Published : 01 Jul 2015 09:45 AM
Last Updated : 01 Jul 2015 09:45 AM

கன்னியாகுமரியின் இயற்கை வளங்களை சுரண்டி கேரளாவுக்கு தாரைவார்க்கும் தமிழக குவாரிகள்

கேரளத்தை `கடவுளின் தேசம்’ என வர்ணிப்பார்கள். ஆனால் கேரள மாநிலத்தின் தேவைக்காக ஓசையே இன்றி கன்னியாகுமரி மாவட்டத்தின் இயற்கை வளங்கள் கபளீகரம் செய்யும் சம்பவம் இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி புதிதாக கல் குவாரிகளுக்கு அனுமதி பெற வேண்டுமானால், மாநில சுற்றுச் சூழல் குழுவிடம் அனுமதி பெற வேண்டும். இந்த நீதிமன்ற வழிகாட்டுதலை சுட்டிக் காட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதி பெற்று இயங்கி வந்த 28 குவாரிகளுக்கு அப்போதைய ஆட்சியர் நாகராஜன் தடை விதித்தார். இப்போது அவை மீண்டும் திறக்கப்பட்டு,பாறைகள் உடைக்கப்பட்டு கற்களாக, ஜல்லிகளாக, எம்சாண்ட் மணலாக கேரளாவுக்கு செல்கின்றன.

மணலாக கேரளா பயணம்

இதுகுறித்து வழக்கறிஞர் ஹோமர்லால் கூறும்போது, `கல்குவாரி செயல்படும் சில பகுதிகள் தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டம், சூழியல் உணர்ச்சிமிகு மண்டலம் என அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளின் கீழ் வருகின்றன. ஆனால் சர்வசாதாரணமாக அந்த பகுதிகளில் குவாரிகளுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. அதிக வெடிமருந்து பயன்படுத்தி பாறைகள் உடைக்கப்படுகின்றன. வன விலங்குகளும், விளை நிலங்களும் நாசமாகின்றன” என்றார்.

வரலாற்று சின்னம் மாயம்

மத்திய அரசின் ஓய்வுபெற்ற முதுநிலை விஞ்ஞானி லால் மோகன், ` குவாரிகள் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். ஆனால் இப்போது அந்த நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. மருங்கூர் பகுதியில் சூட்டு பொத்தை குன்றின் மேல் இருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பிரதம தளபதி டிலனாய் அமைத்த வரலாற்று சின்னமான காட்சி கோபுரம் குவாரிகளால் இப்போது காணாமல் போய் விட்டது’ என்றார்.

கதி கலங்கும் குடியிருப்புவாசிகள்

1959-ம் வருடம் தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளின்படி கல்குவாரி அமைக்க குடியிருப்பு பகுதிகளில் இருந்து 300 மீட்டர் தொலைவுக்கு அப்பால் மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். ஆனால் பைங்குளம் கிராமத்தில் மண்டத்தட்டுவிளை பகுதியில் வீடுகளுக்கும் குவாரிக்கும் 100 மீட்டர் தான் தூரம் இருக்கும். இது சம்பந்தமாக ஆர்.டி.ஓ நேரில் ஆய்வு செய்து குவாரிக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் மீண்டும் இங்கு பாறைகள் உடைக்கப்படுவதாக பரக்காணி பகுதியை சேர்ந்த டெதீஸ் கூறினார்.

பலமிழக்கும் கால்வாய்கள்

கிரியேட் அமைப்பைச் சேர்ந்த பொன்னம்பலம் கூறும்போது, `மாவட்டத்தின் முக்கிய பாசனக் கால்வாய்கள் மலைக் குன்றுகளின் அடிவாரங்கள் வழியாகவே செல்கின்றன. இந்த கால்வாய்களை ஒட்டி மலைச் சரிவுகளில் மண் எடுக்கப்படுவதால் பாசனக் கால்வாய்களின் கரைகள் பலமிழக்கின்றன. கல்குவாரியின் அருகில் உள்ள மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது. ஒலி மாசுபட்டால் குவாரியை சுற்றியுள்ள பலரும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.

