Last Updated : 27 Apr, 2017 08:03 AM

 

Published : 27 Apr 2017 08:03 AM
Last Updated : 27 Apr 2017 08:03 AM

சசிகலாவின் எழுச்சியும் வீழ்ச்சியும்

அதிமுக பொதுச்செயலாள ராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக திரை மறைவில் அதிகாரம் செலுத்தி வந்த வி.கே.சசிகலா, திரைக்கு வெளியே வந்தது கடந்த 2016 டிசம்பர் 5. அன்றுதான் ஜெயலலிதா காலமானார்.

ஜெயலலிதா வீட்டிலேயே சுமார் 30 ஆண்டுகள் வசித்தாலும் அவர் உயி ரோடு இருக்கும்வரை சசிகலாவால் தன்னை சிறு அளவில்கூட வெளிப்படுத் திக் கொள்ள முடியவில்லை. ஆனால், ஜெயலலிதா மறைந்ததும் அதிமுகவை யும், தமிழக அரசையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்தார். அதுவே அவரது வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.

சாதாரண குடும்பப் பெண்ணாக இருந்த சசிகலாவின் வாழ்க்கை திரு மணத்துக்குப் பிறகு மாறத் தொடங்கியது. திமுக பின்னணி கொண்ட மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ம.நடராஜனை சசிகலா திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தை அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி நடத்தி வைத்தார்.

நடிகையாக தமிழ்த் திரையுலகில் ஜொலித்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆதரவுடன் தீவிர அரசியலில் இறங்கி னார். 1983-ல் அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட் டார். அரசியலுக்கு புதியவரான ஜெய லலிதாவுக்கு ஆலோசனைகள் வழங்க வும், அரசியல் வளர்ச்சிக்கு வழிகாட்டவும் அப்போது கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சந்திரலேகாவை எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்டார்.

இதனால் ஜெயலலிதாவுக்கு நெருக்க மானார் சந்திரலேகா. அந்த நேரத்தில் கடலூர் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராஜன், தனது மனைவி சசிகலாவை சந்திரலேகாவிடம் அறிமுகப்படுத்தினார்.

அந்த காலகட்டத்தில் சென்னை ஆழ்வார்பேட்டையில் தனது தம்பி திவாகரனுடன் இணைந்து வீடியோ கடை நடத்தி வந்தார் சசிகலா. சில படங்களின் வீடியோக்களை சந்திர லேகாவிடம் ஜெயலலிதா கேட்க, அவர் அவற்றை சசிகலாவிடம் வாங்கிக் கொடுத்தார். இப்படி வீடியோ கேசட்டு களை கொடுக்க போயஸ் கார்டன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த சசிகலா, ஜெயலலிதாவின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

ஜெயலலிதா - சசிகலா நட்பு வளர்ந்து கொண்டிருந்த கால கட்டத்தில் எஸ்.டி. சோமசுந்தரம், அழகு திருநாவுக்கரசர் ஆகியோர் ஜெயலலிதாவை அழைத்து மன்னார்குடியில் பொதுக்கூட்டம் நடத்தி னர். இதற்கு சசிகலாவும், திவாகரனும் ஏற்பாடு செய்தனர். இந்தக் கூட்டம் ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்ததால் அவரது முழு நம்பிக்கைக்கு உரியவராக சசிகலா மாறினார்.

மன்னார்குடி பொதுக்கூட்ட வெற்றிக் குப் பிறகு போயஸ் கார்டன் இல்லத் திலேயே குடியேறினார் சசிகலா. அன்றில் இருந்து அவரது வாழ்வில் ஏற்றம் தொடங்கியது. ஜெயலலிதா எங்கு சென்றாலும் அங்கு சசிகலாவும் செல்லத் தொடங்கினார். இருவரையும் தனித்துப் பார்க்க முடியாது என்ற நிலை உருவானது.

இந்நிலையில் 1987-ல் எம்.ஜி.ஆர். காலமானார். அப்போது ஜெய லலிதாவை அரசியலில் இருந்து ஓரங்கட்ட மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ராஜாஜி மண்டபத்தில் எம்.ஜி.ஆர். உடல் வைக்கப் பட்டிருந்தபோது ஜெயலலிதா அவமதிக் கப்பட்டார், அப்போது சசிகலாவும், நடராஜனும் தான் அவருக்கு உறு துணையாகவும், ஆறுதலாகவும் இருந்தனர்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவரானார். இதனால், உடைந்த அதிமுக ஜெயலலிதா தலைமையில் ஒன்றானது. இரட்டை இலை சின்னமும் கிடைத்தது. அதன்பிறகு 1991 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றது. முதல் முறையாக ஜெயலலிதா முதல்வரானார்.

