Published : 06 Mar 2017 11:31 AM
Last Updated : 06 Mar 2017 11:31 AM

தடைகளை உடைத்து திரையிடுவோம்: ‘கக்கூஸ்’ ஆவணப்பட பெண் இயக்குநர் உறுதி

துப்புரவு தொழிலாளர்களின் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘கக்கூஸ்’ ஆவணப்படம் அண்மையில் சென்னையில் வெளியிடப்பட்டது. நேற்று முன்தினம் நாகர்கோவில் பறக்கை நிழற்தாங்கலில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், திடீரென திரையிடல் நிகழ்ச்சி ரத்தானது.

இந்நிகழ்வில் பங்கேற்க எழுத்தாளர்கள் அஜயன் பாலா, கோணங்கி, சிவ.அய்யப்பன், நட.சிவக்குமார், கென்னடி, ரோஸ் ஆன்றா உள்ளிட்ட பலரும் வந்திருந்தனர். எழுத்தாளர் லெட்சுமி மணிவண்ணன் ஒருங்கிணைத்த இந்த அமர்வில், கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யாவும் பங்கேற்றார்.

அவர் கூறியதாவது:

பள்ளி காலத்திலேயே இடதுசாரி சிந்தனை அதிகம். அப்போதே மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் இயக்கத்தில் இருந்தேன். அருப்புக்கோட்டை அருகில் உள்ள கிராமம் தான் எனது ஊர். பிளஸ் 2-க்கு பின் விஷூவல் கம்யூனிகேசன் படிக்க விரும்பி மதுரையில் உள்ள கல்லூரியில் சேர்ந்தேன். ஒருகட்டத்தில் இடைநிற்க வேண்டிய சூழல் வந்தது. அடுத்த ஆண்டே சட்டக் கல்லூரியில் சேர்ந்தேன். அரசியல் ஈடுபாடு, சட்டக் கல்லூரி வாழ்க்கை இரண்டும் சேர்ந்து நல்ல களப்போராளியாக்கியது.

5 ஆண்டு சட்டம் படித்த காலத்தில் மட்டும் 13 வழக்குகள் என் மீது போராட்டம் நடத்தியதற்காக போடப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு மதுரையில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்த இருவர் விஷ வாயு தாக்கி இறந்தனர். அவர்கள் உடலில் அடித்த துர்நாற்றத்தால் மருத்துவமனை ஊழியர்கள் கூட நெருங்கவில்லை. இறந்ததில் முனியாண்டி என்பவரின் மனைவி மகாலெட்சுமி அனைவரை யும் ஒதுக்கித் தள்ளி விட்டு அவர் மார்பில் புதைந்து அழுத நொடியில் துப்புரவு தொழிலாளர்களுக்காக உழைக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது.

தமிழகத்தில் 25 நகரங்களுக்கு சென்று அவர்களது வலியை, உணர்வை பதிவு செய்தேன். இந்த ஆவணப்படம் அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் படம். தற்போது தணிக்கை செய்யப்பட்ட பின் தான் திரையிட வேண்டும் எனத் தடை போட்டுள்ளனர். தடையை உடைத்து தமிழகம் முழுவதும் கக்கூஸை திரையிடுவோம்” என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x