Published : 18 Dec 2016 05:34 PM
Last Updated : 18 Dec 2016 05:34 PM

சசிகலா முதல்வராக பொறுப்பேற்க ஜெயலலிதா பேரவை தீர்மானம்: அமைச்சர் உதயகுமார் தகவல்

தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுகவின் ஜெயலலிதா பேரவை யில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலராகவும் தமிழக முதல்வராகவும் சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுகவின் ஜெயலலிதா பேர வைக் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. வருவாய்த் துறை அமைச்சரும், ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் பேரவையின் 50 மாவட்டச் செயலர் களும் ஜெயலலிதா நினைவிடத் துக்கு நேற்று வந்திருந்தனர். பேரவைக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மான நகலை ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்று, கட்சிப் பணியை 100 சதவீதம் ஆற்ற வேண்டும். அதிமுக அரசுக்கு தலைமை தாங்கி, ஜெயலலிதா எப்படி மாநில அளவிலும், தேசிய அளவிலும் முதன்மை இடத்திலே வழிநடத்தினாரோ, அதேபோல கட்சியையும் ஆட்சியையும் வழி நடத்த வேண்டும். காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வராகி, ஜெயலலிதா விட்டுச் சென்ற அரசுப் பணியையும் சசிகலா தலைமை ஏற்று செயல்படுத்த வேண்டும்.

இது தொடர்பாக ஜெயலலிதா பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வைத்து, அவரது ஆசியைப் பெற்றோம். அதிமுகவுக்கு சசிகலா தலைமையேற்க வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். மக்கள் சேவையில் அனுபவம் பெற்ற சசிகலா, அரசியல் சேவையும் ஆற்ற வேண்டும். அதிமுகவுக்கு தலைமை யேற்கும் வரை சசிகலாவை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கூறும்போது, ‘‘எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு, அன்றிலிருந்து இன்று வரை ஜெயலலிதாவை பாதுகாத்தவர் சசிகலா. மருத்துவமனையில் ஜெய லலிதா 75 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றபோது உடனிருந்தவர். அதனால் அதிமுக பொதுச் செயலராக பொறுப்பேற்க சசிகலாவைத் தவிர வேறு யாரும் தகுதியானவர் இல்லை’’ என்றார்.

இந்நிகழ்ச்சியின்போது அமைச் சர்கள் சேவூர் ராமச்சந்திரன், கடம்பூர் ராஜூ ஆகியோர் உடனிருந்தனர். அதைத் தொடர்ந்து, போயஸ் கார்டன் சென்று, சசிகலாவிடம் ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை வழங்கினர்.

தமிழக வருவாய்த் துறை அமைச்சரும், ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் பேரவையின் 50 மாவட்டச் செயலர்களும் ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x