Published : 23 May 2016 12:13 PM
Last Updated : 23 May 2016 12:13 PM

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜெயலலிதா; அமைச்சர்கள் 28 பேரும் பதவியேற்பு

தமிழக முதல்வராக, 6-வது முறையாக ஜெயலலிதா பதவியேற்றார். ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

பின்னர் முதல்வராக பதவியேற்றதற்காக கையெழுத்திட்டார்.

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்த விழாவில், பகல் 12.08 மணிக்கு முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார்.

முன்னதாக நாட்டுப் பண் சுருக்கமாக இசைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதாவைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் ஸ்ரீநிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், பி.சரோஜா, கே.சி.கருப்பண்ணன், எம்.சி.சம்பத், ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், டி.ஜெயக்குமார் ஆகிய 14 பேரும் கூட்டாக அமைச்சர்களாக பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து கொண்டனர்.

அடுத்ததாக கே.சி.வீரமணி, கே.டி.ராஜேந்திர பாலாஜி, வி.எம்.ராஜலட்சுமி, மருத்துவர் மணிகண்டன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.வளர்மதி ஆகியோர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து கொண்டனர்.

விழாவின் நிறைவாக நாட்டுப்பண் முழுமையாக இசைக்கப்பட்டது.

விழா முடிந்தவுடன் அமைச்சர்கள் அனைவரும் முதல்வர் ஜெயலலிதா, ஆளுநர் ரோசய்யாவுடன் அமர்ந்து குழு புகைப்படம் ஒன்று எடுத்துக் கொண்டனர்.



மு.க.ஸ்டாலின் பங்கேற்பு:

ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் திமுக பொருளாளரும் கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அவருடன், திமுக எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, சேகர்பாபு, வாகை.சந்திரசேகர், மா.சுப்பிரமணியம் ஆகியோரும் ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர். விரிவான செய்திக்கு: >| ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு |

மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

பிரதமர் வாழ்த்து:

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தின் வளர்ச்சிக்காக புதிய அரசுடன் மத்திய அரசு இணைந்து செயல்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

5 கோப்புகளில் கையெழுத்து:

பதவியேற்பு விழா முடிந்தவுடன், தலைமைச் செயலகத்துக்குச் சென்று முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஜெயலலிதா. பின்னர், 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 1. கூட்டுறவு வங்கிகளிடமிருந்து 31.3.2016 வரை சிறு, குறு விவசாயிகளால் பெறப்பட்ட பயிர்க்கடன், நடுத்தரகாலக் கடன் மற்றும் நீண்டகாலக் கடன் ஆகிய அனைத்தையும் தள்ளுபடி. 2.100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும். 3. படித்த ஏழைப்பெண்களுக்கு திருமண நிதி உதவியாக 25000 ரூபாய் நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும் தங்கம் 4 கிராம் என்பதிலிருந்து ஒரு சவரன் அதாவது 8 கிராம் என உயர்த்தி வழங்ககப்படும். 4. கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது கட்டணமில்லாமல் வழங்கப்படும் மின்சாரத்தை 200 யூனிட்கள் எனவும் விசைத்தறிக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரத்தை 750 யூனிட்டுகளாக உயர்த்தியும் வழங்கப்படும். 5. டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபானக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் இதுவரை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கிவரும் நிலையில் 24.5.2016 முதல் சில்லறை விற்பனை மதுபானக்கடைகள் மற்றும் பார்கள் நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை இயங்கும் ஆகிய கோப்புகளில் கையெழுத்திட்டார். முழுமையான செய்திக்கு:> | விவசாய கடன் தள்ளுபடி, டாஸ்மாக் நேரம் குறைப்பு: முதல்வர் ஜெயலலிதா முதல் கையெழுத்திட்ட 5 கோப்புகள் |

134 இடங்களில் வெற்றி:

தமிழகத்தின் 14-வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 22-ம் தேதியுடன் (நேற்று) முடிந்தது. புதிய சட்டப்பேரவையை அமைப்பதற்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான சட்டப்பேரவை பொதுத்தேர்தல் கடந்த 16-ம் தேதி நடந்தது. 232 தொகுதிகளில் நடந்த தேர்தலில், அதிமுக 134 இடங்களையும், திமுக கூட்டணி 98 இடங்களையும் பிடித்தது.

12 பேருக்கு மீண்டும் வாய்ப்பு:

இதில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, செல்லூர் கே.ராஜூ, பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட ஏற்கெனவே பதவியில் உள்ளவர்கள் 12 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி. சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x