Last Updated : 02 Nov, 2014 02:15 PM

 

Published : 02 Nov 2014 02:15 PM
Last Updated : 02 Nov 2014 02:15 PM

சாம்பல் நகரமாகும் முத்து நகரம்

ஒரு காலத்தில் தமிழகத்தின் முத்து நகரம் என்று கொண்டாடப்பட்ட தூத்துக்குடி இப்போது கொஞ்சம் கொஞ்சமாக சாம்பல் நகரம் ஆகிக்கொண்டிருக்கிறது. தொழில் வளர்ச்சியின் பெயரால், ஏற்கெனவே ரசாயன தொழிற்சாலைகள் நீராதாரத்தை நஞ்சாக்கிக்கொண்டிருக்கும் சூழலில், பெருகும் அனல் மின் நிலையங்களும், அபாயகரமான தொழிற்சாலைகளும் காற்றையும் நஞ்சாக்கிக்கொண்டிருக்கின்றன.

தென்னிந்தியாவின் முக்கிய தொழில் கேந்திரம்

துறைமுக நகரமான தூத்துக்குடி பல்வேறு வகையிலும் தொழிற்துறைக்கு வசதியான இடத்தில் அமைந்திருப்பதால், இங்கு பல்வேறு தொழிற்சாலைகளும் வேகமாக வளரத் தொடங்கின. இதனால், தென்னிந்தியாவின் முக்கியமான தொழில் கேந்திரங்களில் ஒன்றாக தூத்துக்குடி உருவெடுத்தது. ஆனால், மறுபுறம் நீரும் நிலமும் காற்றும் மாசுபடத் தொடங்கியது. இந்நிலையில், சமீப காலமாக தமிழகத்தில் மின்சார உற்பத்திக்காக நிறுவப்படும் அனல் மின் நிலையங்கள் பலவும் தூத்துக்குடியைச் சுற்றிலுமே அமைக்கப்படுவதால், சாம்பல் பரவும் நகரமாக மாறிக்கொண்டிருக்கிறது.

ஆண்டு இறுதியில் மின் உற்பத்தி இலக்கு 4000 மெகா வாட்

தூத்துக்குடி பகுதியின் மின் உற்பத்தி இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே சுமார் 4000 மெகா வாட் அளவை எட்டும் நிலையில் உள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்குச் சொந்தமானது தூத்துக்குடி அனல் மின் நிலையம். 210 மெகா வாட் திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் இங்கு 1050 மெகாவாட் மின்சாரம் நீண்ட காலமாக உற்பத்திசெய்யப்படுகிறது.

இந்த் பாரத் நிறுவனம் கீழ அரசடியில் அமைத்துள்ள அனல் மின் நிலையம் மூலம் 210 மெகா வாட், சாமிநத்தம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அனல் மின் நிலையம் மூலம் 450 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்திசெய்கிறது. ஸ்டெர்லைட் நிறுவனம் தூத்துக்குடி சிப்காட் பகுதியில் அமைத்துள்ள அனல் மின் நிலையம் மூலம் 80 மெகா வாட் திறன் கொண்ட 2 அலகுகள் மூலம் 160 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்திசெய்கிறது.

கோஸ்டல் பவர்ஜென் நிறுவனம் மேலமருதூரில் 1200 மெகா வாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை அமைக்கும் பணி முடிவடைந்தது. இங்கு மின் உற்பத்தி சமீபத்தில்தான் தொடங்கியது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வாரியமும் நெய்வேலி அனல் மின் நிலையமும் இணைந்து தூத்துக்குடியில் 1000 மெகா வாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை அமைத்துள்ளன. மிக விரைவில் இங்கு மின் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது.

மேலும் 6000 மெகா வாட் இலக்கு

இவை தவிர, அடுத்த சில ஆண்டுகளில் மேலும் சுமார் 6000 மெகா வாட் அளவுக்கான மின் உற்பத்தித் திட்டங்கள் இப்பகுதியில் திட்டமிடப்படுகின்றன. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் துறைமுகப் பகுதியில் 1000 மெகா வாட் அனல் மின் நிலையம், கோஸ்டல் எனர்ஜென் நிறுவனம் சார்பில் மேலமருதூரில் 1600 மெகா வாட் அனல் மின் நிலையம், இந்த் பாரத் நிறுவனம் சார்பில், மணப்பாட்டில் 1320 மெகா வாட் அனல் மின் நிலையம், ஸ்பிக் நிறுவனம் சார்பில் தூத்துக்குடியில் 550 மெகா வாட் அனல் மின் நிலையம் என்று 6,000 மெகா வாட் இலக்கோடு வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன அடுத்தடுத்த திட்டங்கள்.

