Published : 25 Mar 2015 02:57 PM
Last Updated : 25 Mar 2015 02:57 PM

தமிழகத்துக்கு அநீதி இழைத்துவிட்டது 14-வது நிதி ஆணையம்: முதல்வர் ஓ.பி.எஸ்.

வரித் தொகுப்பிலிருந்து கிடைத்துவந்த நிதிப் பகிர்வையும், சேவை வரித் தொகுப்பிலிருந்து கிடைத்து வந்த பங்கையும் குறைத்திருப்பதன் மூலம், 14-வது நிதி ஆணையம் தமிழகத்துக்கு பெரும் அநீதியை இழைத்துள்ளது என பட்ஜெட் உரையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் உரையில் அவர் மேலும் கூறும்போது, "14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதிப்பகிர்வு அளவை 32%-ல் இருந்து 42% ஆக உயர்த்தி வழங்கியுள்ளதை வரவேற்கிறோம். எனினும், மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மொத்த நிதியின் அளவில் எந்த மாற்றமும் இல்லை.

2011-2012 ஆம் ஆண்டில் 53 சதவீதமாக இருந்த இந்த நிதியளவு தற்போது 49 சதவீதமாக குறைந்துள்ளது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையும் இரண்டு விதமான நடவடிக்கைகளால் இது 45% கூட எட்ட முடியாதபடி செய்துள்ளது.

முதலாவதாக, சொத்துவரி போன்ற வரிகளை, மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கத் தேவையில்லாத மேல்வரி (CESS) மற்றும் தலமேல்வரியாக (SURCHARGE) மாற்றியுள்ளது. இரண்டாவதாக, மாநிலங்கள் மூலமாக நிறைவேற்றப்படும் மத்தியத் திட்டங்களுக்கான நிதியை மத்திய நிதிநிலை அறிக்கை கணிசமாகக் குறைத்துள்ளது. காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டம், சுற்றுலா கட்டமைப்பு மேம்பாடு, ஊராட்சிகள் வலிமைப்படுத்துதல் திட்டம், பிற்படுத்தப்பட்ட பகுதிகளுக்கான மானிய நிதி மற்றும் உணவு பதப்படுத்துவதற்கான தேசியத் திட்டம் உள்ளிட்ட 8 மத்திய அரசின் திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. 'வழக்கமான மத்திய உதவி' (Normal Central Assistance) ‘மாநிலத் திட்டங்களுக்கான சிறப்பு மத்திய உதவி’ ஆகியவையும் வருங்காலத்தில் கிடைக்காது.

இதனால் 2014-2015 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடுகளின் அடிப்படையில், நமது மாநிலத்திற்கு வருடத்திற்கு ரூபாய் 1,137 கோடி அளவிற்கு வருவாய் வரவில் இழப்பு ஏற்படும்.

மேலும், மாநிலங்கள் இதுவரை பெற்றுவந்த குடிசைப் பகுதி மேம்பாடு, பாரம்பரிய நீர்நிலைகளைப் பாதுகாத்தல், கடலோரப் பாதுகாப்பு, பழம்பெரும் கட்டடங்களை புதுப்பித்தல் ஆகியவற்றிற்கான மானியம் போன்ற மாநிலங்களின் குறிப்பிட்ட தேவைக்கான மானிய நிதியுதவிகளும் (State Special Grant) சாலைகளைப் பராமரிப்பதற்கான மானியங்களும் நிதி ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று நிறுத்தப்பட்டுள்ளன. மேற்கூறிய திட்டங்களுக்காக கடந்த நிதி ஆணையத்தின் ஐந்தாண்டுக் காலத்தில் 4,669 கோடி ரூபாய் நிதியை நமது மாநிலம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இது தவிர தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், நிலைக்கத்தக்க வேளாண்மைக்கான வளர்ச்சித் திட்டம், தேசிய ஊரகக் குடிநீர்த் திட்டம், தேசிய சுகாதாரத் திட்டம், தேசிய நகர்ப்புர வாழ்வாதாரத் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசால் செயல்படுத்தப்படும் 24 திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு கடந்த 2014-2015 ஆம் ஆண்டை விட வரும் 2015-2016 ஆம் நிதியாண்டில் 21,116 கோடி ரூபாய் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களுக்கான நிதிப் பங்கீட்டு முறையில் மாற்றத்தைக் கொண்டுவர மத்திய அரசு முனைந்திருப்பதால், மாநிலங்கள் கூடுதல் நிதிச்சுமையை ஏற்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

பகிர்ந்தளிக்கத்தக்க பொதுவான வரித் தொகுப்பிலிருந்து தமிழ்நாட்டிற்குக் கிடைத்துவந்த நிதிப் பகிர்வை 4.969 சதவீதத்திலிருந்து 4.023 சதவீதமாகவும் சேவை வரித் தொகுப்பிலிருந்து கிடைத்து வந்த பங்கான 5.047 சதவீதத்தை 4.104 சதவீதமாகவும் பெருமளவு குறைத்திருப்பதன் மூலம், பதினான்காவது நிதி ஆணையம் தமிழ்நாட்டிற்கு பெரும் அநீதியை இழைத்துள்ளது.

