Published : 13 Feb 2017 11:44 AM
Last Updated : 13 Feb 2017 11:44 AM

தமிழக ஆளுநர் செயல்பாட்டில் எந்த உள்நோக்கமும் இல்லை: வெங்கய்ய நாயுடு

தமிழக முதல்வராக வி.கே. சசிகலாவை அழைக்க, ஆளுநர் வித்யாசாகர் ராவ் காலம் எடுத்துக் கொண்டதில் எந்த உள் நோக்கமும் இல்லை என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.

தமிழக ஆளுநரின் முடிவுக்கு பின்னணியில் யாரும் இல்லை என்றும், தமிழக முதல்வர் பதவி காலியாக இல்லை ஒரு முதல்வர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

முன்னதாக ஆட்சி அமைக்க தேவையான எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும், ஆளுநர் தன்னை பதவி ஏற்க அழைக்க தாமதம் ஏற்படுத்துவற்கு ஏன்? என்று, அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதனை தொடர்ந்து தமிழக ஆளுநர் நடவடிக்கையை பல்வேறு அரசியல் தலைவர்கள் விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய அமைச்சர் ’தி இந்து’விடம் (ஆங்கிலம்) கூறும்போது, "இந்திய அரசியலமைப்பின்படி ஒரு நிலையான அரசை வழங்குவது ஆளுநரின் கடமையாகும். இது தொடர்பாக சட்டபூர்வ ஆலோசனையிலும் ஆளுநர் ஈடுபட்டுள்ளார்.

ஆளுநர் பல்வேறு பிரச்சினைகளை கையாண்டு வருகிறார். அதிமுக கட்சி ஒரு வாதத்தை முன் வைக்கிறது. முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஒரு வாதத்தை முன் வைக்கிறார். ராஜினாமா செய்த முதல்வர் தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாகவும் கூறியுள்ளார். விரைவில் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வர இருக்கிறது. எனவே இதை எல்லாம் ஆளுநர் கவனத்தில் கொண்டு சட்டரீதியாக பரிசிலிக்க வேண்டும். முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவியும் இதே போன்ற பிரச்சினையை எதிர் கொண்டார்.

ஆளுநர் எந்த பாகுபாடு இல்லாமல் செயல்பட்டு வருகிறார். ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் முடிவை வரவேற்கிறேன்" என்றார்.

பாஜகவுக்கு எந்த ஆதாயமும் இல்லை

அவர் மேலும் கூறும்போது, "குழம்பிய தண்ணிரில் பாஜக மீன் பிடிக்கப் பார்கிறது போன்ற தேவையற்ற குற்றச்சாட்டுகள் பாஜக மீது சுமத்துகின்றனர். பாஜகவுக்கு தமிழக சட்டமன்றத்தில் எந்த உறுப்பினர்களும் இல்லை. திமுக மற்றும் காங்கிரஸுடன் எந்தக் கூட்டணியும் இல்லை. தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பதால் பாஜகவுக்கு எந்த ஆதாயமும் இல்லை.

தமிழகத்தில் நிலவும் அரசியல் கொந்தளிப்பை தீர்க்க அதிமுக தலைவர்களால் மட்டுமே முடியும். அதிமுக உடைய வேண்டும் என்று பாஜக எதிர்பார்க்கவில்லை. பாஜக அதிமுகவின் நலம் விரும்பியாகவே இருந்துள்ளது. அதிமுகவும் மத்திய அரசின் நலம் விரும்பியாக இருந்திருக்கிறது. எனவே யாருடன் வேண்டுமானலும் மத்திய அரசு இணைந்து செயல்பட தயாராக உள்ளது"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x