கட்டணத்தில் மோசடி

கல்குவாரிகளில் பாறைகளை உடைப்பதற்கு மாவட்ட கனிமவளத் துறையிடம் இருந்து அனுமதி பாஸ் பெற வேண்டும். இதில் 100 கன அடி பாறையை உடைத்து செல்ல ரூ. 135 மற்றும் டிசிஎஸ் வரி என்ற விகிதத்தில் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் குவாரி தரப்பினர் குறைவான அளவுக்கு பாறையை உடைக்க அனுமதி பெற்று விட்டு திருட்டுத் தனமாக அதிக அளவில் பாறைகளை உடைக் கின்றனர். பாறைகளை உடைத்து, பொடியாக்கி தூய்மையான தண்ணீரில் கழுவி செயற்கை மணல் தயார் செய்கின்றனர். இதற்காக அருகிலுள்ள நீர் ஆதாரங்களில் தண்ணீர் எடுக்கின்றனர்.

நீர் ஆதாரங்களில் இருந்து 50 மீட்டர் தொலை வில்தான் கிணறு வெட்டப்பட வேண்டும். ஆனால் அந்த விதிகளை புறந்தள்ளி விட்டு நீர் ஆதாரங்களின் அருகிலேயே கிணறு வெட் டப்பட்டு தொழிற் கூடங்களுக்கு செல்கிறது’ என்றார்.

ஆட்சியர் சொல்வது என்ன?

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் கூறும் போது,’’சட்டப்படி மட்டுமே குவாரிகளை மீண்டும் திறந்துள்ளோம். முறை யான அனுமதி பெற்று எம்சாண்ட் மணலை கேரளாவுக்கு அனுப்புவதில் தடை எதுவும் இல்லை. இது குறித்து கூடுதல் தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்’ என்றார்.

கனிம வளத்துறை உதவி இயக்குநர் செல்வசேகர் கூறும்போது `மாவட்டத்தில் 32 குவாரிகள் இயங்கி வருகின்றன. மலையிடு பாதுகாப்பு குழுமத்தின் கீழ் வரும் குவாரிகள், குழுமத்திடம் இருந்து தடையில்லா சான்று பெற்றுள்ளனர். மாம்பழத்துறையாறு அணை அருகே இயங்கி வந்த குவாரியில் உரிய விதிகள் பின்பற்றப்பட்டுள்ளன. குவாரிகள் சுற்றுசூழல் துறையிடம் அனுமதி பெறவில்லை என்றுதான் ரத்து செய்யப்பட்டது. ஏப்ரல் மாதம் வந்த அரசாணையின்படி ஏற்கெனவே இயங்கி வந்த குவாரிகள் ஆறு மாதங்களுக்குள் தடையில்லா சான்று வாங்க வேண்டும் என்றும் அதுவரை குவாரிகள் செயல்படலாம் என்றும், அதன்பின் தடையில்லா சான்று கொடுத்த குவாரிகள் மட்டுமே இயங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் அக்டோபர் வரை இந்த குவாரிகள் செயல்படலாம். இதுபோக சில குவாரிகள் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றும் இயங்குகின்றன.

மேற்கு தொடர்ச்சி மலை, சூழியல் உணர்ச்சி மண்டலம், சரணாலயப் பகுதிகள் ஆகியவற்றுக்கு இதுவரை எல்லை நிர்ணயம் செய்யப்படவில்லை. சுருளகோடு கிராமத்தில் இயங்கும் குவாரி மட்டும் சூழியல் உணர்ச்சிமிகு மண்டல பகுதியின் கீழ் வருகிறது. அங்கு குவாரி நடத்த நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளனர்.

பரக்காணி பகுதியில் 2002-ல் இருந்தே குவாரி இயங்கி வருகிறது. அங்கு 300 மீட்டருக்குள் இரண்டு வீடுகள் 2012-ல் தான் கட்டியுள்ளனர். எம்சாண்ட் மணலை அண்டை மாநிலங்களுக்கு முத்திரை பெற்று அனுப்ப அரசு ஆணை உள்ளது. குவாரிகளில் இருந்து அரசுக்கு மாதம் ரூ. 70 லட்சம் வருமானம் வருகிறது. இந்த பணமும் முழுக்க,முழுக்க சம்பந்தப் பட்ட ஊராட்சிகளுக்கே செலவிடப்பட்டு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது’ என்றார்.

வளர்ச்சிப் பணிகள் அவசியமானது தான், அது இயற்கை வளங்களை பாழ்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x