Published : 07 May 2015 02:50 PM
Last Updated : 07 May 2015 02:50 PM

கண்டுகொள்ளாத ஸ்டாலினுக்கு தகுதிப் பட்டியல் உடன் அன்புமணி 3-வது கடிதம்

தனது கடிதங்களை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து புறக்கணித்து வந்தாலும் விடாப்பிடியாக மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் மூன்றாவது முறை கடிதம் எழுதியுள்ளார்.

முன்னதாக, கடந்த வாரம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதினார். அக் கடிதத்தை சுட்டிக்காட்டி, பாமக எம்.பி. அன்புமணி 'தமிழகத்தை சீரழித்ததில் திமுகவுக்கு பங்கில்லையா?' என கேள்வி எழுப்பி திறந்த மடல் ஒன்றை எழுதினார்.

அன்புமணியின் கடிதத்துக்கு, திமுக முன்னாள் எம்.பி. இரா.தாமரைச்செல்வன் சார்பில் பதில் அனுப்பப்பட்டது. பாமகவின் கூட்டணி விவகாரங்கள் குறித்து அதில் சாடப்பட்டிருந்தது.

அந்த பதிலுக்கு மீண்டும் பதில் எழுதிய அன்புமணி, மு.க.ஸ்டாலினை ஒரே மேடையில் விவாதத்துக்கு வருமாறு சவால் விடுத்து கடிதம் எழுதினார்.

இந்நிலையில், நேற்று கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மு.க.ஸ்டாலின், "தகுதியான நபர்களுக்கு மட்டுமே பதில் சொல்வேன். மேலும் தேவையில்லாத அறிக்கைகளை, கடிதங்களை நான் பார்ப்பதும் இல்லை, படிப்பதும் இல்லை" என்றார்.

இதனைத் தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) அன்புமணி, ஸ்டாலினுக்கு 3-வது மடலை அனுப்பியுள்ளார்.

அதன் விவரம்:

தமிழ்நாட்டை சீரழித்ததில் தி.மு.க.வுக்கு உள்ள பங்கு குறித்து நான் எழுதிய கடிதத்துக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு தி.மு.க. ஆற்றியதாகக் கூறப்படும் பணிகள் குறித்து விவாதம் நடத்தத் தயாரா? என்ற எனது இரண்டாவது கடிதத்துக்கும் இதுவரை தங்களிடமிருந்து பதில் வரவில்லை.

ஆனால், சென்னையில் நேற்று நீங்கள் செய்தியாளர்களிடம் பேசும் போது, "தகுதியில்லாதவர்களுடன் விவாதிக்க மாட்டேன். தேவையில்லாத கடிதங்களையெல்லாம் படிப்பதில்லை" என்று கூறியிருக்கிறீர்கள்.

ஏற்கனவே கூறியதைப் போல நான் உங்களைப் போன்றவன் இல்லை. தகுதியிருந்தாலும், இல்லாவிட்டாலும் அனைவரையும் மதிக்கத் தெரிந்தவன். அந்த நாகரீகத்தால் தான் உங்களுக்கு மூன்றாவது முறையாக இப்போது கடிதம் எழுதுகிறேன்.

தகுதியுள்ளவர்களுடன் மட்டும் தான் விவாதம் நடத்துவேன் என்று நீங்கள் கூறியிருந்ததால் எனது தகுதிகள் என்னென்ன? என்பதை தங்களுக்கு தெரிவிக்கவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

இதோ எனது தகுதிகள்...

1) பெயர்: மருத்துவர் அன்புமணி இராமதாஸ்

2) வயது: 46

3) கல்வித் தகுதி: எம்.பி.பி.எஸ்., சென்னை மருத்துவக் கல்லூரி. (பொதுப்போட்டியில் (Open Competition) சேர்ந்தேன். உங்கள் துதிபாடிகள் கூறுவதைப் போல திராவிட இயக்கத்தொட்டிலில் வளர்ந்து வாய்ப்பு பெறவில்லை) * 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் பழைய தென்னாற்காடு மாவட்ட அளவில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன்.

