Published : 29 Dec 2016 04:19 PM
Last Updated : 29 Dec 2016 04:19 PM

சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தது ஏன்?- அதிமுக விளக்கம்

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணங்களை அக்கட்சி தனது பொதுக்குழு தீர்மானங்கள் மூலம் விளக்கியுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை நியமித்து அக்கட்சியின் பொதுக்குழு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றியது. இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் விடுத்த அழைப்பை சசிகலா ஏற்றுக்கொண்டு அதிமுக பொதுச் செயலாளராக நியமனம் ஆவதற்கு சம்மந்தம் தெரிவித்தார்.

முன்னதாக, சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக நியமித்து, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம்:

"அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஒப்பற்ற தலைவி ஜெயலலிதாவை இழந்து கட்சி கலங்கி நிற்கிறது. அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வகுத்து அளித்த கொள்கைகளின் பாதையில் அதிமுகவை இனி யார் வழிநடத்திச் செல்வது என்ற நிலை ஏற்பட்டபோது, ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அனைவரது நெஞ்சங்களிலும் சசிகலாவின் பெயர்தான் எழுந்தது.

எனவே, அதிமுகவை வழிநடத்திச் செல்லத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது; கொள்கைகளை வகுப்பது; கட்சியின் அன்றாட செலவுகளுக்கு வங்கிக் கணக்குகளை இயக்க பொருளாளருக்கு அதிகாரம் வழங்குவது மற்றும் அனைத்து செயல்பாடுகளையும் ஏற்று நடத்த அதிகாரம் வழங்குவது ஆகிய பணிகளுக்காக கட்சிப் பொதுச் செயலாளர் நியமிக்கப்படுவது மிகவும் இன்றியமையாத பணியாக தற்போது இருக்கிறது. அதனை முடிவு செய்யும் அதிகாரம் கழக சட்ட திட்ட விதி - 19, பிரிவு - 8ல் பொதுக்குழுவுக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.

கழக சட்ட திட்ட விதி - 20, பிரிவு - 2 :பொதுச் செயலாளர் தமிழ்நாட்டில் உள்ள கழகக் கிளைகளின் அடிப்படை உறுப்பினர்களாலும், புதுச்சேரி - ஆந்திரம் - கர்நாடகம் - கேரளம் மகாராஷ்டிரா - புதுடெல்லி - அந்தமான் போன்ற மாநிலக் கழகங்களில் அடங்கிய கிளைக் கழகங்களின் உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கழக சட்ட திட்ட விதியின்படி, அதிமுகவின் பொதுச் செயலாளரை, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

அவ்வாறு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை கழக உறுப்பினர்களாலும், பொதுக்குழு உறுப்பினர்களாலும், தலைமைக் கழக நிர்வாகிகளாலும், மாவட்டக் கழகச் செயலாளர்களாலும், கழகத்தின் அனைத்து அமைப்புகளாலும், அதிமுகவை வழி நடத்தத் தகுதி படைத்தவர் என ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கும் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியும் 'சின்னம்மா' என்று நம் அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவரும், ஜெயலலிதா அவர்களுடன் 33 வருடங்கள் வாழ்ந்து அவரை தன் கண் இமை போல் பாதுகாத்து, அவரது நிர்வாகத் திறமைகளை அருகில் இருந்து கற்றுக் கொண்ட, நாம், சசிகலாவையே அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பணியாற்ற உகந்தவர் என்று இந்தப் பொதுக்குழு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது.

எம்.ஜி.ஆர். 24.12.1987 அன்று மறைந்ததைத் தொடர்ந்து, அதிமுகவுக்கு ஏற்பட்ட சோதனைகளால் கட்சி பிளவுபட்டபோது, அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க ஜெயலலிதாவுக்கு சசிகலா உறுதுணையாக இருந்து, உயிரை பணயம் வைத்துப் பாடுபட்டார். கட்சி இரண்டுபட்டதால் முடக்கப்பட்ட 'இரட்டை இலை' சின்னத்தை மீட்டெடுக்கும் முயற்சியிலும் ஜெயலலிதாவுக்கு சசிகலா உற்ற துணையாக இருந்தார்.

ஜெயலலிதாவை கொலை செய்திட திமுக-வினர் நடத்திய தாக்குதலில், ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலா முகத்திலும், கண்ணிலும் கொடுங் காயங்கள் ஏற்பட்டு இறை அருளால் உயிர் தப்பினார்.

