Published : 11 Jan 2017 06:33 PM
Last Updated : 11 Jan 2017 06:33 PM

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது: ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலினை வேலூர் மாவட்ட கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த சந்திப்புக்கு பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''ஜல்லிக்கட்டு பிரச்சனையில் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது மத்திய அரசு ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள். அதாவது, இந்த துறை சம்பந்தப்பட்டிருக்ககூடிய மத்திய அமைச்சரே, உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு இருக்கிறது. அதனால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லியிருப்பது, மத்திய அரசின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

ஏனென்றால், தமிழகத்தை சேர்ந்த சில மத்திய அமைச்சர்கள், தமிழகத்திற்கு வருகிறபோதெல்லாம், நாங்கள் முயற்சித்து கொண்டிருக்கிறோம், இந்த ஆண்டு எப்படியும் நடத்தியே தீருவோம் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். ஆனால், இப்போது மத்திய அமைச்சர் அதற்கு சாத்தியமல்ல என்று கூறியிருப்பது உள்ளபடியே வேதனையளிக்கிறது.

நான் கேட்கிற கேள்வி, இதே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம், அதுவும் நான்கு நாட்களில் அமைக்க வேண்டுமென்று உத்தரவிட்டபோது அப்பொழுது அதை ஏற்றுக்கொண்டு, ஆனால் அதற்கு பிறகு உச்ச நீதிமன்றம் உத்தரவு போடுவதற்கு உரிமை கிடையாது என்று மத்திய அரசு அந்த விஷயத்தில் சொல்லுகிற போது, ஏன் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அந்த நடைமுறையை கடைபிடிக்கவில்லை என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. ஆகவே, மத்திய அரசை பொறுத்தவரையில் ஜல்லிக்கட்டு விஷயத்தில் இரட்டை வேடம் போடக்கூடிய நிலைதான் இருந்துகொண்டு இருக்கிறது.

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். உள்ளபடியே, இப்பொழுதாவது ஏதோ விவசாயிகள் மீது அக்கறை கொண்டிருப்பது போல ஒரு அறிக்கை வந்திருப்பது உள்ளபடியே வரவேற்கக்கூடிய ஒன்று.

ஆனால், அதே நேரத்தில் 17 பேர்தான் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள், எனவே அவர்களுக்கு நிதியுதவி என்று முதல்வர் அறிவித்திருக்கிறார். உள்ளபடியே 150-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துபோயிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

ஆகவே, உடனடியாக தற்கொலை செய்துகொண்டிருக்கக்கூடிய, அதிர்ச்சிக்கு ஆளாகி இறந்துபோயிருக்கக்கூடிய அனைவருக்கும் அந்த உதவித் தொகை வழங்க வேண்டும்.

உதய் மின் திட்டத்திற்கு கூட மின்துறை அமைச்சர் டெல்லிக்குச் சென்று சம்மதம் தெரிவித்து கையெழுத்து போட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. உதய் திட்டத்தைப் பொறுத்த வரையில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அந்த திட்டத்தை திட்டவட்டமாக ஏற்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தார். ஆனால் ஜெயலலிதா மறைந்த பிறகு முதல்வர் ஓ.பி.எஸ் பதவியேற்ற பிறகு உதய் திட்டத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றார். என்ன விவரம் என்று எங்களுக்கு புரியவில்லை. மக்களிடத்தில் பல கேள்விகள் எழுந்துள்ளது. எந்த அடிப்படையில் அவர் ஏற்றுக் கொண்டிருக்கின்றார் என்று ஒரு கேள்வி எழுந்துள்ளது.

2011 க்குப் பிறகு இரண்டுமுறை மொத்தம் 57 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அது இந்த உதய் மின் திட்டத்தின் மூலமாக மேலும் உயர்த்தப்படுமா என்ற ஒரு நிலை இருக்கின்றது. அதுமட்டுமல்ல விவசாயிகளுக்கு, நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஆக இந்த உதய் மின் திட்டம் மூலமாக அது நிறுத்தப்படுமா என்கின்ற கேள்வியும் எழுந்துள்ளது. மின்சார வாரியம் அரசின் கட்டுப்பாட்டில் ஒரு தனி வாரியமாக செயல்பட்டு வருகிறது. அந்த மின்சார வாரியம் கலைக்கப்பட்டு ஒரு தனி வாரியமாக மாற்றப்படுமா என்ற ஒரு கேள்வியும் இருக்கிறது.

அதுமட்டுமல்ல நேற்றைக்கு மின் துறை அமைச்சர் இந்த உதய் திட்டத்தின் மூலமாக 11,000 கோடி ரூபாய் அரசுக்கு மிச்சம் ஏற்படுகிறது என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். மகிழ்ச்சி. ஆகவே மின் துறையைப் பொறுத்த வரையில் 11,000 கோடி ரூபாய் மிச்சம் ஏற்பட்டிருக்கின்ற காரணத்தால் மின்சாரக் கட்டணத்தை உடனடியாக குறைக்கும் முயற்சியிலே இந்த அரசு ஈடுபடுமா என்கின்ற கேள்வியையும் நான் கேட்க விரும்புகிறேன்'' என்று ஸ்டாலின் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x