Last Updated : 06 Feb, 2015 03:09 PM

 

Published : 06 Feb 2015 03:09 PM
Last Updated : 06 Feb 2015 03:09 PM

கூடுதல் தமிழ்ப் பள்ளிகளைத் தொடங்க மலேசிய பிரதமர் திட்டம்: உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்ற கவிஞர் கவிதாசன் பேட்டி

‘மலேசியாவில் ஏற்கெனவே 520 தமிழ்ப் பள்ளிகள் உள்ள நிலையில், கூடுதலாக தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன என்று கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்ற கவிஞர் கவிதாசன் தெரிவித்தார்.

மலேசியா பல்கலைக்கழகத்தில் அண்மையில் 4 நாட்கள் நடைபெற்ற 9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்ட 6 பேரில், கோவையைச் சேர்ந்த தமிழறிஞரும், கவிஞருமான கவிதாசனும் ஒருவர்.

அவர் ‘தி இந்து’-வுக்கு அளித்த பேட்டி:

மாநாட்டில் ஏறத்தாழ 20 நாடுகளில் இருந்து தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் 2,000 பேர் கலந்து கொண்டனர்.

தமிழகத்திலிருந்து, அரசு அலுவலர்களில் முனைவர் மூ.ராசாராம் ஐஏஎஸ் (தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்திப் பிரிவு), திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வி.எம்.முத்துக்குமார், தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் கா.மு.சேகர் ஆகியோரும், தமிழ் அறிஞர்கள் பிரிவில் முன்னாள் கல்வி அமைச்சர் வைகைசெல்வன், தமிழ் சொற்பொழிவாளர் மருது அழகுராஜ் மற்றும் நானும் கலந்து கொண்டோம்.

மாநாட்டை, மலேசிய பிரதமர் தத்தோ முகம்மது ரபிதுல் ரசாக் தொடக்கிவைத்துப் பேசும்போது, ‘மலேசிய மக்கள் தமிழையே போற்றுகிறார்கள்.

அதுவே முதன்மையான மொழியாக விளங்குவதால் இங்கே 520 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. இன்னமும் நிறைய தமிழ்ப் பள்ளிகளை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறோம். தமிழ் மொழி போற்றுதலுக்கும், பாராட்டுக்கும், பண்புக்கும் உரியது’ என்று குறிப்பிட்டார்.

மாநாட்டின் முக்கிய கருப்பொருளிலும், விவாதங்களிலும் ஊடகத்தமிழே அதிக இடம்பிடித்தது. கணினி, முகநூல், மின்னஞ்சல், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற நவீனத்தில், தமிழ் எழுத்துக்களை எளிதாகக் கொண்டுபோய் எப்படி சேர்ப்பது என்பதைப் பற்றியே ஆய்வுகள் இருந்தன. திருக்குறளில் மருத்துவக்கூறுகள், நவீனமயத்திலிருந்து தமிழ்ச் சொற்கள் அழிந்து போகாது காத்தல் ஆகியன குறித்தும் விவாதங்கள் நடைபெற்றன.

சகலத்திலும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான சொற்களை உருவாக்க முற்பட வேண்டும். வாட்ஸ் என்பதற்கு நிகழி என்றும், ஏடிஎம் என்பதற்கு காசகம் என்றும் சொற்களை உருவாக்கி புழக்கத்தில் விட்டால்தான் தமிழ் காப்பாற்றப்படும் என்றார் கவிதாசன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x