Published : 16 Apr 2016 12:34 PM
Last Updated : 16 Apr 2016 12:34 PM

தரமான கல்வியை இலவசமாக வழங்குவது அரசின் கடமை: கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு வலியுறுத்தல்

சுடர் தொண்டு நிறுவனம் சார்பில் கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள மக்கள் கல்விப் பறைசாற்றும் விளக்கக் கூட்டம் அந்தியூர் ஒன்றியம் பர்கூரை அடுத்த கொங்காடை மலைக்கிராமத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு சுடர் தொண்டு நிறுவனத்தின் ஆசிரியர் தாமரைச் செல்வன் தலைமை வகித்தார். ஈரோடு இண்டியன் பொதுப்பள்ளி யின் முன்னாள் மாணவ, மாணவிகள் முன்னிலையில், கொங்காடை பள்ளிக்கு நிலத்தை தானமாகக் கொடுத்த விவசாயி ஜடையனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கொங்காடை கிராம கல்வி குழுத்தலைவர் ஜவரையன் பேசும் போது, ‘எங்களது கிராமத்தில் குழந்தை திருமணங்கள் நடப்பதை யும், குழந்தைத் தொழிலாளர்கள் உருவாவதையும் தடுக்க பிளஸ் 2 வரையில் மாணவர்கள் படிக்கும் வகையில் உண்டி - உறைவிடப் பள்ளியை அரசு தொடங்க வேண்டும்’ என்றார்.

தமிழக அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலையொட்டி பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். இதில் தமிழக மக்கள் சார்பில் கல்வி தொடர்பாக அவர்கள் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் குறித்து கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி பேசியதாவது:

ஆயிரம் பேர் வசிக்கும் இக்கிராமத்தில் தொடக்கப் பள்ளியே இப்போதுதான் திறக்கப் பட்டிருக்கிறது. இன்னும் ஒரு பட்டதாரி கூட உருவாகவில்லை. ஒரு அரசு ஊழியர் கூட உருவாகவில்லை. தொடக்கக் கல்வியை முடிக்கும் குழந்தைகள் மேற்கொண்டு படிப்பதற்கு பக்கத்தில் உயர்நிலைப் பள்ளி இல்லை. மலைவாழ் மக்களையும் இந்த நாட்டின் குடிமக்களாக நாம் கருதவில்லையோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. இங்கு வெளியிடப்படும் மக்கள் கல்விப் பறைசாற்ற அறிக்கையில் மலைவாழ் பழங்குடியினக் குழந்தைகளுக்கு ஆட்சியாளர்கள் செய்யவேண்டியது என்ன என்பது எழுதப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மூத்த கல்வியாளர்கள் வே.வசந்திதேவி, ச,சீ,இராசகோபாலன் மற்றும் பல கல்வியாளர்களால் உருவாக்கப்பட்ட இக்கல்வி அறிக்கை தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நேரில் கொடுக்கப்பட்டுள்ளது. கல்வியை அனைவருக்கும் தரமான நிலையில், பாகுபாடில்லாமல் கட்டணம் இல்லாமல் வழங்கவேண்டியது ஒரு மக்களாட்சி அரசாங்கத்தின் கடமை. கல்வியை விற்பனைப் பண்டமாக மாற்றியது குழந்தைகளுக்கு செய்த துரோகம், கல்வி வணிகம் இன்று கருப்புப் பண உற்பத்திக்கு வழிவகுக்கும் அளவிற்கு நடைபெறுகிறது.

இந்த நிலைமைகளை மாற்றுவதற்கான கோரிக்கைகளை இந்த மக்கள் கல்விப் பறைசாற்றத்தில் இடம் பெற்றுள்ளன. அனைத்து அரசியல் கட்சிகளும் இக் கோரிக்கைகளை நிறைவேற்ற மக்களிடம் உறுதி யளிக்கவேண்டும் என்பதற்காகவே கல்வி அறிக்கை பற்றிய விளக்கக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் ஊர்மக்கள், சுடர் நிறுவன ஆசிரியர்கள் சி.சதீஸ், ஏ.கேசவன், எம்.மாதப்பன், எஸ்.பெரியசாமி, எல்.நித்தியானந்தம், ரஞ்சித், கே.திருப்பதி, சோமசுந்தரம், ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்வி தொடர்பான 10 கோரிக்கைகள்

மக்கள் கல்விப் பறைசாற்றத்தில் 2016 சட்டமன்றத் தேர்தல் களத்தில் தமிழக அரசியல் கட்சிகளுக்கு கல்விக் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

கல்வியில் வணிகமயத்தை ஒழித்தல், ஏற்றத்தாழ்வு இல்லாத கல்வி வழங்க பொதுப்பள்ளி முறையை உருவாக்குதல், தனியார் பள்ளிகளைப் பொதுப்பள்ளிகளாக அறிவித்து கட்டணமில்லாமல் கல்வி வழங்குதல், அருகமைப் பள்ளி முறையை நடைமுறைப்படுத்தி குழந்தை நேயமிக்க, சமத்துவக் கல்வி வழங்குதல், குருட்டு மனப்பாடம் மதிப்பெண் போட்டியை ஒழிக்க பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பிற மாநிலங்களில் உள்ளது போல் பருவத்தேர்வு முறையை நடைமுறைப்படுத்துதல், முழுமையாக தாய்மொழி வழிக் கல்வியை நடைமுறைப்ப்டுத்த சட்டம் இயற்றுதல், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீட்டெடுத்தல் ஆகிய கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் வெளியிடவேண்டும்.

மேலும், அரசுப்பள்ளிகளை மேம்படுத்த கல்விக்கான நிதி ஒதுக்கீடுகளை அதிகரித்தல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஆட்சியாளர்களின் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க சட்டம் இயற்றுதல், கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்தியுள்ள வசதிகளை நிறைவேற்றாத தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்துதல் ஆகிய கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் ஏற்று வருகின்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் வெளியிடவேண்டும் என்பதை இம்மக்கள் மக்கள் கல்வி பறைசாற்றம் விளக்கவுரையில் வலியுறுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x