Last Updated : 13 May, 2017 05:42 PM

 

Published : 13 May 2017 05:42 PM
Last Updated : 13 May 2017 05:42 PM

தமிழக அரசியல் களம்: ரஜினி தர்பாரில் நடக்கும் மாஸ்டர் பிளான்!

ஏற்கெனவே ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் தேதியை மாற்றினார் ரஜினி. தனித்தனியாக ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதில் சிரமம் இருக்கிறது. எனவே மாவட்ட வாரியாக ரசிகர்களை வரவழைத்து புகைப்படம் எடுப்பது எளிதாக இருக்கும் என்று திட்டம் மாற்றிக் கொள்ளப்பட்டிருக்கிறது என்று அதற்கு பதில் விளக்கம் ரஜினி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து மாவட்டத்திற்கு 500 பேர் வீதம் ரஜினி மே 10-ம்தேதி முதல் ரசிகர்களை சந்திப்பார். தனித்தனியாக அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பும் ரசிகர்கள் தலைமை மன்றம் கொடுக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அதையடுத்து ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் விண்ணப்பங்களை மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகளே வாங்கி ரசிகர்களுக்கு விநியோகம் செய்ய ஆரம்பித்தனர்.

இதன் மூலம் 32 மாவட்டங்களை 32 நாட்கள் சந்திப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் வேலூர் மாவட்ட ரசிகர் மன்ற தலைவரை ரஜினியே நியமிக்க ரசிகர்கள் மத்தியில் சீட்டியொலியும், கரவொலியும் பறந்தது. இதுவரை மாவட்ட தலைவர்களை அகில இந்திய ரசிகர் மன்ற தலைமை நிர்வாகிகள்தான் நியமித்து வந்தார்கள். இந்த முறை ரஜினியே நேரடியாக செய்தது புதுமையிலும் புதுமை. இதுவே அவர் அரசியலுக்கு வருவதற்கான முதல் தொடக்கம் என்றெல்லாம் ரசிகர்கள் மத்தியில் இடைவிடாத பேச்சு தொடங்கியது. அதுவும் தவிர எந்தெந்த மாவட்டங்களில் எல்லாம் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள் இல்லையோ அங்கெல்லாம் அடுத்த கட்டமாக உள்ள நிர்வாகிகள் தங்களையும் ரஜினி அழைப்பார்; மாவட்ட தலைவர் பொறுப்புக்கு மகுடம் சூட்டுவார் என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கியது.

ஆனால் பிறகும் அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக 10-ம் தேதி நடக்க இருந்த ரஜினி- ரசிகர் புகைப்பட செஷன் 15-ம் தேதிக்கு தள்ளிப் போனது.

இந்த முதல்கட்ட சந்திப்பில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளை ரஜினி சந்திப்பார். இதில் கலந்து கொள்பவர்களுக்கு அடையாள டோக்கனும் வழங்கப்பட்டிருக்கிறது. 5 நாட்கள் நடக்கும் இந்த சந்திப்பை அடுத்து இரண்டாம் கட்டமாக மாவட்ட வாரியாக ரசிகர்கள் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஷயத்தை ரஜினி ரசிகர்கள் அல்லாதோர் தரப்பு எப்படிப் பார்க்கிறது என்பதை விட அறிவார்ந்த உலக வட்டாரம் இதை கேலிக்கூத்தாகவே பார்க்கிறது.

