Published : 02 Mar 2017 01:53 PM
Last Updated : 02 Mar 2017 01:53 PM

ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டாரா?- அடுக்கடுக்காக சந்தேகங்களை எழுப்பும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கீழே தள்ளி விடப்பட்டதாக மருத்துவமனை டிஸ்சார்ஜ் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளதாக முன்னாள் சட்டப் பேரவைத் தலைவர் பி.எச். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை கோரி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மார்ச் 8-ம் தேதி உண்ணா விரதப் போராட்டம் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை அனுமதிக்கு ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் பி.எச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன், க.பாண்டியராஜன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிவில் நிருபர்களிடம் பி.எச்.பாண்டியன் கூறியதாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, செப்டம்பர் 22-ம் தேதி வீட்டிலேயே கீழே தள்ளிவிடப்பட்டு, அங்கிருந்து ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்பட்டார் என அப்போலோ மருத்துவமனையின் ‘டிஸ்சார்ஜ் சம்மரி’ கூறுகிறது. அதில் ஜெயலலிதா தள்ளிவிடப்பட்டார் என சொல்லப்பட்டுள்ளது. அப்போலோ வுக்கு 1066 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, உடனே ஆம்புலன்ஸ் அனுப் புங்கள் என ஒரு டிஎஸ்பி கேட்டுள்ளார். அவர் யார் என்பது தெரியவில்லை.

அப்போலோவில் இருந்து போயஸ் தோட்டம், அங்கிருந்து மீண்டும் அப்போலோவுக்கு ஜெயலலிதா கொண்டுவரப்பட்ட நேரம், வாகனத்தில் இருந்தவர்கள் யார் என்பது விளக்கப் பட வேண்டும். போயஸ் தோட்டம், அப்போலோவில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வெளியிட வேண்டும். அப்போலோ மருத்துவமனையில் ஜெய லலிதா அனுமதிக்கப்பட்ட இடத்தில், 27 சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டதாக கேள்விப்பட்டோம். அவற்றை அகற்ற உத்தரவிட்டது யார்?

ஜெயலலிதாவுக்கான சிகிச்சையை நிறுத்தி, இயற்கையாகவே மரணமடை யச் செய்வது என முடிவெடுக்கப்பட்ட தாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை கூறி யுள்ளது. இதற்கு யார் அனுமதி அளித்தது என்பதைக் கூற வேண்டும்.

கடந்த 2015-ம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில் மத்திய அரசு ரகசிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், சிங்கப்பூரில் உள்ள புனித எலிசபெத் மருத்துவமனைக்கு ஜெய லலிதாவை அழைத்துச் செல்ல பாரா ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக கூறியுள்ளது. அப்படி யென்றால் எலிசபெத் மருத்துவ மனைக்கு ஜெயலலிதாவை ஏன் அழைத் துச் செல்லவில்லை. இதைத் தடுத்தது யார் என்பதும் தெரியவேண்டும்.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கையை மக்களுக்கு அளிக்க வேண்டும். என்எஸ்ஜி பாதுகாப்பு இல்லாமல் அப்போலோவில் ஜெயலலிதா இருந்துள்ளார்.

இவ்வாறு பி.எச்.பாண்டியன் தெரி வித்தார்.

அதைத் தொடர்ந்து முன்னாள் எம்.பி., மனோஜ் பாண்டியன் கூறிய தாவது:

ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெறும்போது, அளிக்கப்பட்ட சிகிச்சைகளுக்கான அனுமதிகளை யார் கொடுத்தது. இசட் பிளஸ் பாதுகாப்பில் இருந்த அவருக்கான உணவு தடய அறிவியல் மையத்தில் ஆய்வு செய்யப்படும். அந்த அறிக்கைகளை வெளியிட வேண்டும். ஜெயலலிதாவுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டபோது, நவம்பர் 2 முதல் டிசம்பர் 5-ம் தேதி வரை ரிச்சர்டு பீலே உள்ளிட்ட எந்த வெளிநாட்டு மருத்துவர்களும் இங்கு வராததற்கு காரணம் என்ன என்பதையும் விளக்க வேண்டும்.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர்களுக்கு ஆங்கிலம் தெரியும். அருகில் இருந்தவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. அங்கிருந்த டாக்டர்களுக்கோ தமிழ் தெரியாது. அப்படி இருக்கும்போது, ஜெய லலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து அறிந்து, உரிய அனுமதிகளை யார் கொடுத்தார்கள் என்பது தெரிய வேண்டும்.

மேலும், ஜெயலலிதாவின் கன்னத் தில் 4 ஓட்டைகள் இருந்தன. அதற்கான காரணத்தை யாரும் கூறவில்லை. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளில் குடும்ப உறுப்பினர்கள் அனுமதி வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் அதற்காக அளித்த ஆவணங்களை அளிக்க வேண்டும். டிசம்பர் 4-ம் தேதி மாலை 4.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார். அதன்பின் 9.30 மணியில் இருந்து எக்மா பொருத்தப்பட்டு, 24 மணி நேரம் இருந்ததாக தகவல்கள் வருகின்றன. அது பற்றியும் மக்களுக்கு விளக்க வேண்டும். இடைத்தேர்தல்களின் போது, ஜெயலலிதாவின் கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போதிருந்த டாக்டர் பாலாஜியை விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

‘‘அதிகமான பல விஷயங்களை கூறுகிறீர்கள். பல கேள்விகளையும் எழுப்பியுள்ளீர்கள். இதற்கான ஆவணங்கள், தகவல்களை உங்களுக்கு யார் அளித்தது?’’ என்று ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பி.எச்.பாண்டியன், ‘‘நான் குற்றவாளிகளையே நெருங்கிவிட்டேன். எல்லாவற்றையும் வெளிப்படையாக கூற முடியாது. நானாகவே இதை விசாரித்து தெரிந்துகொண்டுள்ளேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x