1991-ல் ஜெயலலிதா முதல்வரானதும் சசிகலாவின் வளர்ச்சியும் தொடங்கியது. 1991 - 1996 வரை 5 ஆண்டு கால ஆட்சியில் சசிகலா குடும்பத்தினர் கட்சியிலும், ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்தியதாக பல புகார்கள் எழுந்தன. அவற்றை உறுதிப்படுத்துவதுபோல சசிகலாவின் அக்கா மகன் சுதாகரனை, தனது வளர்ப்பு மகனாக அறிவித்த ஜெயலலிதா, மிகவும் ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்தார்.

1991-க்குப் பிறகு 2016-ல் மரணம் அடையும் வரை 15 ஆண்டுகள் ஜெய லலிதா ஆட்சியில் இருந்தார். ஆட்சியில் இல்லாத 10 ஆண்டுகளும் அரசியல் செல்வாக்குடனேயே இருந்தார். இந்த 25 ஆண்டுகளும் கட்சியிலும், ஆட்சியிலும் அனைத்தையும் தீர்மானிப்பவராக சசிகலா இருந்தார் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். கூட்டணி கட்சிகளுடன்கூட சசிகலாவே பேசுவார் என்பதை யாரும் மறுக்கவில்லை.

இப்படி திரைமறைவில் அதிகாரம் செலுத்தி வந்த சசிகலா, ஜெயலலிதா மரணம் அடைந்ததும் திடீரென திரையை விலக்கி அரசியலில் அடியெடுத்து வைத்தார். ஜெயலலிதாவுக்கு தாமே இறுதிச் சடங்குகள் செய்து அவரது அரசியல் வாரிசு தான்தான் என்பதை சொல்லாமல் சொன்னார்.

ஜெயலலிதா மரணம் அடைந்ததும் ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். ஆனாலும் முதல்வர் பதவியை கைப்பற்ற சசிகலா திட்டம் தீட்டினார். ஓபிஎஸ் முன்மொழிய அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியும், ஆட்சியும் கைக்கு வந்துவிட்டன என சசிகலா நினைத்த நேரத்தில், திடீரென போர்க்கொடி உயர்த்தினார் ஓபிஎஸ்.

இதனால் சசிகலாவின் பதவியேற்பு தாமதமானது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூவத்தூர் தனியார் விடுதியில் தங்க வைக் கப்பட்டனர். தன்னை ஆட்சியமைக்க அழைக்க ஆளுநர் தாமதப்படுத்த, கூவத்தூர் விடுதிக்குச் சென்று எம்.எல்.ஏ.க்களிடம் உணர்ச்சிமயமாக உரை யாற்றினார் சசிகலா. இனியும் பொறுத் துக் கொள்ள முடியாது என மத்திய அரசுக்கு எச்சரிக்கையும் விடுத்தார்.

ஆனால், சொத்துக் குவிப்பு வழக் கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியதும் காட்சிகள் மாறின. சசிகலாவுக்குப் பதில், பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். பெங்களூர் சிறைக்கு செல்லும் முன்பு மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் சமாதியில் ஓங்கி அடித்து சத்தியம் செய்தார் சசிகலா.

சிறைக்கு செல்லும் முன்பு கட்சியை வழிநடத்துவதற்காக தனது அக்கா மகன் டிடிவி தினகரனை துணைப் பொதுச் செயலாளராக்கினார். அவர் கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். சிறையில் இருந்தாலும் கட்சியை தனது கட்டுக்குள்ளேயே சசிகலா வைத்திருந்தார். அமைச்சர்கள் பலரும் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்தனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனே போட்டியிட்டார். ஆனால், இரட்டை இலை சின்னம் முடக்கம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீ்ட்டில் வருமானவரித் துறை சோதனை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து ஆகியவற்றுக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறத் தொடங்கியது. சசிகலாவின் அர சியல் வாழ்க்கை சரியத் தொடங் கியது.

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப் பட்டாலும் நம்பிக்கை இழக்காமல் தினகரன் பேசி வந்தார். ஆனால், இரட்டை இலை சின்னத்தை மீட்க தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். இது சசிகலாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டுள்ளது சசிகலாவை நிலைகுலையச் செய்துள்ளது.

இதனால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள, ஓபிஎஸ் அணியுடன் இணைய முதல்வர் பழனிசாமி பேச்சு நடத்த முயன்று வருகிறார். சசிகலா குடும்பத்தினர் அனைவரையும் கட்சியிலிருந்து நீக்கினால் மட்டுமே பேச்சு நடத்துவோம் என ஓபிஎஸ் அணி நிபந்தனை விதித்துள்ளது. அதனை ஏற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த டிச.31-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா அமர்ந்த இருக்கையில் அமர்ந்து பொதுச்செயலாளராக சசிகலா முறைப் படி பதவியேற்றார். ஆனால், 4 மாதங்கள் கூட முடியாத நிலையில் அதே அலுவலகத்தில் சசிகலாவின் படங்கள் இடம்பெற்ற பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன.

முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்படும் அளவுக்கு அரசியலில் வேகமாக வளர்ந்த சசிகலா, அதே வேகத்தில் வீழ்ச்சியை சந்தித்து உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x