'ரஜினி ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் அந்தப் படம் வியாபார ரீதியாக சக்ஸஸ் ஆக வேண்டுமே என்ற பதட்டம் தொற்றிக் கொள்ளுவது வாடிக்கை. அதற்காக ரஜினி ரசிகர்கள் மத்தியில் ஏதாவது ஒரு பரபரப்பை உண்டு பண்ணுவதும் வழக்கம்தான். இந்த முறை ஜெயலலிதா மறைவு, கருணாநிதி செயல்பாடின்மை, தமிழக அரசியலில் வெற்றிடம், ஆட்சி அதிகாரத்தில் தடியெடுத்தவர் எல்லாம் அதிகார மையம் என்கிற நிலை. இதற்கேற்ப தமிழக பாஜகவின் அடுத்தடுத்த அழைப்பு. ரஜினி குறித்து அவர்கள் கொளுத்திப் போடும் பஞ்ச் டயலாக். லேட்டஸ்ட்டாக நக்மாவின் கமெண்ட்!' எல்லாம் சேர்ந்து அவரின் '2.0' பட வசூலுக்கு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது என்னவோ உண்மை. ஆனால் அவர் நிச்சயம் எப்போதும் போல் அரசியலுக்கு வரப் போவதில்லை. மறுபடியும் இந்த ரசிகர்கள் அவரை நம்பி பைத்தியம் பிடித்துத்தான் அலையப்போகிறார்கள்!' என தெரிவிக்கிறார் அறிவுஜீவி இலக்கிய வட்டாரத்தை சேர்ந்த ஒருவர்.

ஆனால் அரசியல் விமர்சகர்களின் பார்வையோ இதில் வேறுபட்ட விதமாகவே இருக்கிறது.

கோவையை சேர்ந்த சீனியர் அதிமுக பிரமுகர் ஒருவர் கூறுகிறார். 'தமிழகத்தைப் பொறுத்தவரை சிந்தனாவாதிகள், அறிவுலகவாதிகள் எல்லாம் ஆண்ட காலம் மலையேறி விட்டது. அண்ணாதுரையின் அடுக்குமொழி நாடகபாணி வசனம் எப்படி மக்களை ஈர்க்க, அதையே தன் பிம்பமாக கொண்டார் கருணாநிதி. அவர் ஆட்சிக்கு வரவே எம்ஜிஆர் என்கிற நடிக சக்தியின் ஆதரவு தேவையாக இருந்தது. அண்ணாதுரை காலத்திலேயே எம்ஜிஆருக்கான கூட்டம் ஒரு பக்கம் திமுகவிற்கு பெரும் பலம் சேர்த்தது. ஆக, 1970 ஆம் ஆண்டு தொடங்கி நாடகபாணி வசனமும், நடிகர்களின் வரவுமே தமிழக அரசியலை தீர்மானித்து வந்திருக்கிறது.

அந்த வகையில் அதிமுக என்பது நட்சத்திர அந்தஸ்துள்ள கட்சியாகவே இருக்கிறது. அதுதான் எம்ஜிஆருக்கு பின் ஜெயலலிதாவை சுடர்விடவும் செய்தது. அப்படிப்பட்ட நட்சத்திர கட்சி தற்போது மக்கள் செல்வாக்கு பெற்ற நட்சத்திரம் இல்லாமல் திண்டாடுவதுதான் தற்போதைய நிலை. அதை உடைக்க ரஜினியோ, அஜித்தோ வந்தாக வேண்டிய நிலை. அஜித்துக்கு இளைஞர்கள் பட்டாளம் பெரிதாக இருக்கிறது. ரஜினிக்கோ இளைஞர் முதல் பெரியவர்கள் வரை உள்ளார்கள். அதை விட மேலாக பெண்கள் ஓட்டு என்பது இன்றைக்கும் பந்தயக் குதிரையாய் இருக்கும் ரஜினிக்குத்தான். அவருக்கு 1996 வாய்ஸ் கொடுத்ததோடு அரசியல் செல்வாக்கு முடிந்து விட்டது என்று சொல்பவர்கள், இன்றைக்கு வரை அவர் சினிமா ரேஸில் முதலாவதாக ஓடிக் கொண்டுதான் இருக்கிறார் என்பதை கவனிக்க வேண்டும்.