தமிழகத்தின் மின் உற்பத்தி மையம்

மிகச் சில ஆண்டுகளில், இவை யாவும் செயல்பாட்டுக்கு வரும் நாளில், 10,000 மெகா வாட் உற்பத்தித் திறனுடன் தமிழகத்தின் மின் உற்பத்தி மையமாக தூத்துக்குடி மாறிவிடும். இதனால், தூத்துக்குடி துறைமுகத்தின் வருவாய் பெருகும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். தமிழகத்தின் மின் தேவையும் பெரும் அளவில் பூர்த்திசெய்யப்படும். ஆனால், தூத்துக்குடி மக்களின் வாழ்க்கை என்னவாகும்?

இதுதான் தூத்துக்குடி மாவட்ட மக்களின் இன்றைய தலையாய கேள்வி.

ஓரிடத்தில் குவியும் ஆபத்து

இந்தியாவில் வேறு எந்தப் பகுதியிலும் இத்தனை அனல் மின் நிலையங்கள் ஒரே இடத்தில் இல்லை. 4,000 மெகா வாட் மின் உற்பத்திக்கே தூத்துக்குடியின் நுரையீரல் திணறுகிறது. நகரத்தைப் பல சமயங்களில் புகை சூழ்கிறது. காற்றில் பரவும் நிலக்கரி புகைக்கும் சாம்பலுக்கும் உப்பளங்களில் படியும் சாம்பல் ஒரு சான்று. மேலும், 6000 மெகா வாட் உற்பத்தி தொடங்கினால், தூத்துக்குடி வாழத் தகுதியற்ற நகரமாகிவிடும் என்கிறார்கள் பொது நல விரும்பிகளும் அக்கறையாளர்களும். அரசாங்கம் மேலும் மேலும் இங்கு அபாயத் தொழிற்சாலைகளும், மின் உற்பத்தி நிலையங்களும் குவிவதைத் தடுத்து நிறுத்துவதுடன், ஏற்கெனவே செயல்படும் நிறுவனங்களும் சூழலுக்கு உகந்த வகையில் செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.

காணாமல் போகும் உப்பளங்கள்

தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க செயலர் ஏ.ஆர்.ஏ.எஸ். தனபாலன்:

கீழ அரசடி பகுதியில் உள்ள தனியார் அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் நிலக்கரி சாம்பல் கீழ அரசடி, அய்யனார்புரம், பட்டினமருதூர், தருவைகுளம் பகுதியில் உள்ள உப்பளங்களில் படிகின்றன. இதேபோல் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இருந்து கடல் காற்று வீசும் நேரத்தில் நிலக்கரி சாம்பல் முத்தையாபுரம், முள்ளக்காடு பகுதியில் உள்ள உப்பளங்களில் படிகிறது. உப்பின் நிறம் மாறுகிறது.

ஸ்டெர்லைட் அனல்மின் நிலையம்.

உப்பின் தரம் பாதிக்கப்பட்டு குறைந்த விலைக்கே விற்க முடிகிறது. உப்பளங்கள் அருகே குவித்து வைக்கப்பட்டுள்ள உப்பு குவியல் மீதும் நிலக்கரி சாம்பல் படிவதால் மேல் பகுதி முழுவதும் கருப்பாக மாறிவிடுகிறது. அவற்றை அகற்றிவிட்டுத்தான் உப்பை விற்பனை செய்ய வேண்டியுள்ளது. இதனால், பெருமளவு உப்பு வீணாவதுடன், கூடுதல் செலவும் ஏற்படுகிறது. நாங்கள் மின் உற்பத்தியை எதிர்க்கவில்லை. ஒரே இடத்தில் இத்தனை அனல்மின் நிலையம் கூடாது. என்றார் அவர்.

நினைக்கவே கொடூரமாக இருக்கிறது!

க.கனகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்:

ஒவ்வொரு அனல் மின் நிலையம் அமைக்கும்போதும் தனித்தனியே சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை சமர்ப்பிக் கிறார்கள். ஆனால், இத்தனை அனல் மின் நிலையங்கள் ஒட்டுமொத்தமாக அமையும்போது எத்தகைய பாதிப்புகளை உருவாக்கும் என்று முழுமையாக யாரும் ஆய்வு செய்ததாகத் தெரியவில்லை. அப்படியொரு ஆய்வு அவசியம் செய்யப்பட வேண்டும்.

