Published : 18 Feb 2016 11:56 AM
Last Updated : 18 Feb 2016 11:56 AM

சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு இலவச பயணத் திட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையிலான ஒரு திட்டம் இம்மாதம் 24-ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (வியாழக்கிழமை) விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு:

"மூத்த குடிமக்களுக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்ய கட்டணமில்லா பஸ் பாஸ் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை தேர்தல் அறிக்கையில் நாங்கள் அளித்திருந்தோம். இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முதற்கட்டமாக சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையிலான ஒரு திட்டம் செயல்படுத்தப்படும்.

இதன்படி, 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் குளிர் சாதன வசதி இல்லாத சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக அனைத்து பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம். இதற்கென மாதத்திற்கு 10 டோக்கன்கள் வழங்கப்படும். பேருந்து நடத்துநரிடம் இந்த டோக்கன்களை கொடுத்து கட்டணம் ஏதும் இல்லாமல் மூத்த குடிமக்கள் பயணம் செய்யலாம்.

இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள விழைவோர் அதற்குரிய படிவத்தில் தங்களது புகைப்படத்தினை இணைத்து அடையாள அட்டை மற்றும் டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான விண்ணப்பப் படிவத்தை போக்குவரத்து துறையின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பஸ் டெப்போக்களிலும் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பஸ் டெப்போக்களில் கொடுத்து அடையாள அட்டை மற்றும் டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம். எந்தெந்த பஸ் டெப்போக்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் போக்குவரத்துத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பங்கள் கொடுப்பதற்கென கடைசி தேதி என்று எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. தேவைப்படுவோர் இதற்கான விண்ணப்பத்தை எப்போது வேண்டுமானாலும் அளிக்கலாம்.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் இந்த திட்டம் 24.2.2016 முதல் நடைமுறைப்படுத்தப்படும். இந்த புதிய திட்டத்திற்கு பொதுமக்களிடையே உள்ள வரவேற்பைக் கண்டறிந்து மற்ற இடங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும்" என்றார் ஜெயலலிதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x