Published : 19 Aug 2014 12:00 AM
Last Updated : 19 Aug 2014 12:00 AM

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் விதிமீறி விற்ற ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள கருவாடு பறிமுதல்: தி இந்து செய்தி எதிரொலி

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் விதிகளை மீறி விற்கப்பட்ட ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள கருவாடுகளை நிர்வாகக் குழு அதிகாரிகள் திங்கள்கிழமை அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் விதிகளை மீறி கருவாடு விற்பனை நடப்பதாக கடந்த 17-ம் தேதி ‘தி இந்து’ நாளிதழில் செய்தி வெளியானது. தமிழ்நாடு குறிப்பிட்ட பொருள்களின் அங்காடி (அமைவிடம் முறைப்படுத்துதல்) சட்டம் 1996-ன்படி கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளை மட்டுமே விற்க வேண்டும்.

ஆனால், காய்கறி மார்க்கெட்டில் கருவாடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து கோயம்பேடு அங்காடி வளாக நிர்வாகக் குழு முதன்மை அலுவலர் (பொறுப்பு) பாஸ்கரன் உத்தரவின்பேரில் உதவிப் பொறியாளர் ராஜன்பாபு தலைமையிலான ஊழியர்கள் திங்கள்கிழமை காய்கறி மார்க்கெட்டில் உள்ள அங்காடிகளில் சோதனை நடத்தினர். இதில் 18 அங்காடிகளில் விதிகளை மீறி கருவாடு விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தக் கடைகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள கருவாடுகளை ஊழியர்கள் பறிமுதல் செய்தனர். அவற்றை மார்க்கெட்டில் குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வரும் ராம்கி ஒப்பந்த நிறுவன ஊழியர்களிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘விதிகளை மீறி கருவாடு விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்டு 18 அங்காடி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். தொடர்ந்து இந்தச் செயலில் ஈடுபட்டால் அங்காடி உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x