Last Updated : 15 Mar, 2017 08:19 AM

 

Published : 15 Mar 2017 08:19 AM
Last Updated : 15 Mar 2017 08:19 AM

குடிநீர் இணைப்பு இல்லாமல் 40 ஆண்டுகளாக தவிக்கும் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள்: காசிமேட்டில் சாக்கடை நிரம்பி வீட்டுக்குள் புகும் அவலம்

கடந்த 40 ஆண்டுகளாக குடிநீர் இணைப்பு இல்லாமல் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் தவிக்கின்றனர். இன்றுவரை லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் இருமுறை போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். அதன் பிறகு இத்தொகுதிக்கு ஸ்டார் அந்தஸ்து கிடைத்தது. முதல்வர் தொகுதி என்பதால் பல அரசுத் திட்டங்கள் இத்தொகுதியில் தொடங்கப்பட்டன. முடிக்கப்படாத பல பணிகள் முடிக்கப் பட்டன. இருந்தபோதிலும், இத்தொகுதி யின் பல இடங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் தவிப்பதைக் காண முடிகிறது.

ஆர்.கே.நகர் தொகுதி, கொருக்குப் பேட்டை அம்பேத்கர் நகரில் கடந்த 40 ஆண்டுகளாக வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு இல்லை. இன்றுவரை லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இப்பகுதியைச் சேர்ந்த டெய்லர் முனிவேல் கூறும்போது, “எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இன்றுவரை லாரி மூலம்தான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. லாரிகளில் எடுத்து வரப்படும் தண்ணீர் இங்கு ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள பெரிய தண்ணீர் தொட்டிகளில் நிரப்பப்படும். அதிலிருந்து பெண்கள் எடுத்துச் செல்வார்கள். தேர்தல் நடைபெறும் போதெல்லாம் வீட்டுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக வேட்பாளர்கள் கூறுவார்கள். தேர்தல் முடிந்த பிறகு யாரும் கண்டுகொள்வதில்லை” என்று வேதனையுடன் கூறினார்.

அனந்தநாயகி நகர் 2-வது தெருவைச் சேர்ந்த கலா கூறும்போது, “தேர்தலின்போது வீட்டுக்கு குடிநீர் குழாய் இணைப்பு தருவோம் என்று சொன்னார்கள். ஆனால், அதுபோல செய்யவில்லை. நான் 14 ஆண்டுகளாக குடத்தில் தண்ணீர் சுமக்கிறேன்” என்று ஆதங்கத்துடன் கூறினார்.

“குப்பைக்கும், கொசுக்களுக்கும் பஞ்சமில்லை. சுத்தம், சுகாதாரம் இல்லாததால் குழந்தைகளுக்கு மர்மக் காய்ச்சல் வருகிறது. மழை பெய்தாலோ, சாக்கடை நீர் நிரம்பி வழிந்தாலோ நிலைமை இன்னும் மோசமாகிவிடும். மழைக் காலங்களைத் தவிர மற்ற நேரங்களில் அதிகாரிகள் இந்தப் பக்கம் வருவதேயில்லை” என்கிறார் இல்லத்தரசி விஜயா.

“அனந்தநாயகி நகர் 2-வது குறுக்குத் தெருவில் சாலை போடச் சொல்லி 2 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த 40 ஆண்டுகளாக லாரியில்தான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

இப்போது ஒருநாள்விட்டு ஒருநாள் குடிநீர் கொடுக்கின்றனர். மழைநீர், கழிவுநீர் தேங்குவதால் மலேரியா, டெங்கு காய்ச்சலால் மக்கள் அவதிப்படுகின்றனர்” என்கிறார் தனியார் நிறுவன ஊழியர் பிரகாஷ்.

இங்குள்ள பெண்கள் காலிக் குடங்களுடன் குடிநீர் லாரி வருகைக்காக காத்திருப்பதைக் காண முடிகிறது. காசிமேடு புதுமனைக் குப்பத்தைச் சேர்ந்த பெண்களின் நிலையும் இதுதான். இங்குள்ள சிங்காரவேலர் நகர் தாழ்வான இடத்தில் அமைந்துள்ளது. சுமார் 2 ஆயிரம் பேர் வசிக்கும் இப்பகுதியில் அடிக்கடி சாக்கடை நிரம்பி வழிவது பெரும் பிரச்சினையாக இருக்கிறது.

“சாக்கடை நிரம்பி வழிந்து வீட்டுக்குள் புகுந்துவிடுவது கொடுமையிலும் கொடுமை. சாக்கடை நீரை பாத்திரத்தில் பிடித்து வெளியேற்றுவது அன்றாட வேலையாகிவிட்டது. சாக்கடை துர்நாற்றத்திலே சாப்பிடுகிறோம், தூங்குகிறோம்” என்கிறார் பென்னாய் மேரி.

இல்லத்தரசிகள் பத்மா, விஜயா கூறும்போது, “கோடை காலத்தில் சாக் கடை துர்நாற்றம் அதிகமாக இருக்கிறது. மழைக்காலத்தில் சாக்கடைக்குள்ளேயே வசிப்பது போல இருக்கும். இதைச் சரி செய்யும்படி அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கைவிடுத்தும் எதுவும் நடக்க வில்லை.

தேர்தல் வரும் போதெல்லாம் வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சிகள் தேர்தல் முடிந்த பிறகு இந்தப் பக்கமே வருவதில்லை. சாக்கடை வழிந்தோடும் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் ஓட்டுப் போடுவது குறித்து நாங்கள் மறுபரிசீலனை செய்வோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x