4) பணிகளும் பிற சேவைகளும்:

* நல்லாளம் கூட்டு சாலை சந்திப்பு கிராமத்தில் ஒன்றரை ஆண்டுகள் மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை.

* படிக்கும் காலத்தில் கால்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாநில அளவில் பதக்கம் வென்றேன்.

* பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக 7 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன்.

* 25 லட்சம் மரக்கன்றுகளை நட்டது, 1000 ஏரி மற்றும் குளங்களை தூர்வாரியது, 50 தடுப்பணைகளை கட்டியது ஆகியவை பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் என்ற முறையில் நான் ஆற்றிய பணிகளில் சிலவாகும்.

* சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளேன்.

* பசுமைத் தாயகம் அமைப்புக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் அங்கீகாரம் (United Nations Eco sot) பெற்றுத் தந்தேன்.

*பசுமைத் தாயகம் அமைப்பை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் (United Nations Human Rights Council)உறுப்பினராக நியமிக்க வைத்தேன்.

* தமிழ்நாடு இறகு பந்தாட்ட சங்கத்தின் தலைவராக (President, Tamilnadu Badminton Association) பணியாற்றி வருகிறேன்.

5) பங்கேற்ற சர்வதேச நிகழ்ச்சிகள்:

* பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளேன். 2000&ஆவது ஆண்டில் ஜெர்மனியின் ஹானோவர் நகரில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்றேன்.

* 2002 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற்ற புவி உச்சி (Global Earth Summit 2002)மாநாட்டில் கலந்து கொண்டேன்.

* 2003 ஆம் ஆண்டில் ஜப்பானின் கியோட்டா நகரில் நடைபெற்ற உலக நீர் மாநாட்டில் (World Water Conference) பங்கேற்றேன்.

* 2012 ஆம் ஆண்டில் டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற புவி உச்சி (Global Earth Summit 2012) மாநாட்டில் பங்கேற்றேன்.

* 2003&ஆம் ஆண்டில் லண்டனில் உள்ள லண்டன் பொருளாதாரப் பள்ளியில் (London School of Economics -LSE) Introductory macroeconomics படித்தேன்.

* 2013 ஆம் ஆண்டில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்று இலங்கை அரசு மீது இனப்படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினேன்.

6) மத்திய அமைச்சராக படைத்த சாதனைகள்:

* 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை மத்திய சுகாதார அமைச்சராக பணியாற்றினேன்.

* மத்திய அமைச்சராக இருந்த 5 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான மாநாடுகளுக்கு தலைமையேற்றும், பங்கேற்றும் உள்ளேன்.

* இந்தியாவில் முதன்முறையாக 108 அவசர ஊர்தித் திட்டத்தை (108 National Ambulance Service) தொடங்கினேன்.

* தேசிய ஊரக சுகாதார இயக்கத்தைத் (National Rural Health Mission) தொடங்கி கிராமப்புற சுகாதாரத்தில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினேன்.

* புகையிலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (Tobacco Control Measures) உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.

* நீரிழிவு நோய், இதய நோய்கள் மற்றும் பக்கவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தேசியத் திட்டம் (National Program for Control of Diabetes Cardiovascular disease and Stroke) கொண்டு வந்தேன்.

* மருத்துவ ஆராய்ச்சித் துறையை (Department of Health Research - DHR) புதிதாக ஏற்படுத்தினேன்.

* அயோடின் சத்து சேர்க்கப்பட்ட உப்பை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டது.

* பாரம்பரிய அறிவுசார் மின்னணு நூலகத்தை (Traditional Knowledge Digital Library) ஏற்படுத்தினேன்.

* தேசிய நோய் கண்காணிப்பு அமைப்பை (National Institute of Communicable Diseases) உருவாக்கினேன்.

* இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தை (Food Safety and Standards Authority of India) ஏற்படுத்தினேன்.

* தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ மையத்தை (National Institute of Siddha)) அமைத்தேன்.

* சென்னையில் தேசிய முதியோர் நல மையத்தை (National Institute of Aging) அமைக்கும் திட்டத்தை உருவாக்கினேன்.

* தானாக செயலிழக்கும் சிறிஞ்சை (Auto disable syringe)) அறிமுகப்படுத்தினேன்.

