Published : 19 Nov 2013 11:37 AM
Last Updated : 19 Nov 2013 11:37 AM

தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் சிறிய பேருந்துகளை இயக்க அரசு திட்டம்

சென்னையை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் சிறிய பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தாலும், இன்னும் ஏராளமான கிராமங்களுக்கு பேருந்து ஒரு கனவாகவே இருந்து வருகிறது. சென்னையிலும் இதுபோல் பல இடங்களுக்கு பேருந்து வசதி இல்லாத நிலை உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து முக்கியமான பகுதிகளை இணைக்கும் வகையில் மாநகர போக்குவரத்துக் கழகம் மூலம் 100 சிறிய பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி சென்னையில் 20 வழித்தடங்களில் 50 சிறிய பேருந்துகளை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இந்த பேருந்துகள் ராமாபுரம், மாதவரம், மணலி, கோயம்பேடு, பல்லாவரம், மூலக்கடை, வண்டலூர், போரூர் ஆகியவற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சிறிய பேருந்து சேவைக்கு பொதுமக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும், கூடுதலாக 50 சிறிய பேருந்துகளை இயக்குவதற்கான வழித்தடங்கள் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பேருந்துகள் விரைவில் இயக்கப்படவுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள பிரதான ஊரில் இருந்து சற்று தொலைவில் அமைந்திருக்கும் சிறிய கிராமங்களுக்கும், சிறிய குடியிருப்புப் பகுதிகளுக்கும் இது போன்ற சிறிய பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டு வருகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் சிறிய கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி கிடைக்க தனியார் மூலம் 3,500-க்கும் மேற்பட்ட சிறிய பேருந்துகள் ஏற்கெனவே இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, பல்வேறு காரணங்களுக்காக அரசும் ஊரகப் பகுதிகளில் சிறிய பேருந்துகளை இயக்கவுள்ளது.

இது குறித்து அரசு போக்குவரத்துத் துறையின் உயர் அதிகாரி ஒருவர், “தி இந்து” நிருபரிடம் கூறியதாவது:

தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் உள்ள சில சிறிய கிராமங்களுக்கு பேருந்துகள் செல்ல முடியாத வகையில் பாதைகள் குறுகலாக உள்ளன. இதுதவிர, சில இடங்களில் பேருந்துகள் காலியாகத்தான் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், எரிபொருள் வீணாகிறது.

எனவே, பெரிய பேருந்துகள் செல்லாத இடங்களிலும், முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையிலும் சிறிய பேருந்துகளை இயக்க அரசிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x