Published : 22 Jan 2015 08:20 AM
Last Updated : 22 Jan 2015 08:20 AM

முறைகேடாக தொலைபேசி இணைப்புகள் பயன்படுத்திய வழக்கு: தயாநிதி மாறனின் மாஜி உதவியாளர், சன் டி.வி ஊழியர்கள் 2 பேர் கைது

தொலைபேசி இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தயாநிதி மாறனின் முன்னாள் உதவியாளர் மற்றும் சன் டி.வி ஊழியர்கள் 2 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, 323 பிராட் பேண்ட் தொலைபேசி இணைப்பு களை முறைகேடாக தனது சகோதரர் கலாநிதி மாறனின் நிறு வனமான சன் டி.வி.க்கு வழங்கிய தாக ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து விசாரணை நடத்துமாறு சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து தயாநிதி மாறன், பிஎஸ்என்எல் பொது மேலா ளராக இருந்த கே.பிரம்மநாதன், துணைப் பொது மேலாளராக இருந்த எம்.பி.வேலுச்சாமி ஆகி யோர் மீது சிபிஐ போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தயாநிதி மாறனின் தனிச் செயலாளராக முன்பு இருந்த வி.கவுதமன், சன் டி.வி.யின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், எலக்ட்ரீஷியன் எல்.எஸ்.ரவி ஆகியோரை நேற்று முன்தினம் இரவில் டெல்லி சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரும் நேற்று பகல் 1.15 மணிக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ முதன்மை நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழக் கறிஞர்கள் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷ், ஏ.ரமேஷ் இருவரும் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் வாதிட்ட தாவது:

கடந்த 2004 முதல் 2007 வரை மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், தொலைபேசி இணைப்பு முறைகேட்டில் ஈடுபட்டதாக 2013-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப் பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் சென்னை மற்றும் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடத்தப் பட்டது. இவர்கள் சுமார் 10 முறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கவுதமன், கண்ணன், ரவி ஆகியோரை கைது செய் துள்ளனர். 3 பேரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வந்த நிலையில் இவர்களை கைது செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதுபோன்ற வழக்குகளில் எந்தச் சூழ்நிலையில் கைது செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது. அந்த வழிகாட்டுதல்கள்படி இவர்கள் கைது செய்யப்படவில்லை.

இந்த வழக்கு அரசியல் உள் நோக்கத்துக்காக தொடரப்பட்டது. எனவே, இவர்களை நீதிமன்றக் காவலில் வைக்கக்கோரும் சிபிஐ தரப்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.

இதையடுத்து சிபிஐ தரப்பு வழக்கறிஞர் கே.சூரியநாராயணன் வாதிடுகையில், “இந்த வழக்கில் ஆரம்பகட்ட விசாரணை மட்டும் முடிந்துள்ளது. கைது செய்யப்பட் டுள்ள வர்களிடம் விரிவான விசா ரணை நடத்த வேண்டி உள்ளது. ஏற்கெனவே நடத்தப்பட்ட விசா ரணையில் இவர்கள் முழு ஒத் துழைப்பு அளிக்கவில்லை. எனவே இவர்களை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெ.கிருஷ்ணமூர்த்தி 45 நிமிடங்களுக்கு விசாரணையை ஒத்திவைத்தார். பின்னர், `கவுதமன் உட்பட 3 பேரையும் பிப்ரவரி 4-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து 3 பேரையும் 5 நாள் காவலில் வைத்து விசா ரிக்க அனுமதி கோரி சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதே நேரத்தில் கைது செய்யப்பட் டவர்கள் சார்பில் ஜாமீன் மனுக் களும் தாக்கல் செய்யப்பட்டன. சிபிஐ காவல் கேட்டு தாக்கல் செய் யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை 27-ம் தேதி நடக்கும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x