Published : 26 Jul 2015 10:31 AM
Last Updated : 26 Jul 2015 10:31 AM

சங்க காலத்திலேயே வெளிநாடுகளோடு வர்த்தகம்: வணிகப் பெருவழிப் பாதையில் அமைந்த நகரம்

சிவகங்கை மாவட்டம், திருப்பு வனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை புதூரில் இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்த சங்ககாலத் தமிழர்கள், அப்போதே வெளிநாடுகளோடு வாணிபத் தொடர்பு வைத்திருந்ததற்கான தடயங்கள், சான்றுகள் மத்திய தொல்பொருள் துறையினரின் அகழ்வாராய்ச்சியில் கிடைத் துள்ளன.

ராமேசுவரம் அழகன்குளம் துறைமுகப்பட்டினத்துக்குச் செல்லும் வணிக பெருவழிப் பாதை யில், மதுரைக்கு அருகே அமைந் திருந்திருந்த வணிக நகரமாக இது இருந்துள்ளதாக தொல்லிய லாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெங்களூருவில் உள்ள இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழ்வாராய்வுப் பிரிவு சார்பில், திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் கடந்த மார்ச் மாதம் முதல் அகழ்வா ராய்ச்சி நடந்து வருகிறது. மத்திய தொல்லியல்துறை கண்காணிப் பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் உதவி தொல்லிய லாளர்கள் எம். ராஜேஷ், என். வீர ராகவன் அகழ்வாராய்ச்சி செய்து வருகின்றனர்.

இதில், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொன் மையான நகரம் புதையுண்டி ருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடு களும் கிடைத்துள்ளன.

இதுகுறித்து உதவி தொல்லிய லாளர் எம். ராஜேஷ் கூறியது:

கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் நடக்கும் அகழ்வாய்வில் சூது பவளம், பளிங்கு, அகேட் மணிகள், பச்சை, மஞ்சள், நீல நிறக் கண்ணாடி மணிகள் கிடைத்துள்ளன. இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் உள்நாட்டின் பிற பகுதிகளோடு வாணிபத் தொடர்பில் இருந்துள்ளனர்.

வரலாற்றின் தொடக்க காலத்திய செங்கல் கட்டிடச் சான்றுகள் கிடைப்பது மிகவும் அரிது. ஆனால், இங்கு அதிக அளவில் செங்கல் கட்டிடங்கள் உள்ளது ஆச்சரியமளிக்கிறது. குறிப்பாக, தென்தமிழகத்தில் அகழ் வாய்வில் கிடைக்கும் வெள்ளை வர்ணம் தீட்டப்பட்ட கருப்பு, சிவப்பு மண்பாண்டங்களும் இங்கு அதிகம் கிடைத்துள்ளன.

இதுவரை, தமிழகத்தில் கொங்கு பகுதியில் மட்டும் கிடைத்த ரசட் கலவை பூசப்பட்ட மண்பாண்டங்களும் இங்கு கிடைத்துள்ளன. ரசட் கலவையின் தாக்கம் இருப் பதை பார்க்கும்போது, கொங்கு பகுதியோடு இப்பகுதி மக்கள் வாணிபத் தொடர்பில் இருந் துள்ளது தெரியவந்தது.

சங்க காலத்தில் வைகை நதியின் வலது கரையில், பண்டைய வணிக பெருவழிப் பாதை இருந் துள்ளது. மதுரையிலிருந்து ராமேசு வரம் அழகன்குளம் துறைமுகப் பட்டினத்துக்கு கீழடி திருப்புவனம் வழியாக பாதை இருந்துள்ளது. மதுரைக்கு அருகாமையிலேயே உள்ள இந்த ஊர், வணிக நகரமாக இருந்துள்ளது. ஆனால், இந்நகரத்தின் பெயர் பற்றிய ஆதாரம் இன்னும் கிடைக்க வில்லை.

தமிழக தொல்லியல் துறையினர் ஏற்கெனவே மேற்கொண்ட ஆய்வில், ராமேசுவரம் அழகன் குளம் சங்ககால பாண்டியர் காலத்தில் துறைமுகப்பட்டினமாக இருந்ததற்கான சான்றாதாரங்கள் கிடைத்துள்ளன.

அழகன்குளத்தில் நடந்த அக ழாய்வில் பண்டைய ரோமானிய நாட்டின் உயர்ரக ரவுலட், ஹரிட்டைன் மண்பாண்டங்கள் கிடைத்தது போன்று, கீழடி பள்ளிச்சந்தை புதூரிலும் கிடைத்துள்ளது. அந்தவகையில் அழகன்குளம் துறைமுகப் பட்டினத்தையும் மதுரையையும் இணைக்கும் இடமாக கீழடி பள்ளிச்சந்தை புதூர் இருந்தி ருக்கலாம். மேலை நாடுகளுக்கு கடலில் பிரயாணம் செய்யும் வணிகர்கள் இந்த ஊரின் வழியாகச் சென்றிருக்கலாம். இங்கு கிடைத்துள்ள தடயங்கள், சான்றுகள் மூலம் இதை உறுதி யாகக் கூறலாம். அந்த வகையில் இந்த இடம் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக, தென்தமிழகத்தின் தொல்லியல் வரலாற்றை அறி யவும், வரலாற்று தொடக்க கால மான இரும்புக் காலத்தில் ஏற்பட்ட பண்பாட்டு உருமாற்றத்தை அறிந்து கொள்வதற்கும் இந்த அகழ்வாராய்ச்சி பேருதவியாக இருக்கும். மதுரையின் தொன் மையை அறியவும், இந்த ஆய்வு உறுதுணையாக இருக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x