Published : 27 Sep 2014 03:48 PM
Last Updated : 27 Sep 2014 03:48 PM

ஜெ. வழக்கு தீர்ப்பு எதிரொலி: தமிழகத்தில் வன்முறை நீடிப்பதால் பதற்றம்

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, தமிழகத்தில் அதிமுக-வினர் ஆங்காங்கே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேநேரத்தில், பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம் நீடித்துள்ளது.

ஸ்ரீரங்கம்:

ஜெயலலிதாவின் சொந்தத் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் கோயில் அருகே உள்ள கடைகளை மூடக்கோரி அதிமுக-வினர் அச்சுறுத்தியுள்ளனர். அங்கு இதனால் கடைகள் மூடப்பட்டு வருகின்றன.

சிறிய அளவில் உள்ள காவலர்களும் அதிமுக-வினரின் இந்தச் செயலை கண்டிக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

கோவை:

கோவையில் அவினாசி சாலையில் தீர்ப்பை எதிர்த்து அதிமுகவினர் ஆர்பாட்டம் செய்து வருகின்றனர். அங்கு சில கார்களின் கண்ணாடியை உடைத்து வாகனங்களை சேதப்படுத்தியதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

அங்கும் போலீஸ் வேடிக்கையே பார்த்துக் கொண்டிருக்கிறது.

மதுரை:

மதுரையில் பதற்றம் கூடுதலாக இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதிமுகவினர் கடைகள் மீது கல்வீச்சில் ஈடுபட்டு வன்முறை செய்து வருகின்றனர்.

மதுரையில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மதுரை மீனாட்சி கோயில் அருகே உள்ள கடைகள் மூடப்பட்டுவிட்டன. தஞ்சாவூர், நாகப்பட்டிணம், கரூர், புதுக்கோட்டை பெரம்பலூர் மாவட்டங்களில் கடைகள் ஷாப்பிங் மால்கள் மூடப்பட்டு வருகின்றன. தெற்கு மாவட்டங்களிலும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரி:

புதுச்சேரியிலு பதற்றம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி போக்குவரத்துக் கழகம் சென்னைக்கு வரும் வோல்வோ பேருந்துகளை ரத்து செய்துள்ளது.

தமிழகம் எங்கிலும் பதற்றம் நிலவுவதால், அசாதாரண சூழலை தவிர்க்கும் விதமாக சென்னை-புதுச்சேரி இடையிலான பேருந்து போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பையடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பதற்றம் நிலவுகிறது.

புதுச்சேரியில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அமைதியான சூழல் நிலவினாலும், அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க, சென்னை-புதுச்சேரி இடையிலான பேருந்து போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி உப்பளம் சாலையில் உள்ள அதிமுக அலுவலகம், திமுக அலுவலகங்கள் அங்கு வெறிச்சோடி காணப்படுகின்றன. பதற்றம் ஏற்படக்கூடிய இடங்களில் புதுச்சேரி போலீஸார் பாதுகாப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டையில் வன்முறை:

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வெளியானதையடுத்து அதிமுக-வினர் கடும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டையில் திமுக, தேமுதிக அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

புதுக்கோட்டை வடக்குத் தெருவில் உள்ள திமுக அலுவலகத்தை முற்றுகையிட்ட அதிமுக-வினர் கற்களால் அடித்து உடைத்தனர். இதில் கண்ணாடிகள் சிதறின.

மேலும் சில அதிமுக-வினர் புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள லஷ்மிபுரத்தில் தேமுதிக அலுவலகத்தில் புகுந்து கண்ணில் பட்டதையெல்லாம் அடித்து நொறுக்கினர்.

புதுக்கோட்டை மேற்கு 4ஆம் தெருவில் உள்ள மறைந்த முன்னாள் எம்.பி. வீரையாவின் வீடுகளுக்குக் கடும் சேதம் விளைவித்தனர். இவரது இல்லத்திற்குப் பின்புறம் உள்ள இந்தக் குடும்பத்திற்குச் சொந்தமான அரிசி ஆலையும் சேதப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கியில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன .

ஷேர் ஆட்டோக்கள் அராஜகம்:

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு எதிரொலியாக பல மாவட்டங்களில் பேருந்துப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் வீடுகளுக்குச் செல்வதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

பொதுமக்கள் இதனால் ஷேர் ஆட்டோக்களை நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 5 கிமீ தூரம் செல்ல ஷேர் ஆட்டோக்களில் ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படுவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

தெற்கு மாவட்டங்களில் ரயில்களைப் பிடிக்க பயணிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையங்களில் சென்னை வரும் ரயில்களுக்கு கடும் கூட்டம் முண்டியடிப்பதாக செய்திகள் வந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x