Published : 13 May 2015 01:52 PM
Last Updated : 13 May 2015 01:52 PM

ஜெயலலிதா வழக்கில் நீதியை நிலைநாட்ட தேமுதிக முன்வரும்: விஜயகாந்த்

ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக கர்நாடக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், "இல்லையேல், அப்பணியை தேசிய முற்போக்கு திராவிட கழகம் மேற்கொள்ளும்" என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பில், வருமானம் மற்றும் கடன் கணக்கீடுகளில் தவறு நடந்திருப்பது தெள்ளத் தெளிவாக "உள்ளங்கை நெல்லிக்கனி போல்" தெரியவருகிறது.

புடம்போட்ட தங்கம் என்று நம்பி நாம் வாங்குகிற பொன்நகைகள், சில நேரங்களில் மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்ற பாடத்தை நமக்கு தந்திருக்கிறது. இந்தத் தீர்ப்பிலும் அது தான் நடந்திருப்பதாக மக்கள் நம்புகிறார்கள்.

உச்ச நீதிமன்ற நீதி அரசர்களால் பெரிதும் நம்பப்பட்ட, மிகவும் அனுபவம் வாய்ந்த நீதிபதி குமாரசாமி, கணக்கீடுகளில் தவறு செய்திருக்கிறார் என்பது தற்செயலாக நடந்த நிகழ்வாக தெரியவில்லை. மாறாக ஏதோ ஓர் அழுத்தத்தில்தான் இது நடந்திருப்பதாக யூகிக்கமுடிகிறது.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிட கூடாது என்பது நீதி நெறிமுறையில் நீண்டகாலமாக கடைபிடிக்கப்படும் ஒரு கோட்பாடு. ஒருவேளை அந்த ஆயிரத்தில் ஒருவரோ இந்த ஜெயலலிதா, அதனால்தான் தப்பித்துவிட்டாரோ என்று சட்ட வல்லுனர்களும், சமூக அக்கறையாளர்களும் சந்தேகிக்கிறார்கள்.

இதற்கு முன்பு அரசு ஊழியர்களான ஐபிஎஸ் அதிகாரி ஜெகன்சேஷாத்திரி வழக்கில் வருமானத்திற்கு அதிகமாக 3 ஆயிரம் ரூபாய் அவர் கணக்கில் இருந்தமைக்காக ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதேபோல் சுங்கத்துறை அதிகாரி புகழேந்தி என்பவர் சுமார் 90 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக அவர் கணக்கில் இருந்தமைக்காக இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையும், அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. சொத்து சேர்த்ததில் விலக்களிக்கப்பட்ட வழக்கின் விபரம் தெரிந்த நீதிபதிக்கு, தண்டனை அளிக்கப்பட்ட வழக்கின் விபரம் மட்டும் தெரியாமல்போனது ஏன்? என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும்.

பாமரரில் இருந்து பணக்காரர் வரை வாக்களித்து ஜெயலலிதாவை முதலைமைச்சராக்கினால் அதிகார பலமும், பணபலமும் இருக்கின்ற மமதையில் எதையும் சாதித்து விடலாம் என்று நினைத்தால் எல்லாவற்றிற்கும் மேலே ஒருவன் இருக்கிறான் என்பது இதுபோன்ற தருணங்களில்தான் நிரூபிக்கப்படுகிறது.

ஜெயலலிதாவுக்கு எதிரான இந்த வழக்கில் 18 ஆண்டுகள் முடிவில் கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா ஆதார ஆவணங்களை, அலசி ஆராய்ந்து, ஆய்வு செய்து வரலாற்று சிறப்புமிக்க 1030 பக்கம் கொண்ட தீர்ப்பை அளித்துள்ளார். அதனால்தான் அவரை நீதியரசர் என்று சொல்கிறோம். ஆனால் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி எதன் அடிப்படையில் இந்த மூன்று நிமிட தீர்ப்பை அளித்துள்ளார்? இவரை நீதியரசர் என சொல்லமுடியுமா? இது நீதித்துறைக்கே களங்கத்தை ஏற்படுத்தி உள்ளதென மக்கள் பேசுகிறார்கள்.

எனவே கர்நாடக அரசு இந்த வழக்கில் உடனடியாக மேல்முறையீடு செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும். இல்லையேல் அப்பணியை தேசிய முற்போக்கு திராவிட கழகம் மேற்கொள்ளும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x