Published : 11 Feb 2017 08:11 AM
Last Updated : 11 Feb 2017 08:11 AM

தமிழக அரசியல், சட்டம் ஒழுங்கு நிலை குறித்து மத்திய அரசிடம் ஆளுநர் அறிக்கை தாக்கல்? - அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடிப்பு

தமிழக அரசியல் சூழ்நிலை குறித்தும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் மத்திய அரசிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் 3 பக்க அறிக்கை தாக்கல் செய்ததாக நேற்றிரவு தகவல் வெளியானது. தொலைக்காட்சி செய்தி சேனல்களில் இதுதொடர்பாக செய்திகள் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ஆளுநர் மாளிகை அந்தச் செய்தியை மறுத்துவிட்டதால், அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெய லலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அன்று இரவே முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அதன்பிறகு, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தால் முன்மொழியப்பட்டு, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா டிசம்பர் 31-ல் பொறுப்பேற்றார். ஒரு மாதத்துக்கு மேலாக எந்த குழப்பமும் இல்லாமல் ஆட்சியும், கட்சியும் சென்றுகொண்டிருந்தது.

இதற்கிடையில், ‘முதல்வர் – பொதுச் செயலாளர் ஆகிய இரு பதவிகளும் ஒருவரிடமே இருக்க வேண்டும்’ என்ற குரல், அதிமுக வில் வலுக்கத் தொடங்கியது. சசிகலா முதல்வராவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்தன. முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் 5-ம் தேதி திடீரென ராஜினாமா செய்தார். அன்று நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில், சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வானார். முதல்வர் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடு களும் தொடங்கின. ஆளுநர் வித்யாசாகர் ராவின் சென்னை வருகை தாமதமானதால், பதவி யேற்பும் தாமதமானது.

இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி இரவு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென ஜெயலலிதா நினைவிடத்துக்குப் போய் மவுனமாக தியானத்தில் அமர்ந்ததும், ‘கட்டாயப்படுத்தி தான் என்னிடம் ராஜினாமா கடிதம் பெற்றனர்’ என்று கூறியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத் தின் கவனம் ஓபிஎஸ் பக்கம் திரும்பியது.

கட்சி நிர்வாகிகள் ஒவ்வொரு வராக அவர் பக்கம் வரத் தொடங்கினர். 5 எம்எல்ஏக்களும் அவரது அணிக்கு வந்தனர். இதற்கிடையில், சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் உள்ளிட்ட 2 இடங்களில் உள்ள சொகுசு ஹோட்டல்களில் தங்க வைக்கப் பட்டனர்.

அதிகாரிகளுடன் ஆலோசனை

அடுத்தடுத்து பரபரப்பு திருப் பங்கள் நடந்துகொண்டிருந்த நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று முன்தினம் மாலை சென்னை வந்தார். முதலில் அவரைச் சந்தித்த முதல்வர் ஓ.பன் னீர்செல்வம், சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதாக கூறி, வாய்ப்பு கேட்டு மனு அளித்தார். பிறகு, ஆளுநரைச் சந்தித்த சசிகலா, எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இரவுவரை ஆளுநர் மாளிகையில் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. இந்நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபியான டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ், நுண்ணறிவுப் பிரிவு கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன் உள்ளிட்டோர் நேற்று காலை 11.45 மணி அளவில் ஆளுநர் மாளிகைக்கு சென்றனர். அங்கு ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் ஆலோசனை நடத்தினர்.

தமிழக நிர்வாகம், சட்டம் ஒழுங்கு நிலை, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் புகார் மீதான நடவடிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகள், எம்எல்ஏக்களின் இருப்பிடம் ஆகியவை தொடர்பாக அதிகாரிகளிடம் ஆளுநர் கேட்டறிந்தார். இந்த சந்திப்பு 50 நிமிடங்கள் நீடித்தது.

இதற்கிடையில் இரு தரப்பு நிர்வாகிகளும் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள், தகவல்களை செய்தியாளர்களுக்கு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

நேற்று இரவு 7.30 மணி அளவில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளை பொதுச் செயலாளர் சசிகலா சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘‘எம்ஜிஆருக்குப் பிறகு, ஜெயலலிதாவின் வழிகாட்டு தலில், நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சி என்ற பெயரை அதிமுக பெற்றது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும், ஜனநாய கத்தையும் ஆளுநர் காப்பாற்றுவார் என நம்புகிறோம். பொறுத்திருந்து பார்ப்போம்’’ என்றார்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது, ‘‘எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, கோடிக்கணக்கான விழுதுகள் தாங்கியுள்ள ஆலமரமாக அதிமுகவை ஜெயலலிதா உருவாக்கியுள்ளார். பல சோதனைகள், வேதனைகளைத் தாண்டி, தனது கடும் உழைப்பால் இந்த இயக்கத்தை ஒன்றரை கோடிக்கும் அதிகமான தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக, யார் வந்தாலும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக மாற்றியுள்ளார். அவர் கஷ்டப்பட்டு வளர்த்த இந்த இயக்கத்தை யாரும், எந்த சுயநல சக்திகளும் கைப்பற்ற முடியாது. கைப்பற்றவும் விடமாட்டோம். இது அதிமுக அடிப்படை தொண்டர்களின் சொத்து. இதை யாருடைய குடும்ப சொத்தாகவும் மாற தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் அனுமதிக்க மாட்டோம். கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற நினைப்பவர்களின் கனவு பகல் கனவாகவே முடியும். மக்கள் யாரை விரும்புகிறார்களோ, அவர்களிடமே கட்சியையும் ஆட்சி யையும் கொடுக்க மக்களே எழுந்து நின்று ஒருமித்த கருத்தோடு மாபெரும் அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்’’ என்றார்.

இதற்கிடையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவும் தங்கள் தரப்பினருடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். எம்எல்ஏக்களின் ஆதரவை அதிகரிப்பது தொடர்பாக முதல்வர் ஓபிஎஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சசிகலாவும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அதிமுக எம்.பி.க்களுடன் ஆலோ சனை நடத்தி வருகிறார். சசிகலா தரப்பின் பிடியில் சிக்காத மேலும் சில எம்எல்ஏக்கள் இன்று முதல்வர் பன்னீர்செல்வம் பக்கம் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், தமிழக அரசியல் நிலவரம், சட்டம் ஒழுங்கு நிலை, சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு போன்ற விவரங்களுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்றிரவு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு 3 பக்க அறிக்கை அனுப்பியதாக செய்திகள் வெளியாயின. தொலைக்காட்சி செய்தி சேனல்கள் இந்த செய்தியை பரபரப்பாக ஒளிபரப்பின. அதில், ‘தற்போதுள்ள சூழ்நிலையில் ஆட்சி அமைக்க சசிகலாவை அழைக்க இயலாது’ என ஆளுநர் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக செய்தி சேனல்கள் கூறின. ஆனால், ஆளுநர் மாளிகை இந்தச் செய்தியை நேற்றிரவே திட்டவட்டமாக மறுத்துவிட்டது. ‘‘மத்திய உள்துறை அமைச்சகத்துக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ எந்த அறிக்கையும் ஆளுநர் அனுப்பவில்லை’’ என்று ஆளுநர் மாளிகை நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் தெரி விக்கப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x