Published : 22 Aug 2015 12:01 PM
Last Updated : 22 Aug 2015 12:01 PM

சிபிஐ வழக்கில் உள்நோக்கம் உள்ளது: ஆ.ராசா விளக்கம்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தன் மீது சென்னை சிபிஐ புதிதாக பதிவு செய்துள்ள வழக்கில் உள்நோக்கம் இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா உட்பட 17 பேர் மீது சிபிஐ புதிதாக வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக ராசாவின் வீடு உட்பட 20 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 19-ம் தேதி) சோதனை நடத்தினர்.

ஆ.ராசா விளக்கம்:

இந்நிலையில், சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஆ.ராசா, "என் மீது சிபிஐ புதிதாக பதிவு செய்துள்ள வழக்கில் உள்நோக்கம் இருக்கிறது.

என் மீதான வழக்குகளில் டெல்லி சிபிஐ-க்கும், சென்னை அதிகாரிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளதாக நினைக்கிறேன். எனது சொத்துக் கணக்கு முழுவதும் இணையதளத்தில் உள்ளது.

கடந்த 2004 - 2010 காலகட்டத்தில் நான் சொத்துக் குவிப்பில் ஈடுபடவில்லை என டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரி மூலம் விளக்கம் அளித்துள்ளேன்.

சிபிஐ விசாரணை அதிகாரி, விஜய் பிரியதர்ஷினி கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் சிபிஐ நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், நானோ எனது குடும்ப உறுப்பினர்களோ வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கவில்லை என குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நிலையில், வேண்டுமென்றே எந்த முகாந்தரமும் இல்லாமல் தேர்தல் வரும் நேரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உண்மைகளை விளக்கி சென்னை சிபிஐ அலுவலகத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன்" இவ்வாறு ராசா தெரிவித்தார்.

'அரசியல் காரணங்களுக்காகவே'

அரசியல் காரணங்களுக்காகவே ஆ.ராசா மீது சிபிஐ புதிய வழக்கு தொடர்ந்திருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், "ஆ.ராசா மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்ததோடு, சுமார் 20 இடங்களில் சி.பி.ஐ. சோதனையும் நடைபெற்றதாகவும், ஏதோ ஆவணங்களையெல்லாம் கைப்பற்றியதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

அது பற்றி கழக அலுவலகத்தில் ராசா என்னைச் சந்தித்து, இது பற்றிய முழு விவரங்களையும் என்னிடம் விளக்கினார்.

அந்த விளக்கத்தை உரிய அதிகாரியிடமும், செய்தியாளர்களிடமும் அவரையே விளக்கிக் கூறுமாறு தெரிவித்திருக்கிறேன்.

அவர் என்னிடம் கூறும்போது, 13-11-2013 அன்று சி.பி.ஐ.யின் விசாரணை அதிகாரியாக இருந்தவர் நீதிபதியின் முன்பாகவே ராஜாவின் மீதோ, அவருடைய குடும்பத்தினர் மீதோ எந்தவிதமான சொத்துக் குவிப்பும் இல்லை என்று தெரிவித்திருப்பதாகவும் சொன்னார்.

ஆனால் இந்த நிலையில் சென்னை சி.பி.ஐ. அதிகாரி, ராசா மீதும், மற்றும் அவர் குடும்பத்தினர், நண்பர்கள் மீதும் புதிய ஒரு வழக்கைத் தொடுத்திருப்பது வேடிக்கையாக உள்ளது!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அமைச்சர்களாக இருந்த கழகத்தினர் மீது தொடர்ந்து அரசியல் ரீதியாக பழி வாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ராசா மீது ஏற்கெனவே வழக்கு தொடுத்து, அதன் மீதான விசாரணைகள் எல்லாம் முடிவுறும் கட்டத்தில், அண்மையில் பொதுத் தேர்தல் வரவிருக்கின்ற நேரத்தில் வேண்டுமென்றே இப்படியெல்லாம் சோதனைகள் செய்வதாக செய்திகளை வரச் செய்திருப்பது அரசியல் காரணங்களுக்காக என்றே நினைக்கத் தோன்றுகிறது.

2ஜி வழக்கும்..விசாரணையும்..

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர் திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக ஆ.ராசா மீது சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஆ.ராசா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், ஆ.ராசா, அவரது மனைவி பரமேஸ்வரி, உறவினர் பரமேஷ்குமார், ராசாவின் நண்பரும் கோவை செல்டர்ஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குநருமான கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவன இயக்குநர் ரஹானா பானு (2ஜி வழக்கில் சிபிஐ விசாரணையின்போது தற்கொலை செய்துகொண்ட சாதிக்பாட்சாவின் மனைவி) உட்பட 17 பேர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஐ அதிகாரிகள் புதிதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து 17 பேருக் கும் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை திடீரென சோதனை நடத்தினர். பெரம்பலூரில் உள்ள ஆ.ராசாவின் வீடு, ரஹானாபானு மற்றும் குடும்பத்தினர் வசித்து வரும் வீடுகள், ஆ.ராசாவின் அண்ணன் ஆ.கலியபெருமாளின் பெரம்பலூர் மோட்டார் வாகன நிறுவனம், பெரம்பலூர் மற்றும் அரியலூரில் உள்ள ஐடிசி ஏஜென்ஸி அலுவலகங்கள், சாதிக்பாட்சாவின் நண்பரும் ஆடிட்டருமான சுப்பிரமணியன் வீடு, கோவையில் உள்ள கிருஷ்ணமூர்த்தியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் அதற்கான ஆவணங்கள், சொத்து ஆவணங்கள், ரசீதுகள், வருமான வரி கணக்கு விவரங்கள் உட்பட ஏராளமான ஆவணங்களை கைப்பற்றியிருப்பதாகவும், இதுகுறித்த விசாரணையை தொடங்கியிருப்பதாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x