Published : 15 Aug 2015 11:07 AM
Last Updated : 15 Aug 2015 11:07 AM

சுதந்திர தின சிறப்பு நினைவலைகள்: 12 வயதில் சிறை சென்ற ‘தோழர்’ மீனா

தம்மைச் சுற்றி இருந்தோரை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்த அந்த எளிமையான பெண் மறைந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.

தளர்ந்திருந்த பஞ்சு உடல், வேகம் குறைந்துவிட்ட பேச்சு. இது எதுவும் பாதிக்காத கம்பீரம் அவரது தோற்றத்தில், பார்வையில், கை அசைவில் என எப்போதும் இருந்தது. அவர்தான் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீராங்கனை மீனா கிருஷ்ணசாமி(90). சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள் என் றாலே தொலைக்காட்சிகளும், வானொலிகளும் முதலில் நாடுவது இவரைத்தான். சுதந்திரப் போர் மட்டுமல்ல வர்க்கப் போரிலும் தனது மகத்தான பங்களிப்பைச் செலுத்திய பெண் இவர்.

2006, ஏப்ரல் 23-ல் ஜனநாயக மாதர் சங்க அலுவலகத்தில் உலக புத்தக தின சிறப்பு நூல் வாசிப்புக் கூட்டம் நடந்தது. பாப்பா உமாநாத், மைதிலி சிவராமன் போன்றோர் பெண்களுக்கு புத்தக வாசிப்பின் அவசியத்தை தெளிவாக எடுத்துச் சொன்ன அந்தக் கூட்டத்தில் வந் திருந்தோரை உத்வேகம் கொள்ள வைக்கும் உரை நிகழ்த்த மீனா கிருஷ்ணசாமி வந்திருந்தார். சிறைக்குள் தான் படித்த புத்த கங்கள் எப்படி காங்கிரஸ் இயக் கத்தில் இருந்து தன்னை பொது வுடைமை இயக்கத்துக்குக் கொண்டுச் சேர்த்தது என்பதை வரலாற்றின் தடத்தில் இருந்து எடுத்துரைத்தார் மீனா.

கூட்டம் நிறைவு பெற்றதும், திருவல்லிக்கேணி மசூதி தெருவில் இருந்து மீனாவை அவரது இல்லத்துக்குக் கொண்டு விடும் பொறுப்பை மைதிலி சிவராமன் எனக்கு வழங்கியிருந்தார். அன்று அவரது அன்பும், வாஞ்சையும், பார்வை மங்கியிருந்தாலும் புன்னகை மாறாத ஒளி பொங்கும் கண்களோடு ‘காம்ரேட்’ (தோழர்) என்று என்னை அழைத்த அந்தக் குரலை என்றைக்கும் என்னால் மறக்க முடியாது.

அந்த சிறிய தூரத்தைக் கடப் பதற்குள் பல புதிய செய்திகளை என்னோடு பகிர்ந்து கொண்டார் அவர். இனி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஸ்டார் தியேட்டர் அருகே இருக்கும் அவரது இல்லத்துக்கு வந்துபோவது என்று முடிவெடுத்தேன் நான்.

அப்படியாக ஒரு வாய்ப்பை, வங்கி ஊழியர் மாத இதழான பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிட்டி இதழுக் காக ஏற்படுத்திக் கொண்டோம். மாதம் ஒரு விருந்தினரை எங்கள் ஆசிரியர்க் குழு கூட்டத்துக்கு அழைத்துப் பேச வைப்பதும், அந்தக் கலந்துரையாடலில் மிளிரும் கருத்துகளை அடுத்த இதழில் வாசகர்களுக்குப் படைப்பதுமாக 37 முக்கிய மனிதர்களது கருத்து களை வாசகர்களிடம் கொண்டு சேர்த்தோம். 2006 ஆகஸ்ட் இதழுக் காக ஜூலை மாத ஆசிரியர்க் குழு கூட்டத்தில் கலந்துகொள்ள மீனா இசைவு தெரிவித்தார். அன்று அவரது பேச்சையும், சுதந்திர காலத்துப் பாடலையும் அவரது வாயிலாகக் கேட்ட ஆசிரியர் குழுவினர் ஆச்சரியம் அடைந்தனர். வாசகர்களோ அவரது பேட்டியைப் படித்து சிலிர்த்துப் போயினர்.

காரணம் சுதந்திர வேட்கைக்காக தன்னலம் கருதாத அவர், தனது இளமைக் காலத்தின் பெரும் பகுதியை சிறையிலேயே கழித்தவர். தனது தாய் லக்ஷ்மி பாய் போலவே சுதந்திரப் போராட் டங்களில் தீவிரமாக ஈடுபட்டவர். 12 வயதிலேயே சுதேசி துணி மறிய லில் ஈடுபட்டு கைதாகி, நீதிபதியிடம் 16 வயது என்று பொய் சொல்லி சிறை சென்றவர்.

1942-ல் 'வெள்ளையனே வெளி யேறு' போராட்டத்தில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டு ஜபல்பூர் சிறையில் 13 மாதங்கள் அடைக்கப்பட்டிருந்தார்.

சிறையில் இருந்தபோதுதான் பொதுவுடைமை நூல்களை நிறைய படித்து கம்யூனிஸ்ட் கட்சி யின்பால் ஈர்க்கப்பட்டார்.

மதுரையில் சோஷியலிஸ்ட் கட்சியின் கிளையை உருவாக்கி அதன் செயலாளராகப் பணியாற்றி வந்த எஸ்.கிருஷ்ணசாமியை . கரம் பிடித்தார். தம்பதி இருவருக்கும் வேலை கிடைக்காமல் வறுமையின் பிடியால் சிக்கித் தவித்தபோது தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் உதவியால் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் இந்தி ஆசிரியை வேலை கிடைத்து, அந்தப் பள்ளியிலேயே 28 ஆண்டு கள் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

சுதந்திர தாகம் தீராதிருந்த அவர், தம்மால் இயன்றவரை பொது வாழ்விலும், கட்சி நிகழ்வுகளி லும் பங்கேற்று அனைவரையும் உத்வேக மூட்டிக்கொண்டே இருந் தார். சுதந்திர வேட்கை, பாட் டாளிகள் நலன், பெண் விடுதலை போன்ற லட்சியங்கள் பால் அர்ப் பணிப்போடு செயலாற்ற அடுத் தடுத்த தலைமுறைகளுக்கு அறை கூவல் விடுத்தவாறே அவர் விடைபெற்றார்.

சாதி சடங்குகளைத் துறந்த அவரது தீர்மானமான வாழ்வுக்கு மதிப்பளித்து, அவரது இறுதி நிகழ்வுகள் எந்த மதச் சடங் குகளும் தவிர்த்தே நடந்தேறியது.



கட்டுரையாளர்: எஸ். வி.வேணுகோபாலன்
தொடர்புக்கு - sv.venu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x