Last Updated : 21 Dec, 2016 10:27 AM

 

Published : 21 Dec 2016 10:27 AM
Last Updated : 21 Dec 2016 10:27 AM

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

துணை ராணுவப் படை பாதுகாப்புடன் தலைமைச் செயலகம் உட்பட 14 இடங்களில் நடந்தது



*

தமிழக தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ் வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை உட்பட 14 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று (புதன்கிழமை) திடீரென சோதனை நடத்தினர். இது, அதிகாரிகளிடமும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருப்பவர் பி.ராமமோகன ராவ். இவரது வீடு சென்னை அண்ணா நகர் 6-வது பிரதான சாலையில் ஐயப்பன் கோயில் அருகே உள்ளது. நேற்று அதிகாலை 5.13 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 10 பேர் 4 வாகனங்களில் இவரது வீடு முன்பு வந்து இறங் கினர். அவர்களுடன் போலீஸாரும் வந்தனர். வீட்டின் உள்ளே சென்ற அதிகாரிகள், உடனடியாக சோதனையை தொடங்கினர். வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரி ராய் ஜோஸ், வருமான வரித்துறை இணை ஆணையர் பிரேமா ஆகியோர் தலைமையில் இந்தச் சோதனை நடந்தது. சோதனை நடந்தபோது ராமமோகன ராவ், அவரது மனைவி வீட்டில் இருந்தனர்.

14 இடங்களில் சோதனை

ராமமோகன ராவின் மகன் விவேக். இவருக்கு திருவான்மியூர் ராஜாஜி நகர், அடையாறு ஸ்பிரிங் டவர் ஆகிய இடங்களில் வீடுகள் உள்ளன. இந்த இரு வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். விவேக்கின் மனைவி ஹர்சினியின் பெற்றோர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

மேலும் மணப்பாக்கம், ஆழ்வார் பேட்டை, தங்கசாலை, எம்ஆர்சி நகர், மயிலாப்பூர், வளசரவாக்கம் பகுதிகளில் உள்ள ராமமோகன ராவின் உறவினர்கள், விவேக்கின் நண்பர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அதேபோல அண்ணா நகரில் உள்ள ரமேஷ் என்பவரின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர், முதல்வரின் உதவியாளர் என கூறப்படுகிறது.

திருவான்மியூரில் உள்ள விவேக்கின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான தங்க நகைகள் பிடிபட்டன. அவற்றின் மதிப்பை கணக்கீடு செய்வதற்காக, நகை மதிப்பீட்டாளர்கள் வரவழைக் கப்பட்டனர்.

மேலும், ராமமோகன ராவின் சொந்த ஊரான ஆந்திர மாநிலம் சித்தூர் லட்சுமி நகர் மற்றும் பெங்களூரில் உள்ள வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. ஒரே நேரத்தில் மொத்தம் 14 இடங்களில் தென்மண்டல வருமான வரித்துறை அதிகாரிகள் 78 பேர் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும், யாரும் எதிர்பாராத வகையில் நேற்று மதியம் 1.30 மணியளவில் சுமார் 20 வருமான வரித்துறை அதிகாரிகள் தலைமைச் செயலகத்துக்கு வந்தனர். அங்கு தலைமைச் செயலாளர் அறையில் சோதனை நடத்தினர். இதில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கிய தாக கூறப்படுகிறது. இதனால் தலைமைச் செயலகமே பரபரப் பானது.

வருமான வரித்துறையினர் சோதனை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில், பகல் 12 மணி அளவில் ராமமோகன ராவ் வீடு உட்பட சோதனை நடந்த அனைத்து இடங்களிலும் திடீரென துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். ராமமோகன ராவ் வீடு முன்பு ஏராளமான பொதுமக்களும் திரண்டனர்.

ரூ.100 கோடி ஆவணங்கள்

முதல்கட்ட சோதனையில் ரூ.30 லட்சம் பணமும், 5 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் சோதனை தொடர்ந்து நடந்ததால் முழுமையான விவரம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. மேலும், தலைமைச் செயலகம் மற்றும் பல இடங்களில் இருந்து முக்கியமான பல ஆவணங்களையும் ராம மோகன ராவின் லேப்-டாப், அவர் பயன்படுத்திய கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்து ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதிகாலை 5.13 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு வரை தொடர்ந்து நடந்தது.

சென்னை தி.நகரில் வசிக்கும் தொழிலதிபர் சேகர் ரெட்டி என்பவரின் வீடுகள், அலுவலகங்களில் கடந்த 7-ம் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.147 கோடி பணம் (ரூ.33 கோடி புதிய 2 ஆயிரம் நோட்டுகள்), 178 கிலோ தங்கம் மற்றும் ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர்.

இவர் அதிமுக நிர்வாகிகள் பலருக்கும், அமைச்சர்களுக்கும் நெருக்கமானவர். இவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் ராமமோகன ராவ் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x