Published : 03 Aug 2015 01:23 PM
Last Updated : 03 Aug 2015 01:23 PM

சசிபெருமாள் உடலை வாங்க மறுப்பு: மதுவிலக்கு கோரி 4-வது நாளாக உறவினர்கள் போராட்டம்

சசிபெருமாள் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் நடத்தும் போராட்டம் இன்று (திங்கள்கிழமை) நான்காவது நாளாக தொடர்கிறது.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிணவறையில் சசிபெருமாள் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்தினால் மட்டுமே சசிபெருமாள் சடலத்தை பெற்றுக்கொள்வோம் என்று அவரது குடும்பத்தினர், உறவினர்கள் திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றனர்.

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நேற்று காந்தி சிலைக்கு முன்பாக உண்ணாவிரதம் இருக்கச் சென்றனர். அப்போது போலீஸ் உண்ணாவிரதத்துக்கு தடை விதித்தது. மேலும், உண்ணாவிரதம் இருக்க முயன்றவர்களை கைது செய்து நேற்று மாலை விடுவித்தது.

இந்த நிலையில், இன்று (திங்கள்கிழமை) சசிபெருமாள் சொந்த ஊரான இடங்கணசாலை மேட்டுக்காடு கிராமத்தில் அவரது வீட்டிலேயே அமர்ந்து சசிபெருமாள் குடும்பத்தினரும், உறவினர்களும் உண்ணாவிரதப் போராட்டம் செய்து வருகின்றனர்.

சசிபெருமாள் மனைவி, இரு மகன்கள், மகள் உட்பட உறவினர்களோடு மதுவுக்கு எதிரான பல்வேறு அமைப்புகள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

இது குறித்து சசிபெருமாள் மகன் விவேக் கூறுகையில், ''அப்பாவின் சடலத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு அரசு அதிகாரிகள் சிலர் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து எதுவும் பேசவில்லை. அதனால் மதுவிலக்கு அமல்படுத்துதினால் மட்டுமே நாங்கள் அப்பாவின் சடலத்தைப் பெற்றுக்கொள்வோம்.

இன்று மாலை 4 மணிக்கு மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம். அப்பாவின் கோரிக்கையை நிறைவேற்றும் வரை, அஹிம்சை வழியில் போராடுவோம்'' என்றார்.

போராட்டத்தில் பங்கேற்று வரும் தேசிய மக்கள் கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் கூறும்போது, ''பாதிக்கப்பட்ட மக்கள் போராடி வரும் நிலையில் முதல்வர் ஜெயலலிதா சசிபெருமாள் உயிரிழப்பு குறித்து இரங்கல் அறிக்கையைக் கூட தெரிவிக்கவில்லை. ஒரு போராளியின் வீரம் மண்ணோடு மண்ணாக புதைக்கப்படுகிறது.

சசிபெருமாளின் கோரிக்கையான மதுவிலக்கை அமல்படுத்தும்வரை உண்ணாவிரதம் தொடர்ந்துகொண்டே இருக்கும். தமிழகத்தைச் சார்ந்த பல்வேறு இயக்கங்களின் நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

மது ஒழிப்பு ஜோதி என்ற பெயரில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரிடம் மது ஒழிப்புக்கான மனுவைக் கொடுக்க உள்ளோம். சேலம் மாவட்டத்தில் நடைபெறும் இந்தப் போராட்டத்தை மாநிலம் முழுவதும் விரைவில் விரிவுபடுத்த உள்ளோம்'' என்றனர்.

இந்நிலையில், தமிழகம் முழுக்க ஆங்காங்கே டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x