Published : 01 Sep 2015 08:12 PM
Last Updated : 01 Sep 2015 08:12 PM

சிவாஜி கணேசன் சிலை மணிமண்டபத்துக்கு மாற்றப்படும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

மெரினா கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி கணேசன் சிலை, சென்னை அடையாறில் கட்டப்படவுள்ள அவரது மணிமண்டபத்துக்கு மாற்றம் செய்யப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் சிவாஜி கணேசன் சிலை 2006-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது என்று சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவரது கோரிக்கையைப் பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கடந்தாண்டு ஜனவரி 23-ம் தேதி உத்தரவிட்டது. ஓராண்டுக்கு மேலாகியும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால் உயர் நீதிமன்றத்தில் நாகராஜன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ் அக்னி கோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட அமர்வு, சிவாஜி கணேசன் சிலையை அகற்றுவது தொடர்பாக அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செய்தி, விளம்பரம் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் மூ.ராசாராம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சென்னை உயர் நீதிமன்றம் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன். ஒருபோதும் நீதிமன்றத்தை அவமதித்தது கிடையாது. இவ்வழக்கை விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், அடையாறில் ஆந்திர மகிளா சபா அருகில் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்த மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டதும், மெரினா கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி கணேசன் சிலை, மணிமண்டபத்துக்கு இடம் மாற்றம் செய்யப்படும்.

நிர்வாகக் காரணங்களால்தான், இவ்வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த தாமதமானதே தவிர, வேண்டுமென்றே உயர்நீதிமன்ற உத்தரவு மீறப்படவில்லை. இந்த மனுவை ஏற்றுக் கொண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, சிவாஜி கணேசனுக்கு எப்போது மணிமண்டபம் கட்டத் தொடங்கி, முடிக்கப்படும் என்று அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜியிடம் நீதிபதிகள் கேட்டனர். அதுகுறித்து அரசிடம் கருத்து கேட்டுத் தெரிவிப்பதாக அவர் கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இதற்கிடையே, சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாகரன், சிவாஜிகணேசன் சிலையை அகற்றுவது தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனுதாக்கல் செய்திருப்பதாகவும், அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அந்த மனு, வரும் 21-ம் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் சதீஷ் அக்னி கோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் உத்தரவிட்டனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x