Published : 11 Dec 2016 02:44 PM
Last Updated : 11 Dec 2016 02:44 PM

சென்னை அருகே கரையை கடக்கிறது அதிதீவிர வர்தா புயல்: தயார் நிலையில் தேசிய பேரிடர், மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள்

வர்தா புயல் டிசம்பர் 12-ம் தேதி மாலை சென்னை-ஓங்கோல் இடையே ஆந்திரக் கடற்கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிதீவிர புயலான வர்தா, திங்கள் பிற்பகல்-மாலை இடையே சென்னைக்கு அருகில் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மீட்புக் குழுக்கள், தங்குமிடங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன், தெற்கு அந்தமான் பகுதியி்ல் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அது, மேலும் வலுப்பெற்று புயலாகியது. இதற்கு ‘ வர்தா’ என பெயரிடப்பட்டது. தொடர்ந்து வர்தா புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று, ஆந்திர மாநிலம் நெல்லூர், மசூலிப்பட்டினம் இடையில் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதிகனமழை

இது தொடர்பாக ஞாயிறு மாலை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

வங்கக் கடலில் உருவான ‘வார்தா’ புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. இது சென்னையில் இருந்து 370 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 18 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. அப்பகுதியில் மணிக்கு சுமார் 140 கி.மீ வேகத்தில் காற்று வீசுகிறது. இது, நாளை (திங்கள்) பிற்பகலில், வடக்கு தமிழகத்தின் கடலோரப் பகுதியில் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கக்கூடும். அப்போது மணிக்கு 60 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதன் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தொடங்கி, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் மழை பெய்யக்கூடும். படிப்படியாக இந்த மழையின் அளவு அதிகரித்து நாளை (திங்கள்கிழமை) காலை முதல் அடுத்த நாள் காலை வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கன மற்றும் அதிகனமழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படும், கடல் சீற்றமானது, இயல்பை விட ஒரு மீட்டர் அதிகமாக இருக்கக் கூடும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

புயலை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்கள்:

இதையடுத்து, வர்தா புயலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இது தொடர்பாக, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்ட முடிவில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் கூறியதாவது:

வர்தா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. காற்று அதி வேகத்தில் வீசக் கூடும் என்பதால், இந்த மாவட்டங்களில் தாழ்வான பகுதியில் வசிப்போர், அங்கிருந்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சென்னை, திருவள்ளூருக்கு தலா 2 குழுக்கள், காஞ்சிபுரத்துக்கு ஒரு குழு என, தேசிய பேரிடர் மீட்புப் படையினரை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், திருவள்ளூரில் ஒரு குழுவும், சென்னையில் இதர குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தேவையான இடங்களில் படகுகள் தயார் நிலையில் உள்ளன.

இதுதவிர, தீயணைப்புத்துறையினர், பயிர்சி பெற்ற 1300 காவலர்கள் என அனைவரும் ஆங்காங்கே பணியமர்த்தப்படுகின்றனர். புயல் காற்றால் மின் கம்பங்கள் பாதிக்கப்படும். இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கான தங்குமிடங்கள் தயாராக உள்ளன. மண்டல அளவில் அமைக்கப்பட்ட குழுக்கள், முதல்கட்ட தகவல் அளிப்பவர்கள் தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மின்சாரம் தடைபடும் என்பதால், பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கும் வகையில் மேல் நிலைத் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்குள் போக வேண்டாம் என தகவல் அளித்துள்ளோம். மீறியும் சிலர் ஆழ்கடல் செல்கின்றனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள முதல் தகவல் அளிக்கும் நபர்கள் மீனவர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. ஆழ்கடலுக்கு யாராவது சென்றிருந்தால் கடலோர காவல்படை மூலம் மீனவர்களை கரைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வருவாய்த்துறை சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பாக அத்துறை செயலர் பி.சந்திரமோகன் கூறுகையில்,‘‘ வர்தா புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் தவிர, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களிலும் மழை இருக்கும் என்பதால் அந்த மாவட்ட நிர்வாகங்களும் எச்சரிக்கையுடன் இருக்க அம்மாவட்ட கள அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது’’ என்றார்.

தமிழகத்தில் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:

வர்தா புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 4 நிலைகளில் அடையாளம் காணப்பட்டு, தேவையான மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போதைய வானிலை அறிக்கை அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக்குழுக்கள் விரைந்துள்ளன. தேவையான உணவு, சுகாதார வசதிகள் தங்குமிடங்களில் செய்யப்பட்டுள்ளன. வர்தா புயலில் இருந்து 100 சதவீதம் மககளை பாதுகாக்க தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது.

பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல், அதிகாரிகள் அறிவுறுத்தல் பேரில் நடந்து கொள்ள வேண்டும். மாநில அளவில் 1070, மாவட்ட அளவில் 1077 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் பொதுமக்கள் பேரிடர் தொடர்பான உதவியை நாடலாம். நவம்பர் மாதம் போதுமான மழை கிடைக்காமல் பற்றாக்குறை நிலவியது. டிசம்பரில் கூடுதல் மழை கிடைத்தாலும் அதை உரிய முறையில் பாதுகாத்து, மக்களுக்கு அசவுகரியங்கள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மாவட்ட நிர்வாகங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x