அவர் வாய்ஸ் கொடுத்தது என்பது வேறு. அரசியலுக்குள் நேரடியாக நுழைவது என்பது வேறு. புதிய கட்சி ஆரம்பித்து தலைவராவது என்பது வேறு. 1996க்கு பின் அவரது வாய்ஸ் எடுபடவில்லை. எடுபடாது. அடுத்தது ஏதாவது ஒரு கட்சிக்குள் நுழைவது. அது பாஜகவாக இருக்கலாம்; அதிமுகவின் தலைமைப் பொறுப்பாக கூட இருக்கலாம். அதற்கு எந்த அளவுக்கு சக்தி இருக்கிறதோ இல்லையோ புதிய கட்சி என்பது அவருக்கேயானதாக இருக்கும். அதில்தான் அவரின் வெற்றி அடங்கியிருக்கிறது. இப்போது ரஜினி ரசிகர்களை சந்திப்பதில் இப்படிப்பட்ட நோக்கங்கள் இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. தவிர இப்போதைக்கு தமிழக அரசியலில் சூழ்ந்துள்ள கருமேகத்தை ரஜினி போன்றவர்கள் வந்து சரிகட்டுவதுதான் வழி. இல்லாவிட்டால் இந்த அரசியல் போக்கு ஸ்திரத்தன்மையில்லாமலே இருக்கும்!' என்கிறார்.

திமுகவைப் பொறுத்தவரை பெரும்பாலான பிரமுகர்கள் ரஜினிக்கு 1996 ஆம் ஆண்டுடனே அரசியல் வாய்ஸ் முடிந்து விட்டது. அது எடுபடவே படாது என்கிறார்கள். ஆனால் நுட்பமாக தமிழக அரசியலை கண்காணிக்கும் உடன்பிறப்புகள் கருத்தோ வேறுமாதிரியாக உள்ளது. அதைப்பற்றி ஒரு பிரமுகர் இப்படிக்கூறுகிறார்:

'தமிழக மக்கள் தங்களை தெரிந்தவர்களுக்கு ஓட்டுப்போடுவதை விட, தாங்கள் அறிந்தவர்களுக்கு ஓட்டுப் போடுவதில் மட்டும் தெளிவாக இருக்கிறார்கள். அப்படி பார்த்தால் சினிமா கதாநாயகர்களுக்கு மட்டும்தான் இந்த சக்தி இருக்கிறது. அதனால்தான் தமிழ்நாட்டின் சினிமா வரலாற்றில் இரண்டு படம் கதாநாயகனாக நடித்துவிட்டால் கூட ஒரு நடிகன் அரசியலில் குதித்து விடுகிறார். அதில் எதிலும் சிக்காதவராக இருக்கும் ரஜினிக்கு அதுவே அரசியல் ஆற்றலாக மாறியிருக்கிறது. அவருக்கு அரசியல் ஆசை இல்லை என்று சொல்ல முடியாது. அப்படி இருந்திருந்தால் 1996ல் திமுக-தமாகாவுக்கும், அதைத் தொடர்ந்து பாஜகவுக்கும் சாதகமாக வாய்ஸ் கொடுத்திருக்க மாட்டார். அப்புறமும் அரசியலே பேசியிருக்க மாட்டார்.

ரஜினி ஒரு பக்கம் ஜெயலலிதாவிற்கு பாதகம் நினையாதவராக இருந்தார். இன்னொரு பக்கம் கருணாநிதி மீது மதிப்பு வைத்திருந்தவராக இருந்தார். இது கூட ரஜினியின் அரசியல் பிரவேசத்தை தள்ளி வைத்திருக்க வேண்டும் என்பதே எங்கள் பார்வையாக இருக்கிறது. இப்போது அந்த இரண்டு தலைவர்களில் ஒரு தலைவர் உயிருடன் இல்லை. இன்னொரு தலைவர் செயலில் இல்லை. இப்படியிருக்க மரியாதைக்குரிய தலைவரின் மகன் முடிசூட்டிக் கொள்வதற்காக தன் அரசியல் பிரவேசத்தை விட்டுக் கொடுப்பார் என்றும் தோன்றவில்லை. இப்போது அவர் ரசிகர்களை சந்திப்பதும், புது, புதுசாக செயலில் இறங்குவதும் அரசியல் ஒத்திகையே தவிர மற்ற காலங்களை போல பட விற்பனைக்கான களமாக நாங்கள் பார்க்கவில்லை.

