Published : 08 May 2015 08:41 AM
Last Updated : 08 May 2015 08:41 AM

கணிதத்தில் 9,710 பேர் 200-க்கு 200: பொறியியல் படிப்புக்கான கட் ஆஃப் மதிப்பெண் அதிகரிக்கும்

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் கணிதத்தில் 9,710 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றிருப் பதால், பொறியியல் படிப்புக்கான கட் ஆஃப் ஒன்றரை மதிப்பென் வரை அதிகரிக்கும் என்று கல்வியாளர்கள் கணிக்கிறார்கள்.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் பிஇ, பிடெக் படிப்புகளில் சேரவே விரும்புகிறார்கள். தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன என்ற கருத்து ஒருபுறம் நிலவினாலும், பொறியியல் படிப்பில் சேரும் எண்ணம் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் குறைந்தபாடில்லை.

விருப்பமான கல்லூரி, விருப் பமான பாடப்பிரிவு கிடைக்கிறதா என்பதுதான் பிரச்சினையே தவிர, இடம் கிடைப்பது எளிதா கவே உள்ளது. பொறியியல் படிப்பில் இருக்கும் அதிகப் படியான இடங்கள்தான் இதற்கு காரணம். கடந்த ஆண்டு பொது கலந்தாய்வுக்கு 2 லட்சத்து 11 ஆயிரம் இடங்கள் வந்ததாகவும் இந்த ஆண்டு புதிய கல்லூரிகளின் வருகையால் இடங்களின் எண்ணிக்கை சற்று அதிகரிக்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எம்.ராஜாராம் கூறியுள்ளார்.

பொறியியல் படிப்பைப் பொருத்தவரையில், கட் ஆப் மதிப்பெண்ணை கணக்கிடுவதற்கு கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய 3 பாடங்களில் பெறும் மதிப்பெண்தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதிலும், மொத்தமுள்ள 200 மதிப்பெண்ணில் கணித மதிப்பெண்ணின் பங்கு 50 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு கணித தேர்வில் 3,882 பேர் 200-க்கு 200 மதிப்பெண் எடுத்த நிலையில், இந்த ஆண்டு 9,710 பேர் 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். 199, 198 197, 196 மதிப்பெண் எடுத்தவர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருப்பார்கள்.

அதே நேரத்தில் இந்த முறை இயற்பியலில் வெறும் 124 பேர் மட்டுமே 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 2,710 பேர் இயற்பியலில் முழு மதிப்பெண் எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கணிதத்தில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றிருப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு இரு மடங்குக்கு மேல் அதிகரித்திருப்பதால் பொறியியல் படிப்புக்கான கட் ஆஃப் 1 முதல் 1.5 மதிப்பெண் வரை உயரும் என்று கல்வியாளர்கள் கணித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஈரோட்டைச் சேர்ந்த கல்வி ஆலோசகரான பேராசிரியர் மூர்த்தி செல்வகு மரனிடம் கேட்டபோது, “இந்த முறை கணிதத்தில் மதிப்பெண் அளவு 42 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் இயற்பியல், வேதியியல் பாடங்களில் 33 சதவீதம் வரை குறைந்திருக்கிறது. இருப்பினும் கணிதத்தில் மதிப்பெண் அளவு உயர்ந்துள்ளதால் பொறியியல் படிப்புக்கு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 1 முதல் 1.5 வரை கட் ஆஃப் மதிப்பெண் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கட் ஆஃப் 195 வரையில் ஒரு மதிப்பெண்ணும், 185 வரையில் 1.5 மதிப்பெண்ணும் அதிகரிக்கலாம். மேலும், கடந்த ஆண்டு டாப் கட் ஆப் மதிப்பெண் களில் ஒரே மதிப்பெண்ணில் ஏறத்தாழ 2,100 பேர் இருந்தனர். இந்த முறை கூடுதலாக 700 பேர் இடம்பெறலாம்” என்று கூறினார்.

இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண் விவரங்களை கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகள் வாரியாக மாணவர்களின் வசதிக்காக அண்ணா பல்கலைக்கழகம் நேற்று இரவு இணையதளத்தில் (www.annauniv.edu) வெளியிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x