Published : 25 Jan 2014 12:00 AM
Last Updated : 25 Jan 2014 12:00 AM

கோயிலுக்குள் காரில் வந்த ஜெயேந்திரர்- நடராஜர் கோயில் வரலாற்றில் முதன்முறையாக நடந்தது

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்குள் தனிக்கோயிலாக அமைந்துள்ள ஸ்ரீபாண்டிய நாயகர் கோயிலில், காஞ்சி சங்கர மடம் சார்பில் ரூ.4 கோடி செலவில் திருப்பணி செய்து குடமுழுக்கு செய்யப்படும் என காஞ்சிமட பீடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வந்த ஸ்ரீஜெயேந்திரருக்கு, பொது தீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து மேளதாளத்துடன் அழைத்துச் சென்று, சிறப்பு அர்ச்சனை மற்றும் தீபாராதனை செய்து பிரசாதம் அளித்து பொன்னாடை அணிவித்து கெளரவித்தனர்.

அதைத் தொடர்ந்து சிற்றம்பலமேடையில் ஏறி ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தியை தரிசனம் செய்த ஜெயேந்திரர், அடுத்து தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில், சிவகாமிஅம்மன் கோயில் ஆகியவற்றுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

அதைத் தொடர்ந்து திருப்பணிக்காக இடிக்கப்பட்டுள்ள ஸ்ரீபாண்டிய நாயகர் கோயில் என்கிற வள்ளி தெய்வானை உடனாகிய மயில் மீதமர்ந்த சண்முகர் கோயிலுக்குச் சென்று, கோயில் திருப்பணி செய்வது குறித்து பார்வையிட்டார். பின்னர் வள்ளி, தெய்வானை சமேத சண்முகரை தரிசனம் செய்தார்.

இதையடுத்து பீடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நிருபர்களிடம் பேசியதாவது, ‘’சிதம்பரம் கோயிலை தீட்சிதர்கள் நிர்வகிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. தீட்சிதர்கள் நல்லவர்கள், தீர்ப்பினால் சந்தோஷமாக உள்ளனர். நடராஜர் கோயிலில் தனிக்கோயிலாக உள்ள ஸ்ரீபாண்டிய நாயகர் கோயில், காஞ்சி சங்கர மடம் சார்பில் ரூ.4 கோடி செலவில் முழுமையாக திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்தப்படும். 3 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்குபவர்களுக்கு காஞ்சி சங்கர மடம் சார்பில் அங்கு கட்டிடம் கட்டி வேத பாடசாலை மற்றும் பள்ளி அமைத்து தரப்படும் என்றார். ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு வந்த ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கிழக்கு கோபுரவாயில் முன்பு உள்ள மொட்டை மண்டபம், நடன பந்தல் வழியாக 21 படி அருகே வரை காரில் வந்து இறங்கி கோயிலுக்குள் சென்றார். பின்பு சாமி தரிசனம் செய்துவிட்டு, அங்கிருந்து மேற்குவாயில் வரை நடந்தே சென்று, வெளிப்பிரகாரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் ஏறி சென்றார். கோயில் வளாகத்தில் தனி சன்னதியாக உள்ள சிவகாமி அம்மன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அங்கிருந்து காரில் புறப்பட்டு கிழக்கு கோபுர மொட்டை மண்டபம் வழியாக வெளியே சென்றார்.

நடராஜர் கோயில் வரலாற்றில் முதன்முறையாக கோயில் உள்பிரகாரத்தில் காரில் உள்ளே வந்து ஒருவர் தரிசனம் செய்தது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x