Last Updated : 15 Jun, 2016 04:40 PM

 

Published : 15 Jun 2016 04:40 PM
Last Updated : 15 Jun 2016 04:40 PM

குமரியில் கடந்த 5 ஆண்டுகளில் கால்நடைகள் எண்ணிக்கை பாதியாக குறைந்தது: விவசாயிகளை ஊக்குவிக்க புதிய திட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கால்நடைகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்துவிட்டது. விவசாயிகள், இளைஞர்களிடையே கறவை மாடு வளர்ப்பை ஊக்குவிக்க நபார்டு வங்கியுடன் இணைந்து பறக்கையில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டில் ஒன்றரை லட்சத்துக்கு மேல் இருந்த கறவை மாடுகளின் எண்ணிக்கை தற்போது பாதிக்கு மேல் குறைந்து விட்டது. தற்போது 70 ஆயிரத்துக்கும் குறைவான கறவை மாடுகளே உள்ளன. இதேபோல், காளை மாடு, ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துவிட்டன.

கால்நடைகளுக்கு கோமாரி, கழிச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குவதால் அவற்றை பராமரிப்பதற்கு விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். கால்நடைகளின் நோய் தொற்று மற்றும் இறப்பால் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக கால்நடை வளர்ப்பில் விவசாயிகளுக்கும், இளைஞர்களுக்கும் ஆர்வம் குறைந்து வருகிறது.

தற்போது கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க நபார்டு வங்கி நிதியுதவியுடன் அரசு சலுகையுடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக கிராமங்கள்தோறும் நாட்டுக்கோழி வளர்ப்பு, புறக்கடை கோழி வளர்ப்பில் ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

360 இளைஞர்கள்

அதேபோன்று கறவை மாடு வளர்ப்பை ஊக்குவிக்க, பறக்கையில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் களம் இறங்கியுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களிலும் 40 பேர் வீதம் மொத்தம் 360 படித்த இளைஞர்களுக்கு முதல் கட்டமாக கறவை மாடு வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கு மானியத்துடன் கூடிய கறவை மாடுகள் வழங்கி கால்நடை வளர்ப்பை ஊக்கப் படுத்துவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.

பயிற்சி முகாம்

இதுகுறித்து பறக்கை கால்நடை ஆராய்ச்சி மைய தலைவர் ரவிமுருகன் கூறும்போது, “கிராமப்புற பெண்களின் வருவா யைப் பெருக்கும் வகையில் நாட்டுக்கோழி வளர்ப்பு, புறக்கடை கோழி வளர்ப்பு போன்றவற்றை பல்கலைக்கழக மையத்தில் நடத்தி வருகிறோம்.

சமீபத்தில் வழங்கப்பட்ட பயிற்சியில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள 30 கிராமப்புறப் பெண்கள் பங்கேற்று பயன்பெற்றனர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் சான்றிதழ் மற்றும் தாது உப்பு கலவைகளை வழங்கினார்.

தற்போது குமரி மாவட்டத்தில் கால்நடைகள் வளர்ப்பை ஊக்கப் படுத்தும் வகையில் நபார்டு வங்கியுடன் இணைந்து படித்த இளைஞர்கள் 360 பேருக்கு கறவைமாடு வளர்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.

இன்று (ஜூன் 15-ம் தேதி) மேல்புறம் ஊராட்சி ஒன்றி யத்துக்கு உட்பட்ட மஞ்சா லுமூட்டில் இந்த பயிற்சி முகாம் தொடங்குகிறது.

குமரி மாவட்டத்தில் போதிய அளவில் கால்நடைகளுக்கான பசுந்தீவன ஆதாரங்களும், சிறந்த தட்பவெப்பமும் உள்ள நிலையில் கால்நடைகளை வளர்க்க இளை ஞர்கள் அதிகமானோர் முன்வர வேண்டும்” என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x