Published : 02 Aug 2015 01:27 PM
Last Updated : 02 Aug 2015 01:27 PM

சிதம்பரத்தில் சசிபெருமாள் ஆதரவாளர் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சசிபெருமாள் ஆதரவாளர் ஒருவர் செல்போன் கோபுரம் மீது ஏறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

சிதம்பரம் காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முத்துவேல் என்பவரின் மகன் சந்தோஷ்(23). பிபிஏ பட்டதாரியான இவர், சமூக நல இயக்கம் நடத்தி வருகிறார். சசிபெருமாளின் தீவிர ஆதரவாளர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் சசிபெருமாள் இறந்த தகவலை அறிந்து மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை 6 மணியளவில் சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் செல்போன் கோபுரம் மீது திடீரென சந்தோஷ் ஏறினார்.

கோபுரத்தின் மீது சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்து கொண்டு, ‘சசிபெருமாள் கோரிக் கையை அரசு நிறைவேற்ற வேண்டும்’ என்று வலியுறுத்தியபடி மதுவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார். சிதம்பரம் வட்டாட் சியர் முரளிதரன், டிஎஸ்பி சுந்தர வடிவேல் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், போலீஸார், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்குமாறு சந்தோஷிடம் கேட்டுக் கொண்டனர்.

அதனை அவர் ஏற்க மறுத்து அங்கேயே அமர்ந்திருந்தார். பின்னர், காலை 10 மணி அளவில் அவரது தந்தை மற்றும் நண்பர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு, போராட்டத்தை கைவிட்டு கீழே இறங்கினார். பின்னர், சிதம்பரம் போலீஸார் அவரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். கடந்த மாதம் சிதம்பரத்துக்கு சசிபெருமாள் வந்தபோது இதே செல்போன் கோபுரம் மீது 150 மீட்டர் உயரத்தில் ஏறிநின்று சசிபெருமாள் போராடியதும் அவருக்கு சந்தோஷ்தான் உதவி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x