ஆண்டுக்கு 2 கோடி டன் நிலக்கரி

இந்திய நிலக்கரியைக் கொண்டு, 1000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்வது என்றால், ஓர் ஆண்டுக்கு 55 லட்சம் டன் நிலக்கரி வேண்டும். அப்படியென்றால், இப்போதைய நிலையில் (4000 மொகாவாட்) தூத்துக்குடி பகுதிக்கு ஆண்டிற்கு 2 கோடி டன் நிலக்கரி தேவைப்படும். இதில் 1 கோடி டன்னுக்கும் அதிகமான நிலக்கரி லாரிகள் மூலமாகக் கொண்டுசெல்லப்படும். சராசரியாக ஒரு லாரிக்கு 20 டன் எனக் கொண்டால் 5 லட்சம் லாரிகளில் ஏற்றிச்செல்லப்படும். மிகக் குறைவாக ஒரு லாரியிலிருந்து 50 கிலோ நிலக்கரி கீழே கொட்டுவதாக வைத்துக்கொண்டால்கூட ஆண்டுக்கு 25 ஆயிரம் டன் நிலக்கரி பாதையில் சிதறி நிலத்தைப் பாழாக்கும்.

நச்சுத் துகள்கள்

நிலக்கரியைப் பயன்படுத்தி இயங்கும் இந்த அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியாகும் சல்பர் ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு, காற்றில் கலக்கும் துகள்கள் ஆகியவை சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பை உருவாக்குபவை. முக்கியமாக உடல் நலத்தைச் சிதைக்கக் கூடியவை. இந்தியாவில் காற்றில் சல்பர் ஆக்ஸைடு அதிகமாக உள்ள இடங்களில் 8-வது இடத்தில் தூத்துக்குடி இருக்கிறது. தமிழகத்தில் முதலிடம். காரணம் என்ன? நிலக்கரி பயன்பாடு.

மேலும் மேலும் நாம் அதை அதிகமாக்கிக்கொண்டே போனால், ஒரு நகரம் என்னவாகும்? தூத்துக்குடி மக்களை அரசாங்கம் காக்க வேண்டும்.

தூத்துக்குடி துறைமுகத்தில் வந்து இறங்கியுள்ள நிலக்கரி.

குடும்பத்தோடு வசிக்கவே அஞ்சுகிறார்கள்

கே. சங்கரநாராயணன், மருத்துவர்:

பெருகும் ஆலைகளால் தூத்துக்குடி மாசு நகரம் ஆகிவிட்டது. சுவாசிக்கும் காற்றிலிருந்து காதில் விழும் சப்தம் வரை மாசு, மாசு, மாசு... மக்கள் ஏராளமான உடல் நலக் கோளாறுகளை அனுபவிக்கிறார்கள். முக்கியமாக, பல்வேறு விதமான அழற்சி, காசநோய், புற்றுநோய் பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. இப்போதெல்லாம், வெளியூர்களிலிருந்து வேலைநிமித்தம் இங்கு வருபவர்கள் குடும்பங்களை இங்கே அழைத்து வர விரும்புவதில்லை. நகரம் எப்படி வாழத் தகுதியற்றதாகிவிட்டது என்பதற்கு ஒரு சான்று இது!

சங்கரநாராயணன்

மக்களுக்காக ஆலைகளா, ஆலைகளுக்காக மக்களா?

மா. கிருஷ்ணமூர்த்தி, சுற்றுச்சூழல் ஆர்வலர்:

1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் ஒரு அனல்மின் நிலையம் 600 ஏக்கர் நிலங்களைப் பயன்படுத்துகிறது. 2,952,000 கியூபிக் மீட்டர் அளவு தண்ணீர் பயன்படுத்துகிறது. 14,240 டன் நிலக்கரியை நாளொன்றுக்கு பயன்படுத்தி 5024 டன் எரிசாம்பலைக் கழிவாக வெளியே தள்ளுகிறது. இதிலிருந்து வெளிப்படும் அனலின் அளவு கணக்கிடப்படவில்லை. 100 மெகாவாட் திறன் உள்ள ஒரு நிலக்கரி அனல் மின்னுற்பத்தி நிலையம் 25 பவுண்ட் அல்லது 11.33 கி.கிராம் நச்சுப் பொருளான பாதரசத்தை ஆண்டுதோறும் வெளியேற்றுகிறது. எனில், 10,000 மெகா வாட் மின் உற்பத்தி நடைபெறும்போது தூத்துக்குடி என்னவாகும்? இங்குள்ள தாவரங்கள், விலங்கினங்கள், கடல்வாழ் உயிரினங்கள் எல்லாமே பாதிக்கப்படும். உயிரோட்டமான மன்னார் வளைகுடா சீரழியும். முக்கியமாக நம்முடைய உடல் நலம் சிதையும்.

இந்த் பாரத் அனல்மின் நிலையம்.

மாசைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

கே. கோகுல்தாஸ், சுற்றுச்சூழல் நலப் பொறியாளர், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்:

தூத்துக்குடி பகுதியில் அமைந்துள்ள அனைத்து அனல்மின் நிலையங்களையும் நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். எந்த அனல்மின் நிலையமும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறாத வகையில் கண்காணிப்பு மேற்கொண்டுவருகிறோம். மீறும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x