Published : 14 Jun 2016 01:55 PM
Last Updated : 14 Jun 2016 01:55 PM

சர்வதேச தடகளப் போட்டியில் பங்கேற்கும் ஒடுகத்தூர் அரசுப் பள்ளி மாணவி: துருக்கி செல்ல பலரும் உதவி

சர்வதேச பள்ளி மாணவர்களுக்கு இடையிலான தடகள விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் ஒடுகத்தூர் அரசுப் பள்ளி மாணவி பங்கேற்க உள்ளார்.

வேலூரில் இருந்து 35 கி.மீ தொலைவில் இருக்கிறது ஒடுகத்தூர் கிராமம். இங்குள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவி ஹேமமாலினி. இவரது தந்தை நீலகண்டன். விவசாயி. குடும்பத்தின் வறுமையால் படிப்பதற்கே சிரமப்பட்ட ஹேமமாலினி விளையாட்டில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.

ஈட்டி எறிதலில் ஈடுபாட்டுடன் பயிற்சி எடுத்தவர் 18 வயதுக்கு உட்பட்டோர் பிரவில் தேசிய அளவில் சாதனை படைத்தார். துருக்கியில் ஜூலை 11-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெற சர்வதேச அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையிலான தடகள சாம்பியன் போட்டியில் பங்கேற்க தேர்வாகி உள்ளார்.

இதற்காக, பள்ளி விளையாட்டு மைதானத்தில் காலை 5.30 மணிக்கும் மாலை 5 மணிக்குப் பிறகும் தீவிர பயிற்சியில் ஈடுபடும் ஹேமமாலினிக்கு நவீன பயிற்சிக் கூடங்கள் இல்லை. ஆனால், வெற்றிக்கான மன உறுதியுடன் பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.

இதுகுறித்து, ஹேமமாலினி கூறும்போது, ‘‘தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான போட்டியில் 39.69 மீட்டர் ஈட்டி எறிந்து புதிய தேசிய சாதனையை படைத்தேன். கேரளாவில் இளைஞர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டி கடந்த மே மாதம் நடந்தது.

இதில், 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 41 மீட்டர் ஈட்டி எறிந்து வெண்கலப் பதக்கம் பெற்றேன். அதனைத்தொடர்ந்து, சர்வதேச பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகளுக்கான இந்திய அணித் தேர்வு நடந்தது. இதில், 40.68 மீட்டர் ஈட்டி எறிந்து தேர்வானேன். துருக்கியில் நடைபெறும் போட்டியில் 45 மீட்டர் ஈட்டி எறிய பயிற்சி எடுத்துவருகிறேன்’’ என்றார்.

(ஹேமமாலினியைக் கொண்டாடிய சக மாணவிகள். அடுத்தபடம்: பயிற்சியில் ஈடுபட்ட ஹேமமாலினி.)

இதுகுறித்து ஹேமமாலினியின் பயிற்சியாளரும் உடற்கல்வி இயக்குநருமான கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, ‘‘ஹேமமாலினி 9-ம் வகுப்பில் இருந்து ஈட்டி எறிதலில் பயிற்சி பெறுகிறார். அவரது ஆர்வத்தைப்போல நாளுக்கு நாள் ஈட்டி எறியும் தொலைவும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

அவருக்கு நவீன முறையில் பயிற்சி அளிக்கக்கூடிய வசதிகள் எங்கள் பள்ளியில் இல்லை. ஆனால், எங்கள் பள்ளி ஆசிரியர்கள் மாவட்ட தடகள சங்கத் தலைவர் இளங்கோவன், திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அலுவலர் புகழேந்தி ஆகியோரின் உதவி மற்றும் ஆலோசனையால் பயிற்சி செய்து வருகிறார்.

துருக்கி செல்வதற்காக அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏ நந்தகுமார் ரூ.20 ஆயிரம் வழங்கினார். இதேபோல, மற்றவர்களும் உதவி செய்து வருகின்றனர்.

எங்கள் பள்ளியில் ‘மல்டி ஜிம்’ மற்றும் ‘டிரெட்மில்’ வசதி இருந்தால் ஹேமமாலினிக்கு கூடுதல் பயிற்சி கொடுக்க முடியும். அவரைப்போலவே, எங்கள் பள்ளியில் தடகளப் போட்டியில் சாதனை படைத்துவரும் மாணவி களும் பயிற்சி பெறுவதற்கு வசதி யாக இருக்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x