Published : 13 Oct 2016 04:34 PM
Last Updated : 13 Oct 2016 04:34 PM

காவிரி பிரச்சினை: விவசாய அமைப்புகளுடன் ஸ்டாலின் ஆலோசனை- அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வலியுறுத்தல்

காவிரி பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விவசாய அமைப்புகளுடன் எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், காங்கிரஸ் சார்பில் மாநில விவசாய அணித் தலைவர் பவன்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. உ.பலராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் துரைமாணிக்கம், குணசேகரன், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் கு.செல்லமுத்து, தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கங்கள் சார்பில் தெய்வசிகாமணி, விவசாய கூட்டு இயக்கத்தின் தலைவர் அய்யாகண்ணு, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் பாலு தீட்சிதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் வழங்கவில்லை. இதுவரை வெறும் 33.95 டி.எம்.சி. நீரை மட்டுமே வழங்கியுள்ளது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடியையும், முதல் முறையாக சம்பா சாகுபடியையும் இழந்துள்ளனர். 26 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதோடு, பல லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் வேலையிழந்து வேறிடம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தண்ணீர் திறக்காமல் அனைத்துக் கட்சி கூட்டம், அமைச்சரவைக் கூட்டம், சட்டப்பேரவைக் கூட்டம் ஆகியவற்றின் மூலம் கூட்டாட்சி தத்துவத்துக்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சியில் கர்நாடகம் ஈடுபட்டு வருகிறது. இதனைத் தடுத்து கர்நாடகத்துக்கு அறிவுரை கூற வேண்டிய மத்திய அரசும், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதியும் அம்மாநிலத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இதன் மூலம் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து வருகிறது.

காவிரி பிரச்சினையில் தமிழக மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள் என்பதை உணர்த்த தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவற்ற வேண்டும். அதன்பிறகு அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமரைச் சந்தித்து பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்த வேண்டும்.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசியல் காரணங்களுக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுத்து வருகிறது. இது கடும் கண்டனத்துக்குரியது. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகள் சட்டம் 1956 மத்திய அரசின் அதிகாரத்தை மிகத் தெளிவாக கூறியுள்ளது. இதன்படி அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணையானதாகும்.

எனவே, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் பங்கீட்டு ஒழுங்காற்று குழு ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x