எப்படிப் பார்த்தாலும் பாஜக குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக வெயிட் பண்ணுகிறது. அது முடிந்தவுடன் தமிழக சட்டப்பேரவை கலைப்பாகத்தான் இருக்கும். அப்படி நடந்தால் உடனே தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்து விடும். அதில் ரஜினியின் நிலைப்பாடு பாஜக பக்கம் போவதாக இருப்பதை விட புதிய கட்சி ஆரம்பிப்பது. பாஜவுக்கு கணிசமான தொகுதிகளை கொடுத்து கூட்டணி ஏற்படுத்துவது. ஆந்திராவில் ராமாராவ் ஏற்படுத்தியது போல் கட்சி ஆரம்பித்தவுடன் ஆட்சியை பிடித்தது போல் தானும் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது போன்ற நடவடிக்கைகளில் இறங்குவதாக கூட இருக்கலாம். அப்படி மட்டும் நடந்தால் அவர் ஆரம்பிக்கும் புதிய கட்சிக்கு அதிமுகவின் முக்கிய தலைகள் முழுவதும் போய் ஒட்டிக் கொள்ளும். இவ்வளவு ஏன் திமுகவில் உள்ள ஒரு பெரிய அணியே கூட அவர் பின்னால் போகக்கூடும். இவையே இப்படி என்றால் தேமுதிக நிர்வாகிகளின் நிலை சொல்லவா வேண்டும்?' என்றார்.

முதல்கட்டமாக ரஜினியை சந்திக்கும் குழுவில் உள்ள ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் தன் பெயர் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு இதுகுறித்து இப்படி பேசினார்:

'இந்த முறை தலைவர் ரஜினியின் போக்கே முற்றிலும் மாறுபாடு மிக்கதாக உள்ளது. அதை வேலுாரில் மாவட்ட தலைவரை அவரே நியமனம் செய்தது மட்டுமல்ல; இந்த முதல் கட்ட சந்திப்பின்போது சில மாவட்டங்களின் தலைவர்களை அவரே நியமனம் செய்ய வாய்ப்புள்ளது. அவர் இந்த முறை ரசிகர்கள் சந்திப்பை நடத்துவது ரிலீஸாகும் படத்திற்காக அல்ல. நிச்சயம் அரசியல் பிரவேசத்திற்கானதுதான். அவர் தற்போது தமிழகத்தில் மாறிக் கொண்டிருக்கும் அரசியல் சூழ்நிலையை கவனித்தே வருகிறார். அதிலொன்றாகவே நக்மாவை போன்றவர்களை பேச விடுகிறார். அதை எங்கள் தலைமை ரசிகர் மன்றப் பொறுப்பாளர்களே தெரிவிக்கிறார்கள்.

நீங்களே யோசித்துப் பாருங்கள். விண்ணப்பம் கொடுத்து டோக்கன் போட்டு, தேதி குறிப்பிட்டு, அதை தள்ளி வைத்து, விண்ணப்பங்களை கணினியில் பதிவிறக்கம் செய்து, பார் கோடு கொடுத்து, நிர்வாகிகளை மட்டும் சந்திக்க ஏற்பாடு செய்து, பிறகு ரசிகர்களை சந்திக்க நாட்கள் குறித்து இப்படியொரு ரசிகர்கள் சந்திப்பை எப்போதாவது ரஜினி நடத்தியதுண்டா? அதை வைத்தே தெரிய வேண்டாமா? இதற்குப் பின்னால் அரசியல் மாஸ்டர் பிளான் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது என்று. நிஜமாக சொல்கிறேன். இந்த ஜூன் மாதத்திற்கு பின்பு அனைவரும் புரிந்து கொள்வார்கள். ரஜினியை விட்டால் தமிழக அரசியலுக்கு ஆளில்லை என்பதை!' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x