Published : 16 May 2016 02:33 PM
Last Updated : 16 May 2016 02:33 PM

சின்னம் தவிர்த்து எண்ணம் பார்த்தால் நாடு உருப்படும்: டி.ராஜேந்தர்

சின்னம் பார்த்து ஒட்டுப் போடக்கூடிய இந்த நாட்டிலே என்றைக்கு நல்ல எண்ணம் பார்த்து ஒட்டு போடும் நிலை வருகிறதோ அன்றைக்கு தான் இந்த நாடு உருப்படும் என்றார் டி.ராஜேந்தர்.

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. சென்னை தி.நகரில் நடிகர் மற்றும் இயக்குநர் டி.ராஜேந்தர் தனது வாக்கினை பதிவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் டி.ஆர் பேசியது "லட்சிய திராவிட இயக்கத்தில் தலைவர், நடிகர், இயக்குநர் என்ற முறையில் அல்லாமல் ஒரு சாதாரண குடிமகன் என்று வாக்களித்திருக்கிறேன். என் மகன் சிம்பு கூட அனைவரும் ஒட்டு போட வேண்டும் என்பதற்காக ஒரு பாட்டே பண்ணியிருக்கிறார். மழை பெய்தாலும் கூட ஆர்வத்தோடு வந்து வாக்களித்த மக்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். யாருமே ஒட்டுரிமையை இழந்து நிற்கக்கூடாது.

திரையுலக பிரபலமாக இருந்தாலும் நான் வரிசையில் எல்லாம் நிற்க மாட்டேன் என்று சொல்லாமல் வரிசையில் தான் நிற்க விரும்புகிறேன். நான் சட்டத்தை மட்டுமே மதிக்க விரும்புகிறேன். சட்டத்தை மதிக்கும் அந்தளவுக்கு மக்கள் சரியான சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தற்போது நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா, பணநாயகம் இருக்கிறதா என்று பெரிய பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. மக்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது என்று சொல்லும் போது எனக்கு வாக்காளர்களைக் கொச்சைப்படுத்துவது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது. படித்த மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். பாமர மக்கள் தெளிவாகவும் இருக்கிறார்கள், நெளிவு சுழிவாகவும் இருக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்.

யார் பணம் கொடுத்தாலும் கையில் இருக்கக்கூடிய அந்த நோட்டை பார்க்காதீர்கள். உங்களுடைய அடுத்த 5 வருட வாழ்க்கையை நிர்ணயக்கக் கூடியது இந்த ஒட்டு. மக்களுக்கு என்ன திட்டம் போட்டுட்டு அதில் நாம் என்ன ஆதாயம் அடையுறது என திட்டம் போடுபவர்களை மக்கள் மனதில் வைத்துக் கொண்டு ஒட்டு போட வேண்டும் என்பது தான் என் வாதம். உங்களுடைய 5 வருட எதிர்கால வாழ்க்கையை தொலைத்துவிடாதீர்கள்.

வெள்ளைக்காரர்கள் இந்த நாட்டைவிட்டு சென்றுவிட்டாலும் இந்த நாட்டில் இருக்கும் கொள்ளைக்காரர்களிடம் இருந்து எப்படி மீட்பது என்று நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். நாம் எந்த கட்சி சார்பாகவும் பேசவில்லை, நடுநிலைமையோடு பேசுகிறேன். யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி, சட்டமன்றத்திற்கு சென்றாலும் சரி தட்டிக் கேட்க வேண்டும்.

சின்னம் பார்த்து ஒட்டுப் போடக்கூடிய இந்த நாட்டிலே என்றைக்கு நல்ல எண்ணம் பார்த்து ஒட்டு போடும் நிலை வருகிறதோ அன்றைக்கு தான் இந்த நாடு உருப்படும். தேர்தலில் யார் நிற்கிறார் அவருடைய தகுதி என்ன என்று தெரிந்து கொள்ளாமல் ஒரு தேர்தல் நடக்கிறது என்றால் நாம் சிந்திக்கப்பட வேண்டிய விஷயம். இவை எல்லாம் என்றைக்கு கலையப்படுகிறதோ, அன்று தான் இந்த நாடு முன்னேறும்" என்று தெரிவித்தார் டி.ராஜேந்தர்.