நியாயமான மற்றும் முற்போக்கான அளவுகோல்களை பதினான்காவது நிதி ஆணையம் பின்பற்றாதது மட்டுமன்றி நிர்வாகத் திறன், நிதி மேலாண்மைத் திறன் போன்ற அளவுகோல்களையும் முழுமையாகப் புறக்கணித்துள்ளதால், சிறந்த நிதி மேலாண்மை வழிமுறைகளை வழுவாது பின்பற்றி சிறப்பான ஆட்சி நடைபெறும் தமிழ்நாட்டைப் போன்ற மாநிலங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், மொத்த பரப்பளவு, தனிநபர் வருமான இடைவெளி ஆகியவற்றிற்குக் கொடுக்கப்பட்ட அதிகமான முக்கியத்துவம், மொத்த பசுமைப் பரப்பின் அளவு போன்ற பொருத்தம் இல்லாத அளவுகோல்களைப் புகுத்தியது போன்ற நடவடிக்கைகள் தமிழ்நாட்டிற்கு பாதகமாக அமைந்துவிட்டன.

பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்காக, வெளிச்சந்தையில் அதிகக் கடன் திரட்டியும், வரி விதிப்பதன் மூலம் வருவாயை அதிகமாகப் பெருக்கியும் நிதி முதலீடு செய்ய முனைந்த தமிழ்நாட்டைப் போன்ற மாநிலங்களின் நலன்களைப் பாதுகாக்க நிதி ஆணையம் தவறிவிட்டது.

வரிகள் மூலம் நிதி திரட்டும் அதிகாரம் மத்திய அரசிடமே அதிகம் குவிந்துள்ள நிலையில், உயர் பொருளாதார வளர்ச்சியை எட்டும் மாநிலங்கள், தம்முடைய சொந்த வருவாயினை மட்டுமே நம்பி இயங்கிட வேண்டும் என்பது தவறான கருத்தாகும். மாநில அரசு எடுக்கும் முயற்சிகளின் காரணமாக ஏற்படும் உயர் பொருளாதார வளர்ச்சியின் மூலம் கிடைக்கும் அதிக வரி வருவாய், குறிப்பாக, வருமான வரி, சுங்கத்தீர்வை, மத்திய ஆயத்தீர்வை, நிறுவனங்கள் மீதான வரி மற்றும் சேவை வரிகள் ஆகியவற்றின் பயன்கள் அனைத்தும் மத்திய அரசுக்கே கிடைக்கும் நிலையில், மாநில அரசால் விற்பனை வரியின் பயனை மட்டுமே பெற இயலும்.

இதனால், தமிழ்நாட்டைப் போன்ற மாநிலங்கள் பெரும் வருவாய் இழப்பை எதிர்கொள்வதுடன், தங்களின் நடைமுறை நிர்வாகத் தேவைகளுக்குக்கூட என்றென்றும் மத்திய அரசினைச் சார்ந்தே இருக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படும்.

மத்திய அரசு முன்வைக்கும் இத்தகைய கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவம், மாநிலங்களும், மத்திய அரசும் சமச்சீரற்ற வருவாய் ஆதாரங்களைக் கொண்டுள்ள நிலையில் அவற்றை சமமான பங்குதாரர்களாகக் கருதுவது வியப்பை அளிக்கிறது.

எனவே, வருவாய்ப் பற்றாக்குறையால் அத்தகைய மாநிலங்கள் பொருளாதார வீழ்ச்சியைச் சந்திப்பதைத் தவிர்க்கவும், பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து அடையவும் மத்திய அரசு நேரடி வரி வருவாயை மட்டும் தனது அதிகார வரம்பில் வைத்துக்கொண்டு மற்ற அனைத்து மறைமுக வரி வருவாயினையும் மாநிலங்களுக்கே வழங்கிட வேண்டிய காலம் கனிந்துவிட்டது என்றே கருதுகிறேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x