1996-ஆம் ஆண்டு ஜெயலலிதாவை பழிவாங்க அப்போதைய திமுக ஆட்சியாளர்கள் தொடர்ந்த பொய் வழக்குகளில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, சசிகலா 11 மாதம் சிறை வைக்கப்பட்டார். ஜெயலலிதாவுக்கு எதிராக சாட்சி சொல்ல வற்புறுத்தி பல்வேறு துன்பங்களை கட்சியின் அரசியல் எதிரிகள் அளித்த போதும், ஜெயலலிதாவுக்கு மட்டுமே விசுவாசமாக இருந்து, அந்தத் துன்பங்களை எல்லாம் தாங்கிக் கொண்டவர் சசிகலா.

ஜெயலலிதாவே பகிரங்கமாக 'எனக்காக சசிகலா மிகுந்த சிரமங்களை அனுபவித்திருக்கிறார். என்னுடன் பிறக்காத சகோதரி அவர். என் அம்மாவின் இடத்தை என் வாழ்வில் நிரப்பிய பெண் அவர்' என்று பெருமையுடன் பல ஆண்டுகளுக்கு முன்பே பத்திரிகை பேட்டிகளிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் குறிப்பிட்டிருக்கிறார்.

அத்தகைய போற்றுதலுக்குரிய பங்களிப்பினை அதிமுக வளர்ச்சிக்கு வழங்கியவர் சசிகலா என்பது கட்சியினர் அனைவரும் நன்கு அறிந்த உண்மை.

எனவே, கழக சட்ட திட்ட விதி - 20, பிரிவு - 2ல் கூறப்பட்டுள்ளபடி, கழகப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படும் வரை, சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக நியமித்து இந்தப் பொதுக்குழு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது.

கட்சிப் பொதுச் செயலாளருக்கு கழக விதிகள் தரும் அனைத்து அதிகாரங்களையும் சசிகலா அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் பெற்று கழக நிர்வாகத்தை நடத்தி வர இந்தப் பொதுக்குழு ஒருமனதாக அங்கீகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றுகிறது" என்று அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் தம்பிதுரை உள்ளிட்டோர் இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தனர்.

சசிகலா தலைமையின் கீழ்...

சசிகலா தொடர்பாக 'சசிகலா தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்ற உறுதி ஏற்றல்' என்று தலைப்பில் நிறைவேற்றப்பட்ட அதிமுக தீர்மானத்தின் விவரம்:

அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அம்மா ஆகியோரது தன்னலமற்ற அயராத உழைப்பால், அறிவால், ஆற்றலால், தியாகத்தால் உருவான இயக்கம் அதிமுக. தமிழ்நாட்டின் உரிமைகளை நிலை நாட்டவும், உலகெங்கும் வாழுகின்ற தமிழர்களுக்கு உறுதுணையாய் இருக்கவும், தமிழ்நாட்டில் சமூக நீதி காக்கவும், ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் எல்லோருக்கும் பயன்படும் வளர்ச்சியை அடைந்திட வேண்டும் என்ற லட்சியத்தோடு அதிமுகவின் அரசியல் பயணம் நடைபெற்று வருகிறது.

இந்த ஒளி விளக்கு அணையா விளக்காக காலமெல்லாம் ஒளிரும் வண்ணம் அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவரும் கருத்தாகப் பணியாற்றிட வேண்டும். அதிமுகவை வழி நடத்தி வந்த ஜெயலலிதா நம்மிடையே இல்லாத இந்தச் சூழலில், கழகத்தின் எதிர்காலத்தை பொறுப்பும், அக்கறையும், திறமையும், உழைப்பும், அறிவும், அனுபவமும் கொண்ட ஒருவர் கையில் ஒப்படைப்பது மிக, மிக இன்றியமையாதது.

எனவே தான், கடந்த 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவோடு சேர்ந்து கழகப் பணிகளை ஆற்றுவதில் அனுபவம் பெற்று கழகத் தொண்டர்களை ஜெயலலிதா அறிந்து வைத்திருந்ததைப் போல தானும் அறிந்து வைத்திருக்கும் சசிகலாவிடம் கழகத்தின் தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.

அதிமுக வரலாற்றில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த நேரத்தில், தீய சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு இடம் தராமல் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கட்டுக்கோப்போடும், அதிமுக இதுவரை நமக்கு அளித்திருக்கும் அனைத்துப் பெருமைகளுக்கும், அங்கீகாரங்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக தலைமைக்கு விசுவாசத்தோடும் பணியாற்றிட இந்தப் பொதுக்குழு உறுதி ஏற்கிறது' என்று அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x