Last Updated : 17 Oct, 2016 12:51 PM

 

Published : 17 Oct 2016 12:51 PM
Last Updated : 17 Oct 2016 12:51 PM

காவிரி பிரச்சினையில் உச்சகட்ட போராட்டங்கள் தொடரும்: ரயில் மறியலில் ஈடுபட்ட நல்லகண்ணு எச்சரிக்கை

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்த மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒருபகுதியாக விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற மும்பை ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்வோவில் - மும்பை ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் | படம்: இ.மணிகண்டன்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, "காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததே காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் தொடர் சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது.

கர்நாடகாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டே மத்திய அரசு காவிரி பிரச்சினையில் கர்நாடகத்துக்கு ஆதரவாக செயல்படுகிறது.

தமிழகத்தில் காவிரி நீர் உரிய அளவு கிடைக்காததால் 17 மாவட்டங்களில் வறட்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து வாடுகின்றனர்.

இந்நிலையில், தமிழர்கள் உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் உச்சகட்ட போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும்" என்றார்.

அனைத்துக் கட்சி கூட்டம் அவசியம்:

இதேபோல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

திருவாரூர் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x