Published : 31 Jul 2014 01:12 PM
Last Updated : 31 Jul 2014 01:12 PM

சென்னைக்கு ரூ.16 கோடியில் 100 புதிய சிற்றுந்துகள்: பேரவையில் ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை மாநகர மக்களிடையே சிற்றுந்துகள் ஏகோபித்த வரவேற்பு இருப்பதை கருத்தில் கொண்டு மேலும் 100 புதிய சிற்றுந்துகள் 16 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டு, சென்னை மாநகரில் உள்ள, பல்வேறு வழித் தடங்களில் இயக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு:

"சென்னை மாநகர மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், போக்குவரத்து இணைப்பில்லா பகுதிகளிலிருந்து அருகிலுள்ள பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் விமான நிலையத்தை இணைக்கும் வகையில் 100 சிற்றுந்துகள் வாங்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு சென்னை மாநகர மக்களிடையே ஏகோபித்த வரவேற்பு இருப்பதை கருத்தில் கொண்டும், பெருகி வரும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டும், மேலும் 100 புதிய சிற்றுந்துகள் 16 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டு, சென்னை மாநகரில் உள்ள, பல்வேறு வழித் தடங்களில் இயக்கப்படும்.

1,200 புதிய பேருந்துகள்!

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளை நவீனப்படுத்தும் வகையில், பல ஆண்டுகளுக்கு மேல் இயக்கப்படும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 2014 – 2015-ஆம் ஆண்டில், 253 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் 1,200 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.

விபத்துக்கான இழப்பீட்டுத் தொகையான 39 கோடியே 73 லட்சம் ரூபாயினை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் செலுத்தாததால் 544 அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த 544 அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை மீட்கும் வகையில், 39 கோடியே 73 லட்சம் ரூபாயினை அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழிவகை முன்பணமாக அரசு வழங்கும்.

மாவட்ட தலைநகரங்களுக்கு இணையாக சில மாவட்டங்களின் இதர பகுதிகளில் மக்கள் தொகை, தொழில் வளர்ச்சி, வாகனங்களின் எண்ணிக்கை ஆகியவை அதிகரித்துள்ளன. இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள், ஓட்டுநர் உரிமம், நடத்துநர் உரிமம், புதிய வாகனம் பதிவு செய்தல் போன்ற பணிகளுக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்ல 15 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய வேண்டி உள்ளது. இதனை களையும் வகையில், 2 கோடியே 79 லட்சம் ரூபாய் செலவில், மண்மங்கலம், உசிலம்பட்டி, திருத்தணி மற்றும் செய்யார் ஆகிய பகுதிகளில் புதிய பகுதி அலுவலகங்கள் உருவாக்கப்படும்.

சிதம்பரம் மற்றும் திருச்செந்தூர் ஆகிய இடங்களில் உள்ள பகுதி அலுவலகங்கள், 1 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களாக தரம் உயர்த்தப்படும்.

அரசின் இந்த நடவடிக்கைகள், பொதுமக்கள் நெரிசலின்றி, குறித்த நேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றடையவும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு வெகு விரைவில் சென்று வரவும் வழிவகுக்கும்" இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x