* இந்திய பொது சுகாதாரத்துறை அறக்கட்டளையை (Public Health Foundation of India) ஏற்படுத்தினேன்.

* புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை தன்னாட்சி அமைப்பாக (JIPMER Puducherry Act 2008) மாற்றினேன்.

* 2006 ஆம் ஆண்டு மே மாதம் 22 முதல் 27 வரை ஜெனீவாவில் 192 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் பங்கேற்ற ஐ.நா. அங்கீகாரம் பெற்ற உலக சுகாதார அவைக் கூட்டத்திற்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அக்கூட்டத்தை தலைமையேற்று வழி நடத்தினேன்.

7) வென்ற விருதுகள்

* அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் லூதர் எல்.டெர்ரி விருது Luther L. Terry Award).

* உலக சுகாதார நிறுவனத் தலைவரின் சிறப்பு விருது (World Health Organisation (WHO) Director General’s Special Award for Tobacco Control))

* உலக சுகாதார நிறுவனத் தலைவரின் சிறந்த தலைமைப் பண்புக்கான விருது (World Health Organisation (WHO) Director General’s Special Award for Leadership))

* உலக ரோட்டரி சங்கத்தின் போலியோ ஒழிப்பு சாதனையாளர் விருது (Rotary International Polio Eradication Champion award)

* சென்னை ரோட்டரி சங்கத்தின் For the sake of Honourவிருது.

* இந்தியாவில் போலியோ நோய் ஒழிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுத்ததற்காக 2014 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருது வழங்கிப் பாராட்டினார்.

8) தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்கள்

* தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின்கீழ் ரூ.15,000 கோடி மதிப்புள்ளத் திட்டங்கள்.

* சென்னையில் ரூ. 100 கோடியில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அதி உயர் சிறப்பு மையம்.

* சேலத்தில் ரூ.139 கோடியில் எய்ம்சுக்கு இணையான அதி உயர் சிறப்பு மருத்துவமனை.

* மதுரையில் ரூ.150 கோடியில் எய்ம்சுக்கு இணையான புதிய அதி உயர் சிறப்பு மருத்துவமனை

* சென்னையில் ரூ.250 கோடியில் பிளாஸ்மா பிரிப்பு மையம்

* சென்னையில் ரூ.50 கோடியில் மெட்ரோ ரத்த வங்கி

* மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையை மண்டல புற்றுநோய் மையமாக அறிவித்தது.

* காஞ்சிபுரத்தில் ரூ.45 கோடியில் மண்டல புற்றுநோய் மையம்

* செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்திப் பூங்கா

* ஸ்டான்லி மருத்துவமனையில் குருத்தணு ஆய்வகம்

* தமிழக நெடுஞ்சாலைகளில் மதுரை, தாம்பரம், வேலூர்,கன்னியாகுமரி உள்ளிட்ட 10 இடங்களில் விபத்துக்காய சிகிச்சை மையங்களை அமைத்தேன்.

9) தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினர்:

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கட்டவிழ்த்துவிட்ட பண பலத்தை மீறி மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றேன்.

எனக்கு இப்போது 46 வயதாகிறது. இந்த வயதில் நான் வளர்த்துக் கொண்டுள்ள தகுதிகளை இங்கு பட்டியலிட்டிருக்கிறேன்.

நீங்கள் என்னுடன் விவாதத்திற்கு வர வேண்டுமானால் எனக்கு வேறு என்ன தகுதி வேண்டும் என்பதை சொல்லுங்கள். இதற்கெல்லாம் மேலாக தமிழக மக்கள் அறிந்து கொள்ள வசதியாக உங்களுடைய தகுதி என்ன? என்பதையும் தெரிவிக்க வேண்டும். 50 ஆண்டு கால தமிழக நிலவரம் குறித்து உங்களுடன் ஒரே மேடையில் நேருக்குநேர் விவாதம் நடத்த உங்களுக்கு எனது அன்பான அழைப்பு மற்றும் வேண்டுகோள்.

இவ்வாறு அன்புமணி அக்கடிதத்தில் தனது தகுதிகளை பட்டியிலிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x