Published : 05 Nov 2013 08:33 AM
Last Updated : 05 Nov 2013 08:33 AM

சென்னை அருகே நடுக்கடலில் இந்திய - அமெரிக்க கடற்படை கூட்டுப் பயிற்சி

இந்திய அமெரிக்க கடற்படை கூட்டுப் பயிற்சி சென்னை அருகே சர்வதேச கடல் எல்லை பகுதியில் 7-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை நடக்கிறது.



ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளுடன் அமைதி மற்றும் நல்லுறவை வளர்க்கும் வகையில் அமெரிக்க கடற்படை கப்பல்கள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

அந்த வகையில், அமெரிக்க கடற்படை கப்பல் 'மெக்கேம்பல்', இந்திய கடற்படையுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக சென்னை வந்துள்ளது.

கப்பலில் வந்த 321 பேர்...

சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்தக் கப்பல் வரும் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடற்படையுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுகிறது. அமெரிக்கக் கப்பலில் அதிகாரிகள், தொழில்நுட்ப நிபுணர்கள், கடற்படை வீரர்கள் என மொத்தம் 321 பேர் வந்துள்ளனர்.

கூட்டுப் பயிற்சி தொடர்பாக அமெரிக்க கடற்படை கமாண்டிங் அதிகாரி கமாண்டர் ஷெரீப் எச்.கால்பீ கூறியதாவது: மலபார் என்ற இந்தக் கூட்டுப் பயிற்சியில், அமெரிக்க இந்திய கடற்படையின் 2 கப்பல்கள் கலந்துகொள்கின்றன. அமெரிக்க கப்பலில் உள்ள அதிநவீன சாதனங்கள், போர்க்கருவிகள், பீரங்கிகள், ரேடார்கள், ஹெலிகாப்டர் போன்றவை இயக்கிக் காட்டப்படும்.

பயிற்சிக்கிடையே, சென்னையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்குச் சென்று மக்களின் கலை, கலாச்சார பெருமைகளை தெரிந்துகொள்வோம். மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகளையும் பார்வையிட இருக்கிறோம். சமூக பணிகளில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் ஜெனிபர் மெக்கண்டயர் கூறுகையில், "இது வெறும் கடற்படை சார்ந்த பயிற்சியாக மட்டுமல்லாமல், இரு நாடுகள் இடையே கலாச்சார உறவுகளை வளர்க்கும் வகையிலும் அமைந்திருக்கும்" என்றார்.

அமெரிக்க போர்க் கப்பல், யு.எஸ்.எஸ். மெக்கேம்பெல், இந்திய கடற்படை, அமெரிக்க கடற்படை, சென்னை, கூட்டுப் பயிற்சி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x