Last Updated : 14 Jun, 2016 09:35 AM

 

Published : 14 Jun 2016 09:35 AM
Last Updated : 14 Jun 2016 09:35 AM

செயற்கை உரங்களின் தாக்கம் இல்லாமல் மானாவாரி நிலத்தில் விளையும் பண்ருட்டி தேன் பலா: பல நாடுகளுக்கு ஏற்றுமதி

பண்ருட்டி முக்கனிகளில் இரண்டாம் கனி பலா. தித்திக்கும் தேன் சுவை இதன் தனிச் சிறப்பு. மேல் தோல் கரடுமுரடாக காட்சியளித்தாலும், உள்ளே இருக்கும் சுளைகள் தித்திக்கும் தேன் சுவையோடு இருப்பதால் மற்ற பழங்களைக் காட்டிலும் இதற்கு மவுசும் அதிகம்.

ஊட்டச்சத்து மிக்கதும், மருத்துவ குணம் கொண்டதுமான பலாப் பழத்துக்கு பெயர் பெற்றது பண்ருட்டி. செம்மண் பாங்கான பூமியில் சுமார் 800 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்படுகிறது பலா. டெல்லி, மும்பை, ராஜஸ் தான், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங் களுக்கும், தென்னாப்பிரிக்கா, ஸ்வீடன் போன்ற நாடுகளுக்கும் பண்ருட்டியில் இருந்து பலா ஏற்றுமதியாகிறது.

தமிழகத்தில் பண்ருட்டிக்கு அடுத்தபடியாக புதுக்கோட்டை மாவட்டத்திலும் பலா விளைச்சல் அதிகம். தஞ்சை - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை மார்க்கத்தில் பண்ருட்டியில் இருந்து நெய்வேலி வரையிலான 17 கி.மீ தூரத்துக்கு சாலையோரம் நெடுகிலும் பலாப் பழக் குவியல்களை காணமுடியும்.

ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பலா சீசன் முடி வடைந்துவிடும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அடித்துப் பெய்த மழையில் பண்ருட்டி வட்டாரப் பகுதி பலா மரங்களில் பூக்கள் உதிர்ந்தன. பிறகு இயல்பு நிலை திரும்பி மீண்டும் பூக்கத் தொடங்கியதால் இந்த ஆண்டு சீசன் தாமதமாக துவங்கியிருக்கிறது.

சென்னையில் - தஞ்சை சாலை மார்க்கமாக பயணிப்பவர்கள் சாலையோரத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பலாப் பழங் களை வாங்கிச் செல்கின்றனர். ரூ.60 முதல் ரூ.500 வரைக்கும் ரக ரகமாக விற்பனையாகின்றன.

எப்படி பார்த்து வாங்குவது?

இதில் சிலர் தரமான பழம் என்று நம்பி ஏமாறுவது வாடிக்கையாக உள்ளது. பலாப் பழத்தின் தன்மை குறித்து ஓரளவுக்கு தெரிந்திருந்தால் மட்டுமே சுவையான பழத்தைத் தேர்வு செய்ய முடியும்.

இதுதொடர்பாக பண்ருட்டியில் கடந்த 20 ஆண்டுகளாக பலா விற்பனையில் ஈடுபட்டுவரும் இளங்கோ என்பவர் கூறும்போது, ‘‘வெளித்தோற்றத்தை வைத்து பலா வாங்குவது கடினம். மிகப் பெரிதாக இருக்கும் சுளைகள் சுவையாக இருக்காது. மேலும் பலாப் பழத்தின் முள் அகண்டு இருந்தாலும் சுவை இருக்காது. சிறிய அளவிலான பழமாக இருந் தாலும், வளைந்து நெளிந்து, நெருக் கமான முள்களை கொண்டதாகவும், மானாவாரி நிலத்தில் விளைந்த பழங்கள் என்றாலும் சுவையாக இருக்கும். மேலும் பலாப் பழத் தின் மேலுள்ள முள்ளை கிள்ளும் போது வெளியேறும் பால் கெட்டி யாக இருந்தால், அது முற்ற வில்லை என்ற அர்த்தம். சுளை பெருக்காமல் நார்களே அதிகமாக இருக்கும்''என்கிறார்.

பலா உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பண்ருட்டி அடுத்த நடுக்குப்பத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயமூர்த்தி கூறும்போது, ‘‘பலா மரத்தை வளர்த்து மகசூல் கிடைக்க 5 முதல் 8 ஆண்டுகள் பிடிக்கும். ‘தானே’ புயலினாலும், கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினாலும் கடலூர் மாவட் டத்தில் பலா உற்பத்தி நலிவடைந் துள்ளது.

அதை மீட்டெடுக்க அரசு மானியங்களை அறிவித்திருந் தாலும் அது கிடைக்கவில்லை. பண்ருட்டியில் பலா பதனிடுதல் தொழிற்சாலை அமைக்கப்படும் என ஒவ்வொரு தேர்தலின்போதும், அரசியல்வாதிகள் வாக்குறுதி அளிக்கின்றனரே தவிர, அதை செயல்படுத்த யாரும் முன்வர வில்லை'' என்கிறார்.

பண்ருட்டி பலா பற்றி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விருத் தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் அனிஷாராணியிடம் கேட்டோம்.

‘‘பண்ருட்டி பலாவுக்கு சுவை அதிகம். இந்த மண்ணின் தன்மை யும், இங்குள்ள சீரான வெப்ப நிலையும் இதற்குக் காரணம்.

தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராகவும் இந்த பலாவை வளர்க்கலாம். வயல் வரப்புப் பகுதிகளிலும் இதை ஊடுபயிராக பயிரிட்டு விவசாயிகள் கூடுதல் லாபம் பெறலாம். பண்ருட்டி பலாவுக்கு உலக அளவில் உள்ள தேவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பலா குறித்த பயிற்சிகளை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மூலம் நடத்த இருக்கிறோம்'' என் கிறார்.

மற்ற பழங்களைப் போல செயற்கை உரங்களின் தாக்கம் இல்லாமல் மானாவாரி நிலத்தில் விளைவது பண்ருட்டி தேன் பலாவின் தனிச் சிறப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x