Published : 05 Jul 2015 09:50 AM
Last Updated : 05 Jul 2015 09:50 AM

கலெக்டர் ஆகிறார் கார் டிரைவர் மகள்: சத்தியமங்கலம் வான்மதி சாதனை

ஐஏஎஸ் தேர்வில் 2 முறை நூலிழையில் வெற்றியை நழுவ விட்ட கார் டிரைவரின் மகள் 3-வது முயற்சியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தைச் சேர்ந்தவர் சென்னி யப்பன் என்கிற ராஜா. கார் டிரைவர். இவரது மனைவி சுப்புலட்சுமி. இந்த தம்பதியரின் மகள் வான்மதி (வயது 26), சத்தியமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு பண்ணாரி அம்மன் மகளிர் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேர்ந்தார். தனது தோழியின் தந்தையான கஸ்டம்ஸ் கண்காணிப்பாளரைப் பார்த்து தானும் ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற ஆசை வான்மதிக்கு துளிர்விட்டது. இதைத்தொடர்ந்து இவர் மேற்கொண்டு கோபி பிகேஆர் கலை கல்லூரியில் பகுதி நேரத்தில் எம்சிஏ படித்தார்.

இந்நிலையில் கல்பனா என்ற ரிசர்வ் வங்கி அதிகாரி மூலம் சென்னையில் தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் சேர்ந்தார். தீவிர பயிற்சிக்குப் பிறகு கடந்த 2011-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வெழுதினர். நேர்முகத்தேர்வு வரை சென்றவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனாலும், முயற்சியைக் கைவிடவில்லை.

2013-ம் ஆண்டு மீண்டும் தேர் வெழுதினார். முன்பு போலவே நேர்முகத்தேர்வு வரை சென்று நூலிழையில் வெற்றியை நழுவவிட் டார். இருப்பினும் வான்மதி மனம் தளரவில்லை. 3-வது முறையாக கடந்த ஆண்டு முயற்சி செய்தார். அவரது முயற்சிகளின் பலனாக, வெற்றிக்கனி கைகூடியுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 152-வது ரேங்க் எடுத்து வான்மதி வெற்றி பெற்றுள்ளார்.

இதற்கிடையே, கடந்த ஆண்டு வங்கி அதிகாரி தேர்வெழுதியதில் வெற்றிபெற்று தற்போது ஈரோடு நம்பியூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உதவி மேலாளராக அவர் பணியாற்றி வருகிறார். சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற்றது குறித்து “தி இந்து”விடம் வான்மதி கூறியதாவது:-

கல்லூரியில் படிக்கும்போது தான் ஐஏஎஸ் ஆகவேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது. படித்து முடித்துவிட்டு ஐஏஎஸ் தேர்வுக்காக படிக்கப் போகிறேன் என்றதும் மற்ற பெற்றோரைப் போலவே எனது பெற்றோரும் யோசித்தனர். அதற்கு பொருளாதாரப் பிரச் சினைதான் முக்கிய காரணம். என்னால் ஐஏஎஸ் அதிகாரி ஆக முடியுமா என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால், நான் முதல் முயற்சி யில் நேர்முகத்தேர்வு வரை சென்றதும் என் மீது அவர்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டது. எனது முயற்சிக்கு பக்கபலமாக இருந் தனர்.

ஐஏஎஸ் தேர்வைப் பொருத்த வரையில், அனைத்துப் பாடங் களைப் பற்றிய அடிப்படை அறிவு முக்கியம். நமது அறிவை அவ்வப்போது கூர்மைப்படுத்தி வர வேண்டும். கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் போதும், எந்த தடைகளையும் தாண்டிவிடலாம்.

இவ்வாறு வான்மதி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x