Published : 09 May 2017 02:09 PM
Last Updated : 09 May 2017 02:09 PM

டாஸ்மாக் பிரச்சினை: கிராம சபை தீர்மானத்தை ஆதரிக்கும் நீதிமன்ற உத்தரவு; திருநாவுகரசர் வரவேற்பு

கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றினால் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுகரசர் வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், "கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றினால் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனதார வரவேற்கிறேன்.

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டுமென்று உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் தமிழகத்தில் 3321 மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்த கடைகளுக்கு பதில் குடியிருப்பு பகுதிகளில் மாற்று கடைகள் அமைக்க அரசு முயற்சிப்பதை எதிர்த்து திருப்பூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து காந்தியடிகள் கண்ட கனவை நினைவாக்குகிற முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறது.

கடந்த மே 1 ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று மதுக்கடைகளை மூட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென கோரியிருந்தோம். இதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், பெருமாநாடு கிராம பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நானே பங்கேற்று மதுக்கடைகளை மூட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல, தமிழகத்தின் பல கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றுவதில் காங்கிரஸ் கட்சியினர் தீவிர முனைப்பு காட்டியதற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது.

கிராம சபைகளின் தீர்மானத்தின் அடிப்படையில் மதுக்கடைகளை மூட வேண்டுமென காங்கிரஸ் கட்சியின் பிரிவான ராஜீவ்காந்தி பஞ்சாயத்ராஜ் சங்கதன் அமைப்பின் மாநில அமைப்பாளர் திரு. செங்கம் குமார் முயற்சித்தார். சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் இத்தீர்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த கூடுதல் வெற்றியாகும்.

இந்தியாவின் அடித்தளமே கிராமங்கள் தான். பஞ்சாயத்துராஜின் அடித்தளம் கிராம சபை. கிராம சபைக்கு அதிகாரம் வழங்க வேண்டுமென்று கனவு கண்டவர் காந்தியடிகள். அந்த கனவை நிறைவேற்றியவர் ராஜீவ்காந்தி. இன்று சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலமாக கிராம சபையின் தீர்மானத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு மக்கள் பங்கேற்கிற ஜனநாயகம் வெற்றிப்பாதைக்கு திரும்பியிருக்கிறது. இந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றதில் தமிழக காங்கிரசின் பங்கு மகத்தானது.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று இனி கிராமசபை தீர்மானம் நிறைவேற்றினால் மதுக்கடைகள் மூடப்படும் என்கிற நற்செய்தி தமிழகத்தை நிச்சயம் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x