Last Updated : 02 Aug, 2016 06:52 AM

 

Published : 02 Aug 2016 06:52 AM
Last Updated : 02 Aug 2016 06:52 AM

கடும் இடி, மின்னல், புயலை ஏற்படுத்தக்கூடிய ‘குமுலோநிம்பஸ்’ ராட்சத மேகக் கூட்டத்தில் சிக்கியதா விமானம்?- மாயமான விமானத்தில் பலமுறை சென்ற ராணுவ அதிகாரி புதிய தகவல்

விமானம் மாயமானதற்கு ‘குமுலோநிம்பஸ்’ ராட்சத மேகக்கூட்டம் காரணமாக இருக்கலாம் என்று, இதே விமானத்தில் ஏற்கெனவே பலமுறை சென்றுவந்த ராணுவ அதிகாரி கூறியுள்ளார்.

சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானுக்கு கடந்த 22-ம் தேதி 29 பேருடன் புறப்பட்டுச் சென்ற ஏஎன்-32 ரக ராணுவ சரக்கு விமானம் நடுவானில் மாயமானது. வங்கக்கடலில் போர்க் கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இணைந்து 10 நாட்களாக தேடியும், விமானம் குறித்து எந்த தடயமும் கிடைக்கவில்லை. இதையடுத்து, கடலின் மேற்பரப்பில் விமானத்தை தேடும் பணி நேற்றுடன் நிறுத்தப்பட்டது.

கடலுக்கு அடியில் ஆழமான பகுதிக்குள் விமானம் கிடக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர். எனவே, கடலின் ஆழத்தில் தேடும் திறன் படைத்த ‘சாகர்நதி’, ‘சமுத்ரா ரத்னாகர்’ என்ற அதிநவீன கப்பல்களும், ஒரு நீர்மூழ்கிக் கப்பலும் கடலுக்கு அடியில் விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், காணாமல் போயிருக்கும் ஏஎன்-32 விமானத்தில் ஏற்கெனவே பலமுறை பயணம் செய்த ராணுவ அதிகாரி ஒருவர் இதுபற்றி ‘தி இந்து’விடம் கூறியதாவது:

பாதுகாப்பான உணர்வை தரும்

பணி நிமித்தமாக பல்வேறு இடங்களுக்கு இதே ஏஎன்-32 விமானத்தில் சென்றிருக்கிறேன். ராணுவத்தினரின் பொருட்களைக் கொண்டு செல்ல இந்த விமானம் பயன்படுத்தப்படும். விமானத்தின் இரு பக்கத்திலும் ‘பெஞ்ச்’ போன்ற நீளமான இருக்கைகள் இருக்கும். அதில் உட்கார்ந்துகொண்டு, அருகே இருக்கும் கயிறு கைப்பிடிகளை பிடித்துக்கொள்ள வேண்டும்.

இந்த விமானத்துக்குள் ஏறினாலே ஒரு பாதுகாப்பான உணர்வு ஏற்படும். அவ்வளவு நல்ல விமானம்! 2004-ம் ஆண்டு சுனாமி பேரழிவு ஏற்பட்டபோது, மீட்பு, நிவாரணப் பணிகளுக்கு இந்த விமானம் பேருதவியாக இருந்தது.

கோவை - தாம்பரம் - அந்தமான் இடையேதான் இந்த விமானம் தொடர்ச்சி யாக சென்று வந்தது. அதிக எடையிலான சரக்குகளை ஏற்றிச் செல்லக்கூடியது என்பதால், மற்ற விமானங்களைவிட மெதுவாகவே செல்லும்.

கோளாறுக்கு வாய்ப்பு இல்லை

பொதுவாகவே, ஒவ்வொரு முறையும் ராணுவ விமானங்களை இயக்கும் முன்பு பல்வேறு சோதனைகள் செய்யப்படும். அதுவும் சென்னையில் இருந்து அந்தமான் செல்ல 720 கடல் மைல்கள் தூரம் கடல் மேலேயே பறந்து செல்ல வேண்டும். விமானத்தில் கோளாறு ஏற்பட்டால்கூட, வேறு எங்கும் தரையிறக்க முடியாது என்பதால், புறப்படுவதற்கு முன்பு சோதனைகள் கடுமையாக இருக்கும். பலகட்ட சோதனைகளுக்கு பிறகே விமானம் பறக்க அனுமதி கொடுக்கப்படும். அதனால், கோளாறு ஏற்பட வாய்ப்பு இல்லை.

செயல்படாத இஎல்டி

சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போன டார்னியர் விமானத்திலும், தற் போது மாயமான ஏஎன்-32 விமானத்திலும் ‘இஎல்டி’ (எமர்ஜென்சி லொக்கேட்டர் டிரான்ஸ்மிட்டர்) செயல்படவில்லை. அவசர காலங்களில் இந்த இஎல்டி கருவியில் இருந்து சத்தமும், சிக்னலும் வெளியேறும். விமானத்தை தேடி வருபவர்கள், இதில் இருந்து வரும் சிக்னல்களை கண்டுபிடித்துதான், அது இருக்கும் இடத்துக்கு வருவார்கள். விபத்துக்குள்ளான 2 விமானங்களிலும் இஎல்டி ஏன் செயல்படவில்லை என்பது தெரியவில்லை. மற்ற விமானங்களில் இஎல்டி செல்பாடுகளை சரிசெய்து வைக்குமாறு ராணுவத்துக்கு மத்திய அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.

மாயமான 2 விமானங்களிலும் விமானி, துணை விமானி, நேவிகேட்டர் (வழி காட்டுபவர்) என 3 பேர் இருந்துள்ளனர். விமானத்தை இயக்க 3 பேர் இருந்தும் விபத்து ஏற்பட்டிருக்கிறது. விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இது ராணுவத்தினரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

குமுலோநிம்பஸ் மேகம்

விமானத்தில் செல்பவர்கள் மேகக் கூட்டங்களை அருகில் பார்த்திருக்கலாம். ஆனால், எல்லா மேகக் கூட்டங்களும் ஒரேமாதிரி இருப்பது இல்லை. இவற்றில் சில நேரம் ‘குமுலோநிம்பஸ்’ (Cumulonimbus) மேகக் கூட்டமும் இருக்க லாம். இந்த வகை மேகக் கூட்டம், விமானப் பயணத்தை நடுங்க வைக்கக் கூடியது. ‘காலிபிளவர்’ அல்லது வெண் புகைமண்டலம் போல திரண்டிருப்பது தான் குமுலோநிம்பஸ் மேகக்கூட்டம். ராட்சத அளவில் சில மைல் தூரம் வரைகூட நீளக் கூடிய இந்த மேகங்கள், கடுமை யான இடி, மின்னல், புயல் காற்றுக்கு வழி வகுக்கும் சக்தி கொண்டவை. வானுக்கும் பூமிக்குமாக நகரும் ‘டொர்னாடோ’ சுழற்காற்றையும் உருவாக்க வல்லவை.

700 முதல் 10,000 அடி வரை வெவ் வேறு உயரங்களில் உருவாகக்கூடிய இந்த குமுலோநிம்பஸ் மேகக் கூட்டத் தைக் கடக்கும்போது. விமானத்தின் எலெக்ட்ரானிக் கருவிகள் திடீரென பாதிக்கப்பட்டு, விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. டார்னியர், ஏஎன்-32 விமானங் கள்கூட இந்த மேகக்கூட்டத்தில் சிக்கி யிருக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x