Published : 14 May 2016 04:29 PM
Last Updated : 14 May 2016 04:29 PM

கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்: ட்விட்டரில் விஜயகாந்த் பதில்

கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என ட்விட்டரில் விஜயகாந்த் பதிலளித்துள்ளார். ட்விட்டர் சமூக வலைத்தளத்தின் மூலம் விஜயகாந்த அவ்வப்போது பொதுமக்களுடன் கலந்துரையாடி வருகிறார். இதற்கென உருவாக்கப்பட்ட #TweettoVijayakant என்ற ஹாஷ் டேக் மூலம் விஜயகாந்த் மக்கள் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) விஜயகாந்த் ட்விட்டர் கலந்துரையாடலில் பங்கேற்றார்.

விஜயகாந்துக்கு கேட்கப்பட்ட கேள்விகளும் சில பதிலகளும்..

ஆட்சி அமைப்போம் என்று உங்களுக்கு நம்பிகை இருக்கிறதா?

உறுதியாக

அரசியல் கறை படிந்தத் துறையாக மக்களால் பார்க்கப்படுவது ஏன்?

அதிமுக, திமுக அரசியலில் இருப்பதாலேயே அவ்வாறு பார்க்கப்படுகிறது. இந்த பார்வை தேர்தலுக்குப் பின்னர் மாறிவிடும்.

இன்றுடன் பிரச்சாரம் முடிகிறது. இத்தனை நாள் பிரச்சாரத்தில் மக்கள் எதிர்பார்ப்பு என்னவென்று கணித்துள்ளீர்களா? உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி?

ஊழல்-லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும், இலவசம் இல்லாத ஆட்சி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும். இவையே மக்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தேர்தலில் உறுதியாக வெற்றி பெறுவேன்.

நான் ஒரு பி.இ. பட்டதாரி. எனக்கு அரசியலில் ஆர்வம் இருக்கிறது. அடுத்த தேர்தலில் எனக்கு வாய்ப்பளிப்பீர்களா?

அரசியல் மூலமாக மக்கள் பணியில் ஈடுபட இளைஞர்கள் முன்வருவது வரவேற்கத்தக்கது.

கடந்த 2 ஆண்டுகளாக வேலை இல்லை. நான் பி.இ. சிவில் பட்டதாரி. என்னைப் போல ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தர என்ன செய்வீர்கள்?

வேலையில்லா திண்டாட்டத்தை போக்க நிறைய திட்டங்கள் வைத்துள்ளோம்.

இலங்கை தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க என்ன செய்வீர்கள்?

நாங்கள் ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் உதவ தயாராக இருக்கிறோம்.

நீங்கள் ஆட்சிக்கு வந்தால் திருநெல்வேலி மக்களுக்கு என்ன செய்வீர்கள்?

திருநெல்வேலியில் என்னென்ன குறைகள் இருக்கிறதோ அதை அனைத்தையும் தீர்த்து வைப்போம்.

ஒருவேளை தொங்கு சட்டசபை வந்தால் யாருக்கு ஆதரவு கொடுப்பீர்கள? மறு தேர்தலுக்கு தயாரா?

எங்கள் கூட்டணி கட்சிகள் தான் ஆட்சி அமைக்கும்.

லஞ்சம், ஊழல் இல்லா தமிழகம் உருவாக என்ன செய்ய வேண்டும். அனைவருக்கும் வேலைவாய்ப்பு உருவாக தங்கள் கருத்து என்ன?

லோக் ஆயுக்தா, ஊழல் தடுப்புப் பிரிவு உருவாக்கப்படும்.

மருத்துவ பொது நுழைவுத் தேர்வு குறித்து உங்கள் கருத்து?

பொது நுழைவுத் தேர்வு நடத்துவதால் மருத்துவ சீட்டுகளுக்காக நடைபெறும் ஊழல் பேரங்கள் ஒழிக்கப்படும்.

ஓட்டுக்கு பணம் கொடு‌க்கு‌ம் கட்சிகளை பற்றி உங்கள் கருத்து?

நம் நாடு தாய்நாடு, ஓட்டுரிமையை விற்பது தாயை விற்பதற்கு சமம்.

உங்களை தவறாக சித்தரிக்கும் ஊடகங்களுக்கு உங்கள் பதில்.?

அதைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை.

உங்களை கோபக்காரராக இந்த சமூகம் பாரக்கிறதே ..இதற்கு உங்கள் பதில்?

கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்,

புதிய வாக்காளர்கள் காசு வாங்கிட்டு ஓட்டு போடமாட்டங்கன்னு எப்படி நம்பறீங்க ?

நிச்சயமாக பணம் வாங்க மாட்டங்க.

ஒருவேளை மக்கள் நலக் கூட்டணி தேர்தலில் தோல்வி அடைந்தால் தேர்தலுக்குப் பின்னரும் இந்த கூட்டணி தொடருமா?

தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை

திமுக, அதிமுக இரண்டு கட்சியையும் அடியோடு ஒழிக்க என்ன வழி..?

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

ஜெயலலிதா உங்களைப் பற்றி பிரச்சாரங்களில் விமர்சிக்காததன் காரணம்? அவருக்கு கருணாநிதி மட்டும்தான் எதிரியா?

அவர்கள் இருவரும் ஊழல்வாதிகள், நான் நேர்மையானவன்.

இந்த 5 ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சிய பற்றி ஒரே ஒரு வரில என்ன சொல்வீங்க

மந்திரிகள் பால்குடம் எடுத்தது, காவடி எடுத்ததுதான் மிச்சம்.

இந்த தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளதா?

திருப்திகரமாக இல்லை.

இவ்வாறாக விஜயகாந்த் பொதுமக்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x