Published : 12 Jan 2017 11:02 AM
Last Updated : 12 Jan 2017 11:02 AM

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்முறையாக தமிழக சட்டப்பேரவை 23-ம் தேதி கூடுகிறது: ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரையாற்றுகிறார்

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் வரும் 23-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடக்கும் முதல்கூட்டம் என்பதால், பேரவையில் அவரது மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

ஆண்டுதோறும் சட்டப்பேரவை யின் முதல் கூட்டத் தொடர், ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். இதன்படி, சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. இது தொடர்பாக சட்டப்பேரவைச் செயலாளர் அ.மு.பி.ஜமாலுதீன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அரசமைப்புச் சட்டப்பிரிவு 174(1)ன் கீழ், தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தை, ஜனவரி 23-ம் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் தமிழக ஆளுநர் கூட்டியுள்ளார். அன்று காலை 10 மணிக்கு பேரவையில் ஆளுநர் உரையாற்றுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பேரவையில் உரையாற்ற வரும் ஆளுநர் வித்யாசாகர் ராவை சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேரவை வாயிலில் வரவேற்று அழைத்து வருகின்றனர். அதன்பின், பேரவையில் ஆளுநர் உரையாற்றுவார். அவரது உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் வாசிப்பார். அன்றுடன் முதல் நாள் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.

அலுவல் ஆய்வுக் கூட்டம்

அதன்பின், பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடும். அதில், பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும். அதன்படி பேரவை நிகழ்ச்சிகள் நடக்கும்.

இது தொடர்பாக தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறியதாவது:

ஜனவரி 23-ம் தேதி ஆளுநர் உரை முடியும். மறுநாள் 24-ம் தேதி பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பத்திரிகையாளர் சோ உள்ளிட்டவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். அத்துடன் அவை ஒத்திவைக்கப்படும்.

அதைத் தொடர்ந்து, 25-ம் தேதி முதல் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கலாம். 26-ம் தேதி குடியரசு தின விடுமுறை. 27, 28 தேதிகளிலும் விவாதம் நடக்கும். விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் உரையாற்றுவார் என தெரிகிறது.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெயலலிதா இல்லாத கூட்டம்

முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக செப்டம்பர் 22-ம் தேதி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அதன்பின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடக்கும் சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இதுவாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x