு மெட்ரிக் பள்ளியில். புத்தக காட்சி குழந்தைகளின் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தியிருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்” என்றார் புக்ஸ் பார் சில்ரன் அரங்கு பொறுப்பாளர் ரவி.

பல்கலைக்கழக அரங்குகள் தேவை

அடுத்த ஆண்டு புத்தக காட்சியை மேம்படுத்த ஆலோசனைகளை பதிவு செய்யுமாறு பபாசி அறிவித்திருந்தது. அதன்படி, வாசகர்கள் முக்கியமான யோசனைகளைச் சொல்லியிருந்தார்கள். அவற்றில் சில.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் பதிப்புத்துறை உள்ளது. பல அரிய ஆய்வுக்கட்டுரைகளையும், தகவல்களையும் பதிப்பித்த அந்த பல்கலைக்கழக அரங்குகள் ஒன்று கூட இல்லை. அடுத்த ஆண்டில் பல்கலை அரங்குகளையும் எதிர்பார்க்கிறோம்.

மதுரையில் உலகத் தமிழ்ச்சங்க கட்டிடம் இந்த ஆண்டு திறப்பு விழா காண உள்ளது. அங்கு ஒரு நிரந்தர புத்தக கண்காட்சி அமைக்கப்பட வேண்டும். தமிழ் வளர்ச்சிக்கு அதுதான் சிறந்த வழி.

புத்தகங்களை வழங்க பல அரங்குகளில் பாலீதீன் பைகளை பயன்படுத்துகிறார்கள். அடுத்த ஆண்டாவது இதைத் தவிர்க்க வேண்டும்.

கூட்ட அரங்கில் இருக்கைகள் போதுமானதாக இல்லை. அதை அதிகரிக்க வேண்டும். விழா அழைப்பிதழில் மதுரை புத்தக காட்சிக்கு மேலே ஆங்கிலத்தில் மதுரை புக் பேர் என்று அச்சிடப்பட்டுள்ளது. தமிழை தான் முதலில் போட்டிருக்க வேண்டும். பெண்களிலும் அறிவு ஜீவிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களையும் மேடையேற்ற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x