Published : 25 Apr 2016 07:52 AM
Last Updated : 25 Apr 2016 07:52 AM

சாலையில் செல்லும் போது திடீரென்று தீப்பிடித்து எரிவதை தடுக்க கார்களில் ஏசி பயன்பாட்டை குறைக்க தீயணைப்புத் துறை அறிவுரை

சாலையில் செல்லும்போது திடீரென்று தீப்பிடித்து எரிவதை தடுக்க, கார்களில் செல்பவர்கள் ஏசி பயன்பாட்டை குறைக்க வேண்டும். தேவையில்லாத நேரத்தில் ஏசியை நிறுத்திவிட வேண்டும் என்று தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 22-ம் தேதி கே.கே.நகரில் இருந்து 5 பெண்கள், சிறுமி என மொத்தம் 8 பேர் காரில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு சென்று கொண் டிருந்தனர். பிற்பகல் 3 மணி அளவில் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் கார் திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது. உடனடியாக காரை நிறுத்திவிட்டு அனைவரும் கீழே இறங்கினர். தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதே போல் கடந்த 25-ம் தேதி சென்னை அசோக் நகர் காசி திரையரங்கம் அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப் பிடித்து எரிந்தது. கடந்த 2 மாதங் களில் மட்டும் சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் சாலையில் சென்று கொண்டிருந்த மற்றும் நிறுத்தி வைக் கப்பட்டிருந்த சுமார் 50 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன.

கார்கள் தீப்பிடித்து எரிவது பற்றி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “வெயில் அதிகமாக இருப்பதால் வெப்பமும் அதிகமாக உள்ளது. கார்களில் ஏசி தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் கம்ப்ரஸர் அதிகமாக வெப்பம் அடைகிறது. காரின் இன்ஜினிலிருந்து வெளியாகும் வெப்பமும் சேர்ந்து அதிக சூடாகி தீ விபத்து ஏற்படுகிறது.

கார்களில் செல்பவர்கள் ஏசி பயன்பாட்டை குறைக்க வேண்டும். தேவையில்லாத நேரத்தில் ஏசியை நிறுத்திவிட வேண்டும். வெளியூர் களுக்கு பயணிப்பவர்கள் 100 கிமீ சென்ற பிறகு, காரை அரை மணி நேரம் நிறுத்தி வைத்துவிட்டு பின்னர் புறப்பட்டுச் செல்ல வேண்டும். சாலை யில் சென்று கொண்டிருக்கும்போது, அதிகப்படியான வெப்பத்தால் காரின் டயர் வெடித்து விடுகிறது. அதனால் காரின் டயர்களுக்கு நைட்ரஜன் காற்றை மட்டும் நிரப்ப வேண்டும். கார்களை அவ்வப்போது சர்வீஸ் செய்ய வேண்டும். 5 ஆண்டுகளுக்கு மேலான கார்களை முறையாக பரா மரிக்க வேண்டும். இதனை பின்பற்றி னாலே கார்கள் திடீரென்று தீப்பிடித்து எரிவதை தடுக்க முடியும்” என்றனர்.

பரவும் வதந்தி

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களில் பெட்ரோல், டீசலை முழு கொள்ளளவுக்கு நிரப்ப வேண் டாம். அப்படி நிரப்பினால் வெயில் காரணமாக பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் நடக்கின்றன. எனவே வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங் களில் பாதி அளவுக்கு பெட்ரோல், டீசலை நிரப்பிக்கொள்ள வேண்டும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளதாக பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

இந்தியன் ஆயில் விளக்கம்

இதுபற்றி இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்ட போது, “இது தவறான செய்தி. பொது மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். வாகனங்களை தயாரிக் கும்போதே அனைத்து விதமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளும் பின்பற்றப்படுகின்றன. அந்த வகை யில் ஒரு வாகனம் எந்த அளவு எரி பொருளுடன் பாதுகாப்புடன் இயங்க முடியுமோ அதைக் கணக்கில் கொண்டுதான் டேங்க் வடிவமைக் கப்படுகிறது. எனவே கோடை மற்றும் குளிர் காலங்களில் வாகனத்தின் டேங்க்கில் முழு கொள்ளளவுக்கும் பெட்ரோல், டீசலை நிரப்பலாம். அதற்கு ஏற்றவகையில்தான் வாகன மும், வாகனத்தின் டேங்க்கும் வடி வமைக்கப்பட்டுள்ளன” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x